ஈரமாவு அரவைப்பொறி

மின்னாற்றலால் இயங்கும் மேசைமேலான ஈரமாவு அரவைப்பொறி

ஈரமாவு அரவைப்பொறி, உணவு தானியங்களை நீருடன் கலந்து மின்னாற்றலினால் அரைக்கும் ஓர் அரவைப்பொறி. இவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பரவலாக வணிக மற்றும் வீட்டு சமையலறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்திய சமையலில் அரிசி, பருப்பு இவைகளை கலந்த மாவு, ஈரமாவு,தயாரிக்க மிகவும் பிரபலமானது.

மின்னாற்றலில் இயங்கும் பொறிகளுக்கு முன்னிருந்தே புழக்கத்தில் இருக்கும் ஆட்டுக்கல்

பழங்காலத்தில் பெரும் கல்லின் நடுவே குழியொன்று இருக்கும். இதனுள் ஓர் உருளைவடிவத்தில் மரத்திலான கைப்பிடியுடன் கல் ஒன்று பொருந்தியிருக்கும். குழியுடைய கல் ஆட்டாங்கல் என்றும் உருளைக்கல் குழவி என்றும் அழைக்கப்பட்டது. தானிய,பருப்பு கலவை இக்குழிக்குள் போடப்பட்டு உருளைக்கல்லை கைகளால் சுழற்றி அரைக்கப்படும். இவ்வாறு அரைக்கப்பட்ட மாவு இட்லி,தோசை,சேவை, வடை போன்றவை தயாரிக்கப் பயன்படும்.இவ்வாறு அரைப்பதற்கு மிகுந்த மனிதத்திறன் தேவைப்பட்டது.

மின்னாற்றலைப் பயன்படுத்தி அரைக்கும் முறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்மாதிரிகளை வடிவமைப்பதில் முன்னோடிகளாக இருந்த கோவை தொழிலதிபர்கள் இதனைப் பயன்படுத்தி ஈரமாவு அரவைப்பொறி தொழிலை கைப்பற்றினர். விசைப்பொறி தயாரிப்பில் முன்னணியில் இருந்தவர்கள் இத்துறையில் எளிதில் முன்னேற்றம் கண்டனர். துவக்கத்தில் பழைய ஆட்டாங்கல்லைப் போன்றே மேல் உருளை சுழன்ற அரவைப்பொறிகளை அடுத்து அடிக்கல் சுழலும் அரவைப்பொறிகளும் தயாரிக்கப்பட்டன. சாய்ந்து ஈரமாவை கொட்டுகின்ற சாய் அரவைப்பொறிகளும் வெளிவந்தன. முதலில் வணிக உணவுவிடுதிகளில் இடம் பிடித்த அரவைப்பொறிகள் இன்று இருவர் வாழும் சிறுகுடும்பத்திற்கும் ஏற்றதாக மேசைமேலான அரவைப்பொறிகள் வரை வளர்ந்துள்ளன.

இந்த அரவைப்பொறிகளில் இன்னமும் அரைக்க கற்களே பயன்படுத்தப்படுகின்றன. கிரானைட் வகை கற்கள் பயனாகின்றன. பழைய ஆட்டாங்கற்களின் பரப்புகள் அடிக்கடி பொளிக்கப்பட வேண்டும். தற்கால அரவைப்பொறி கற்கள் நீண்டநாட்கள் பொளிக்க வேண்டியத் தேவையின்றி உயர்தரத்தில் உள்ளன.

கோயம்புத்தூர் வட்டாரத்தில் கிரானைட் கற்கள் அதிகம் கிடைப்பதால் ஈரமாவு அரவைப்பொறி உற்பத்தி இப்பகுதியில் அதிகம் நடைபெறுகிறது. 2006 மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கோயம்புத்தூர் ஈரமாவு அரவைப்பொறி ஆனது தமிழ்நாட்டின் புவியியல் சார்ந்த குறியீடாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. [1]

சான்றுகள்

[தொகு]
  1. Registration Details of G.I Applications 2003 - 18 November 2013 (PDF). Geographical Indications Registry (Report). Intellectual Property Office, Chennai. பார்க்கப்பட்ட நாள் 28 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரமாவு_அரவைப்பொறி&oldid=2160303" இலிருந்து மீள்விக்கப்பட்டது