இரா. ஜெயராமன்
இரா. ஜெயராமன் (நெல் செயராமன்; 1968-2018) ஒரு விவசாயி, பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர். நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.[1] நம்மாழ்வாரின் ஒர் இணைச் செயற்பாட்டாளர் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]ஜெயராமன் இந்தியாவில், தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி 1968-ஆம் ஆண்டு ராமசாமி வாண்டையார் - முத்துலெட்சுமி தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.[2] 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் அச்சுக்கூடத்தை நடத்தி வந்தார். தந்தையின் விவசாயத்தை இடையே செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003 இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பணிகள்
[தொகு]இவர் பாரம்பரிய நெல் இரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற முயற்சியில், விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். விதைப் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்தும் பல்வேறு வேளாண் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார். சுமார் 169 வகையான பாரம்பரிய, அரிய வகை நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்[3]. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், ஜெயராமனால் பாரம்பரிய நெல் மையம் உருவாக்கினார். இந்த மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆய்வு மையமாக திகழ்கிறது இவர் பாரம்பரிய நெல்விதைகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்.
விருதுகள்
[தொகு]இவர் மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர் ஆவார். பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருதினைப் பெற்றார்.[4]. இவரது பணிகளுக்காக விசய் தொலைக்காட்சியின் மாற்றம் தேவை நிகழ்ச்சி இவருக்கு இயற்கை விதை நெல் மீட்பாளர் விருதை வழங்கியது. இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் (SRISTI) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது.[5]
இறப்பு
[தொகு]2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் 2018, டிசம்பர் 6 அன்று சிகிச்சை பலனின்றி காலை 5.10க்கு காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ விதை நெல்லைக் காப்போம்
- ↑ "இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார்". தினமணி (மே 29, 2019)
- ↑ "12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள்". தினமலர் (டிசம்பர் 06, 2018)
- ↑ "அரிய வகை நெல் சேகரிப்பாளரான நெல் ஜெயராமன் காலமானார்". தினகரன் (டிசம்பர் 06, 2018)
- ↑ வி.தேவதாசன் (பெப்ரவரி 26, 2017). "169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் 'நெல்' ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்". செய்தி கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 26, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)