இரேந்திரநாத் முகர்சி
இரேந்திரநாத் முகோபாத்யாய் (Hirendranath Mukhopathyay) அல்லது இரேன் முகர்சி ( 3 நவம்பர் 1907--30 சூலை 2004) என்பவர் இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமைவாதி, பேராசிரியர், சட்ட நிபுணர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்மை முகம் கொண்டவராகக் கருதப்படுகிறார். 1952 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
மேனாட்டுப் படிப்பும் ஆசிரியர்ப் பணியும்
[தொகு]கொல்கத்தாவில் பிறந்த இரேன் முகர்சி பள்ளிப் படிப்பையும் கல்லூரிக் கல்வியையும் கொல்கத்தாவில் முடித்தார். 1929 இல் இலண்டனுக்குச் சென்று ஆக்சுபோர்டில் சேர்ந்து கல்வி பயின்று 1932 இல் பி.லிட் பட்டமும் 1934 இல் பார் அட் லா பட்டமும் பெற்றார். வெளிநாட்டுப் படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் வால்டேரில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றினார்..1936 இல் கொல்கத்தாவில் ரிப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியார் ஆனார். 1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் வரலாறு, அரசியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
பொதுவுடைமைக்கட்சிப் பணி
[தொகு]1936 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்த இரேன் முகர்சி தம் இறுதிக் காலம் வரை அக்கட்சியிலேயே இருந்தார்.கொல்கத்தா வட கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1952, 1957, 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சும் விவாதம் செய்யும் பாங்கும் சவகர்லால் நேரு போன்ற தலைவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. பொதுவுடைமைக் கட்சி இரண்டாக உடைந்தபோது இரேன் முகர்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலேயே இருந்தார்.
எழுத்துப்பணி
[தொகு]பல்வேறு வார மாத இதழ்களில் வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். சில நுல்களும் எழுதி வெளியிட்டார்.
பெற்ற பட்டங்களும் விருதுகளும்
[தொகு]- ஆந்திரா பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், வட வங்காள பல்கலைக் கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக் கழகம் இரேன் முகர்சிக்கு முனைவர் பட்டங்கள் வழங்கி கவுரவித்தன.
- 1990 இல் பத்ம பூசண் பட்டமும் பின்னர் 1991 இல் பத்ம விபூசண் பட்டமும் இவருக்கு இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டன
- சோவியத் லாண்ட் நேரு பரிசு (1978)
- வித்யாசாகர் விருது (1992)
- அத்வைத்த மல்லவர்த்தனா விருது (2002)
- மவுலான ஆசாத் விருது.
- நஸ்ருல் விருது.
நூல்கள்
[தொகு]- Indian Struggles for Freedom
- Under Marxist banner
- Portrait of Parliament
- India and Marxism
- ABC of Marxism
- A History of India
மேற்கோள்கள்
[தொகு]http://www.frontline.in/static/html/fl2117/stories/20040827005312800.htm
http://www.theguardian.com/news/2004/aug/30/guardianobituaries.india