குருதிக்குழல்

இரத்தக் குழாய்
மனிதரின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் எளிய வரைபடம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்vas sanguineum
MeSHD001808
TA98A12.0.00.001
TA23895
FMA63183
உடற்கூற்றியல்

குருதிக்குழல்கள் அல்லது குருதிக் குழாய்கள் அல்லது இரத்தக் குழாய்கள் (blood vessels) உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு உதவும் குருதி சுற்றோட்டத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மூன்று பிரதான குருதிக்குழல் வகைகள் உள்ளன: இதயத்திலிருந்து இரத்தத்தினை எடுத்துச் செல்லும் தமனிகள் அல்லது நாடிகள் (இலங்கை வழக்கு); திசுக்களுக்கும் குருதிக்கும் இடையில் நீர் மற்றும் வேதிப்பொருள்களை பரிமாற்றம் செய்ய உதவும் இரத்தத் தந்துகிகள் அல்லது மயிர்க்கலன்கள்; இரத்தத்தை தந்துகிகளிலிருந்து மீண்டும் இதயத்திற்கு திரும்ப எடுத்துச் செல்லும் சிரைகள் அல்லது நாளங்கள்[1].

கட்டமைப்பு

[தொகு]

குருதிக் கலன்களில் நாடிகளும், நாளங்களும் பிரதானமாக மூன்று படைகளாலான சுவரைக் கொண்டுள்ளன. நாடிகளினதும் நாளங்களினதும் கட்டமைப்பொழுங்கு ஒன்றாயினும், இவற்றுக்கிடையில் இப்படைகளில் தடிப்பு வேறுபாடு காணப்படுகின்றது. பிரதானமான இழையப் படைகள்:-

  • உட்கவசம்: இரத்தக் கலனின் மிக மெல்லிய படை. தந்துகிகள் அல்லது குருதி மயிர்க்கலன்களில் இப்படை மாத்திரமே இருக்கும். இப்படை எளிய செதின் மேலணியாலான அகவணியால் ஆக்கப்பட்டது. இது ஒற்றைக் கலப்படை தடிப்புடைய படியாகும். இப்படையிலுள்ள கலங்களை பல்சக்கரைட்டாலான பசை பிணைத்திருக்கும். நாடிகளிலும், நாளங்களிலும் இவ்வடிப்படைப் படைக்கு மேலதிகமாக மேலும் இரு படைகள் காணப்படுகின்றன.
  • நடுக்கவசம்: மீள்சக்தியிழையம் மற்றும் வட்டத்தசையாலான குருதிக் கலன் படையாகும். இதிலுள்ள வட்டத்தசையைப் பயன்படுத்தி இரத்தக் குழாயின் துவாரத்தின் விட்டத்தை மாற்றியமைக்க முடியும். இவ்வாறு குருதிக் கலனூடாக செல்லும் குருதியின் அளவைக் கட்டுப்படுத்தலாம். நாடிகளின் நடுக்கவசத்தை விட நாளங்களின் நடுக்கவசம் மெல்லியதாகும். இதனால் நாளங்களின் குருதி செல்லும் துவாரத்தின் விட்டம் அதிகமாகும். எனவே நாளங்களில் பொதுவாக குருதியமுக்கம் குறைவாகும்.
  • வெளிக்கவசம்: கொலாச்சன் நார்களோடிணைந்த தொடுப்பிழையத்தால் ஆன வெளியிலுள்ள படையாகும். இப்படையிலேயே குருதிக்கலனில் குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் இணைகின்றன. பெரிய நாடிகளிலும், நாளங்களிலும் வெளிக்கவசத்தில் குருதி வழங்கும் சில மயிர்க்கலன்களும் உள்ளன.
இரத்தக் குழாய்களின் கட்டமைப்பு
இரத்தக் குழாய்களின் கட்டமைப்பு

வகைகள்

[தொகு]
  • நாடி/ தமனி: இதயத்திலிருந்து உடலிலுள்ள இழையங்களுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக் குழாய்கள்
    • புன்நாடிகள்: சிறிய நாடிகள். மயிர்க்கலன்களில் முடிவுறும்.
  • மயிர்க்கலன்/ தந்துகி: இழையங்களுக்கு உணவு வழங்கி, வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடும் ஒற்றைக் கலத்தடிப்புடைய மிகச்சிறிய குருதிக்கலன்கள். இவற்றினூடாக ஆக்சிசன், காபனீரொக்சைட்டு, நீர், உலோக அயன்கள், குளுக்கோசு உட்பட பலவகையான எளிய மூலக்கூறுகள் இலகுவாக ஊடுருவ இயலும். சிலவகை வெண்குழியங்களாலும் மயிர்க்கலன்களை ஊடுருவ முடியும்.
    • குடாப்போலிகள் (Sinusoids): முற்றற்ற சுவருடைய மயிர்க்கலன்களாகும். அதிக பதார்த்தப் பரிமாற்றம் தேவைப்படும் அகஞ்சுரப்பிகள், என்புமச்சை, மண்ணீரல் போன்றவற்றில் இவ்வகைக் குருதிக் குழாய்கள் உள்ளன.
  • நாளம்/ சிரை: மயிர்க்கலன்களிலிருந்து (உடலிலிருந்து) இதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்கள்.
    • புன்நாளம்: சிறிய நாளங்கள், மயிர்க்கலன்களிலிருந்து ஆரம்பிக்கின்றன.

தொகுதிச் சுற்றோட்டத்திலுள்ள நாடிகள் ஆக்சிசன் செறிவு கூடிய இரத்தத்தைக் காவுகின்றன. எனினும் நுரையீரற்சுற்றோட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடிகள் எதிர்மாறாக காபனீரொக்சைட்டு செறிவு கூடிய குருதியைக் காவுகின்றன. நுரையீரலில் நுரையீரல் நாடியிலுள்ள காபனீரொக்சைட்டு நீக்கப்பட்டு ஆக்சிசன் சேர்க்கப்படுகின்றது (இது நுரையீரலிலுள்ள குருதி மயிர்க்கலன்களில் நடைபெறும்). இது நுரையீரல் நாளத்தினால் குருதிக்குக் கொண்டுவரப்படும். எனவே நுரையீரற் சுற்றோட்டத்திலுள்ள நாளங்களைத் தவிர ஏனைய நாளங்கள் பொதுவாக காபனீரொக்சைட்டு நிறைந்த குருதியைக் கடத்துகின்றன.

குருதிக்குழாய்களில் நாடியிலேயே அதிக அமுக்கத்தோடு இரத்தம் வேகமாகக் கடத்தப்படுகின்றது. இதயம் துடிப்பதற்கேற்ற படி நாடியினூடாக அமுக்க அலைகள் செல்லும். எனவே என்புக்கு அருகாக தோலுக்கு நெருக்கமாக நாடி செல்லும் இடங்களில் நாடித்துடிப்பு உணரலாம். பொதுவாக கையின் பெருவிரலுக்குக் கீழே இதனை உணரலாம். நாளங்களில் குருதியமுக்கம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். எனவே கால்களில் புவியீர்ப்பு காரணமாக குருதி இதயத்தை நோக்கிச் செல்லாமல் கீழ் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே இதைத் தடுக்க நாளங்களில் இதயத்தை நோக்கி மட்டும் குருதியை அனுமதிக்கும் வால்வுகள் காணப்படுகின்றன. வால்வுகளில் ஏற்படும் பழுது காரணமாகவே வரிக்கோசு நாளம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. வால்வுகள் பொதுவாக நாடிகளில் காணப்படுவதில்லை.

குருதி மயிர்க்கலன்கள் மிகவும் எளிமையானவையாகும். இவற்றில் செதின் மேலணிக்கலங்களைத் தவிர வேறெந்தக் கட்டமைப்பும் காணப்படுவதில்லை. இவற்றினூடாகவே குருதிக்கும் இழையங்களுக்கும் இடையே பதார்த்தங்கள் (வாயுக்கள், ஊட்டச்சத்துக்கள் இருதிசையிலும்) பரிமாற்றப்படுகின்றன.

மனிதக்குருதி சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு உயிர்வளியேற்றப்பட்ட குருதியையும், நீலம் உயிர்வளியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.

தொழிற்பாடு

[தொகு]

குருதியோட்டத்தில் குருதிக் கலன்கள் விசை வழங்குவதில்லை. நாடிக்குருதியோட்டத்துக்கான வலு இதயத்தாலும், நாளக் குருதியோட்டத்துக்கான வலு அருகிலுள்ள நாடித்துடிப்பு, வன்கூட்டுத் தசைச் சுருக்கத்தாலும் வழங்கப்படும். எனினும் குருதிக் கலன்களிலுள்ள மழமழப்பான தசைகளால் அவற்றின் விட்டத்தை மாற்றியமைக்க முடியும். மழமழப்பான தசைகள் சுருங்கும் போது விட்டம் குறைந்து குருதியோட்டம் குறையும். மழமழப்பான தசைகள் தளரும் போது விட்டம் அதிகரித்து குருதி விநியோகம் அதிகரிக்கும். இச்செயற்பாடுகள் அனைத்தும் இச்சையின்றிய வகையில் தன்னாட்சி நரம்புத் தொகுதியால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உடல் வெப்பநிலைச் சீராக்கம், அழற்சி தரு தூண்டற்பேறு, குருதி அமுக்கச் சீராக்கம் போன்ற ஓர்சீர்த்திட நிலை சார்ந்த செயற்பாடுகளில் குருதிக் கலன் விட்டம் மாற்றப்படும்.

நோய்கள்

[தொகு]
  • வரிக்கோசு நாளம்: நாளங்களின் வால்வுகள் தொழிற்பாடற்றுப் போவதால் அவற்றுள் குருதி தேக்கமடைந்து உருவாகும் நோய் நிலமை.
  • முடியுரு துரொம்போசிசு: இதயத்தசைகளுக்கு குருதி விநியோகம் வழங்கும் முடியுரு நாடிகள் ஆரம்பத்தில் LDL (Low Density Lipoprotein) படிவதாலும், பின்னர் குருதி உறைவதாலும் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படல்.

பிற இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Meigs AV. A study on the human blood vessels in health and disease. A supplement to "The origin of disease". Published 1907 by J.B. Lippincott Company in Philadelphia, London. http://openlibrary.org/books/OL7131153M/A_study_of_the_human_blood-vessels_in_health_and_disease
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிக்குழல்&oldid=3526474" இலிருந்து மீள்விக்கப்பட்டது