குருதிவளிக்காவி
ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.
பெரும்பான்மையான முதுகெலும்பிகளில் குருதிவளிக்காவி நான்கு குளோபின் புரத மூலக்கூறுகள் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளோபினும் இரும்புத் தனிமத்தைக் கொண்ட ஈம் (ஹீம்) எனப்படும் அமைப்புடன் இணைந்துள்ளது. ஈமோகுளோபின் எனப்படும் பெயருக்கு இதுவே காரணம் ஆகும்.
குருதிவளிக்காவி சுவாசப்பையில் இருந்து உயிர்வளியை உடலின் ஏனைய பாகங்களுக்குக் காவிச்செல்கின்றது. மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் செவுள் எனப்படும் சுவாச உறுப்பு நீரில் கரைந்துள்ள உயிர்வளியை உள்ளெடுத்த பிற்பாடு ஏனைய பாகங்களுக்கு காவிச்செல்வதற்கு குருதிவளிக்காவி உதவுகின்றது. ஒவ்வொரு குருதிவளிக்காவி மூலக்கூறாலும் நான்கு உயிர்வளிக்கூறுகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்குள் விடப்படுகின்றது. உயிரணுக்களில் இருந்து வெளிவிடப்படும் கரியமிலவளியின் சில சதவீதங்கள் (20–25%) குருதிவளிக்காவியால் காவப்படுகின்றது, இச்சந்தர்ப்பத்தில் கரியமிலவளியுடன் இணைந்த நிலையில் இது காபமினோ ஈமோகுளோபின் (Carbaminohaemoglobin) என அழைக்கப்படுகின்றது. ஏனையவை நீருடன் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகி செங்குருதியணுக்களால் எடுத்துச் செல்லப்படுகின்றது. கார்பனோராக்சைடு ஈமோகுளோபினுடன் இணைந்து உருவாகும் சேர்வை காபொக்சி ஈமோகுளோபின் எனப்படும்.
குருதிவளிக்காவி செங்குருதியணுக்களைவிட வேறு பகுதிகளிலும் (மூளையில் கரும்பதார்த்தம், பெருவிழுங்கிகள், மூச்சுச் சிற்றறை) காணப்படுகின்றது. இங்கு அது உயிர்வளி இணைவு எதிர்ப்பியாகவும் இரும்பு வளர்சிதைமாற்றக் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகின்றது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- வாயுஏற்பி புரதம்.