கோத்தா கெலாங்கி

கோத்தா கெலாங்கி
Kota Gelanggi
செயற்கைக்கோள் புகைப்படத்தில் கோத்தா கெலாங்கி
செயற்கைக்கோள் புகைப்படத்தில்
கோத்தா கெலாங்கி
மாற்றுப் பெயர்மாயிருண்டகம்
இருப்பிடம்கோத்தா திங்கி மாவட்டம்
ஜொகூர்
ஆயத்தொலைகள்2°44′N 102°42′E / 2.733°N 102.700°E / 2.733; 102.700
வகைபழங்காலக் குடியிருப்பு
வளங்காப்புக் காடு
பகுதிசுங்கை மாடேக்
(Sungai Madek)
சுங்கை லெங்கியூ (Sungai Lenggiu)
நீளம்35 கி.மீ.
அகலம்40 கி.மீ.
பரப்பளவு140
வரலாறு
கட்டப்பட்டதுகி.பி. 650
பயனற்றுப்போனதுகி.பி. 1025
கலாச்சாரம்கோத்தா கெலாங்கி நாகரிகம்
Satellite ofஸ்ரீ விஜயம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வாளர்டட்லி பிரான்சிஸ் அமெலியஸ் ஹெர்வி (Dudley Francis Amelius Hervey)
சர் ரிச்சர்ட் ஓலோப் வின்ஸ்டெட்
(Sir Richard Olof Winstedt)
நிலைஇடிபாடுகள்
மேலாண்மைகைவிடப் பட்ட நிலை
பொது அனுமதிஇல்லை

கோத்தா கெலாங்கி என்பது (மலாய்:Tapak Arkeologi Kota Gelanggi; ஆங்கிலம்:Kota Gelanggi Archaeological Site; சீனம்:亞庇考古遺址) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் புராதன இடிபாடுகள் கொண்ட இடமாகும். தீபகற்ப மலேசியாவின் மிகப் பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் கோத்தா கெலாங்கி தொல்லியல் தளமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றைய ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி நகரத்திற்கு வட மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1]

கி.பி. 650 தொடங்கி கி.பி. 900 வரையிலும், ஸ்ரீ விஜயம் பண்டைய பேரரசின் முதல் தலைநகரமாகவும்; தென்கிழக்கு ஆசியாவின் தீபகற்ப மலேசியாவில் மிகப் பழமையான இராச்சியங்களில் ஒன்றாகவும்; அறிவிக்கப்பட்ட ஒரு தொல்பொருள் தளமாகும்.

இந்தத் தளத்தைப் பற்றி, 2005 பிப்ரவரி 3-ஆம் தேதி, மலேசியப் பத்திரிகைகளால் ஒரு கண்டுபிடிப்பு என அறிவிக்கப்பட்டது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழும் இந்தச் செய்தியை வெளியிட்டது.[2]

வரலாறு

[தொகு]

செஜாரா மெலாயு பதிவு செய்த கறுப்புக் கோட்டை

[தொகு]

கோத்தா கெலாங்கி தொல்லியல் தளம், ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா சுமத்திராவில் கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1377-ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ விஜய பேரரசு செல்வச் செழிப்புடன் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும்.

இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஆட்சி செய்து உள்ளன. செஜாரா மெலாயு என்பது பழம் பெரும் நூல். இது 1500 ஆண்டு கால வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம். அதில் கோத்தா கெலாங்கியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

ஜொகூர் ஆற்றின் வடக்கே மேல் பகுதியில், கோத்தா கெலாங்கியின் பிரதான கோட்டை இருந்து இருக்கிறது. அந்தக் கோட்டை கரும் கற்களால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. கெலாங்கி எனும் சொல் ஒரு தாய்லாந்துச் சொல்லாகவும் இருக்கலாம் என்றும் செஜாரா மெலாயு குறிப்புகள் சொல்கின்றன.

சயாமிய நாட்டுப்புறக் கதைகளில் கோத்தா கெலாங்கி

[தொகு]

கோத்தா கெலாங்கி என்பது தாய்லாந்து சொல்லான குளோங் - கியோவ் (Ghlong-Keow) எனும் சொல்லில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது. இந்த நகரம் சயாமிய நாட்டின் ஆயோத்தியா இராச்சியத்தின் (Ayutthaya Kingdom) ஒரு பகுதியாக இருந்து இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். பண்டைய சயாமிய நாட்டுப்புறக் கதைகளிலும் கோத்தா கெலாங்கியைப் பற்றிச் சொல்லப் படுகிறது.

கோத்தா கெலாங்கி தமிழ் கல்வெட்டுகள்

[தொகு]

1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் அரசை அழித்த பின்னர், தென்னிந்தியச் சோழ வம்சத்தை சார்ந்த இராஜேந்திர சோழர், கோத்தா கெலாங்கி நகரத்தையும் தாக்கியதாகப் பண்டைய தமிழ் கல்வெட்டுகள் சான்று காட்டுகின்றன. கோத்தா கெலாங்கியில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை தமிழ் மொழியில் எழுதப் பட்டவை. 1025-ஆம் ஆண்டு இராஜேந்திர சோழன், இந்தக் கோத்தா கெலாங்கியின் மீது படையெடுத்தார் என்று கல்வெட்டு ஆவணங்கள் சொல்கின்றன.

ஐரோப்பிய வரைபடங்களில் கோத்தா கெலாங்கி

[தொகு]

மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் போலேபி (அதாவது கெலாங்கி) எனப்படும் நகரம் இருப்பத்தை பழைய ஐரோப்பிய வரைபடங்கள் எடுத்துக் காட்டுகின்றன.[3] சீனா நாட்டு வணிகர்கள்; அராபிய வணிகர்கள்; உள்நாட்டு வணிகர்களுடன் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.[4]

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் (Gangga Negara); கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு (Bujang Valley); கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம்; தாமரலிங்கா அரசு (Tambralinga); பான் பான் அரசு (Pan Pan) ஆகிய இடங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து உள்ளன.

சுங்கை மாடேக், சுங்கை லெங்கியூ ஆறுகள்

[தொகு]

கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளில் லெங்கியூ நீர்த் தேக்கம் இருக்கிறது (Linggiu Reservoir). அருகில் சுங்கை மாடேக், சுங்கை லெங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.

கோத்தா கெலாங்கி நிலப் பகுதி ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானது. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும் அந்த நீர்த் தேக்கத்தையும், அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் (Public Utilities Board (PUB) of Singapore) இன்று வரை பரமாரித்து வருகின்றது.[5]

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாலேயே சிங்கப்பூர் அரசு ஜொகூர் அரசுடன் குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவமே அந்த லிங்கியூ காட்டுக்குள் இருக்கிறது.

ரேய்மி செ ரோஸ்

[தொகு]

ரேய்மி செ ரோஸ்(Raimy Che-Ross) என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். கோத்தா கெலாங்கியைப் பற்றிய சான்றுகளைத் திரட்டுவதற்கு பன்னிரண்டு ஆண்டுகள், உலகம் பூராவும் சுற்றி வந்து இருக்கிறார். கோட்டைக்கு மேலே விமானத்தின் வழி பறந்து வான்படங்களையும் எடுத்தார்.[6]

இந்தச் சான்றுகளைக் கொண்டு 2004-ஆம் ஆண்டில் கோத்தா கெலாங்கி காணாமல் போன நகரம் எனும் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார்.

  • ஆசிய ஆய்வுக் கழகம் (Asia Research Institute (ARI) [7]
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore)
  • மலேசிய பாரம்பரியக் கழகம் (Malaysian Heritage Trust)
  • மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் (Museums and Antiquities Department of Malaysia)

போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த வரலாற்று நிபுணர்களிடம் தன் ஆய்வுகளைச் சமர்ப்பித்து இருக்கிறார்.

இந்திய மயமான பேரரசு

[தொகு]

கோத்தா கெலாங்கி என்பது இந்திய மயமான பேரரசு என்பது தெரிய வந்தது. அனைத்து மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார். 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பத்திரிகைகளும் ’காணாமல் போன நகரம்’ எனும் தலைப்பில் விரிவான செய்திகளை வெளியிட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து 2006 ஏப்ரல் 28-ஆம் தேதி, மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா ஒரு செய்தியை வெளியிட்டது.

’காணாமல் போன நகரம்’ என்று எதுவுமே இல்லை என்பதுதான் அந்தச் செய்தி.[8] அப்போது மலேசிய தொல்பொருள் அருங்காட்சியகக் கழகத்தின் காப்பாளராக காலீட் செயட் அலி (Khalid Syed Ali, Curator of Archaeology in the Department's Research and Development Division) என்பவர் இருந்தார்.

காலீட் செயட் அலி சொன்னார்: நாங்கள் ஓராண்டு ஆய்வு செய்து பார்த்தோம். காணாமல் போன நகரம் என்று எந்த அடையாளமும், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சொன்னார்.[9]

கோத்தா கெலாங்கியின் ஆய்வுகள்

[தொகு]

ரேய்மி செ ரோஸ் மீண்டும் சான்றுகளை முன்வைத்தார். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீண்டும் சொல்லப் பட்டது. அதோடு கோத்தா கெலாங்கியின் ஆய்வுகள் நிறுத்தப் பட்டன.[10]

1900-ஆம் ஆண்டுகளிலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றிய இரகசியங்கள் கசியத் தொடங்கி விட்டன. 1881-ஆம் ஆண்டு டட்லி பிரான்சிஸ் ஹார்வே (Dudley Francis Amelius Hervey 1849–1911) எனும் ஓர் ஆங்கிலேயர், நேரடியாகச் சென்று பார்த்து இருக்கிறார். அங்கே ஓர் அங்கோர் வாட் புதைந்து கிடக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.[11]

பிரித்தானிய ஆய்வாளர்கள்

[தொகு]

அதன் பின்னர் 1920-ஆம் ஆண்டில், சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட் (Sir Richard Olof Winstedt 1878–1966) என்பவரும் அதை உறுதி படுத்தி இருக்கிறார்.[12]

அடுத்து 1960-ஆம் ஆண்டுகளில் ஜெரால்ட் கார்டனர் (Gerald Gardner 1884–1964) எனும் ஆய்வாளரும் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்.[13]

சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட்

[தொகு]

ஆக ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றி சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட் சொல்லி இருக்கிறார். தவிர கம்போடியாவில் இருக்கும் அங்கோர் வாட்; சுமத்திராவில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயங்களைக் காட்டிலும் கோத்தா கெலாங்கி மிகப் பழமை வாய்ந்தது என்றும் மலேசிய ஆய்வாளர் ரேய்மி செ ரோஸ் சொல்லி இருக்கிறார்.[14]

ரேய்மி செ ரோஸ் ஆய்வுகள் செய்யும் போது, கோத்தா கெலாங்கியின் மதில் சுவர்கள் நிறையவே சேதம் அடைந்து காணப் பட்டன. இருந்தாலும் உள்ளே கட்டடங்கள்; சுவர்கள்; கல்லறைகள்; நிலவறைகள் இன்னும் புதைந்த நிலையில் கிடக்கின்றன என்றும் உறுதியாகச் சொன்னார்.

ஒரு காலத்தில் கோத்தா கெலாங்கி ஒரு வியாபார மையமாக இருந்து இருக்கிறது. தவிர புத்த மதத்தின் தலைமை மையமாகவும் விளங்கி இருக்கிறது.[15]

ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழு

[தொகு]

கோத்தா கெலாங்கி பகுதியில் ஸ்ரீ விஜய காலத்துக் தாமரைப் கற்படிவங்களும்; சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியில் அந்தத் தாமரைப் படிவங்கள்; கல்வெட்டுகள் காணப் படுகின்றன.[16]

அவை ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள். இந்தப் படிவங்கள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025-ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள், ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன.[17]

கோத்தா கெலாங்கி பூர்வீகக் குடிமக்கள்

[தொகு]

கோத்தா கெலாங்கி புராதன நகரம் சுங்கை தேபக் (Sungai Tebak) மற்றும் சுங்கை சென்டெரோக் (Sungai Senterok) எனும் இரு நதிகளுக்கு இடையில் அமைந்து இருந்தது. இங்கு வாழும் பூர்வீகக் குடிமக்கள் ’கோத்தா கெலாங்கி என்று ஒரு நகரம் இருக்கிறது. நாங்கள் பார்த்து இருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.

கோத்தா கெலாங்கி மலைக்காடுகளில் அறுபது பூர்வீகக் குடும்பங்கள் வாழ்கின்றன. பூர்வீகக் குடிமக்களின் தலைவராக தோக் பாத்தின் அப்துல் ரஹ்மான் (Tuk Batin Abdul Rahman) என்பவர் இருந்தார்.

அவர் சொன்னவை: ”அது ஒரு பெரிய நகரம். எங்களுடைய கிராமத்திற்குப் பக்கத்திலேயே இருக்கிறது. நான் நேராகப் பார்த்து இருக்கிறேன். அங்கே ஒரு கோட்டை இருக்கிறது. நாற்பது அடி நீளம். அந்தக் கோட்டையில் மூன்று பெரிய துவாரங்கள் உள்ளன.

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் மலாயா கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம்

[தொகு]

அந்தக் கோட்டைக்கு அருகில்தான் நானும் எங்களுடைய 50 குடும்பங்களும் தங்கி இருந்தோம். 1940 - 1950-ஆம் ஆண்டுகளில் மலாயா கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம். அவர்களிடம் இருந்து பாதுகாக்க ஆங்கிலேயர்கள் எங்களை அங்கு இருந்து வேறு ஓர் இடத்திற்கு இடம் மாற்றினார்கள். மூன்று கிராமங்களில் தனித்து வாழ்ந்தோம்.

1930-களில் அந்தப் பகுதிக்கு வேட்டையாடப் போய் இருந்தேன். ஒருநாள் அந்தக் கோட்டைக்கு அருகிலேயே தடுமாறி விழுந்தேன்” என்றும் அந்தக் குடிமக்களின் தலைவர் சொன்னார்.[18]

கோத்தா கெலாங்கி கோட்டை

[தொகு]

அவரைத் தவிர தோக் பாத்தின் டாவுட் (Tuk Batin Daud) (வயது 66), தோக் பாத்தின் ஆடோங் (Tuk Batin Adong) (வயது 64) என்பவர்களும் கோத்தா கெலாங்கி கோட்டை இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நகரத்தின் கட்டமைப்பு; அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றி தோக் பாத்தின் டாவுட் இப்படி விவரிக்கிறார். நகரம் உண்மையில் பெரியது. அதன் கட்டுமானம் ஓர் அரண்மனை போல் தெரிகிறது. அந்த நகரம் ஒரு காலத்தில் ஒரு பெரிய ராஜாவுக்கு சொந்தமானதாக இருந்து இருக்கலாம். அந்த அரண்மனையை அவர் பலமுறை கனவு கண்டதாகவும் சொல்கிறார்.

பூர்வீகக் குடிமக்கள் பலர் அந்தக் கோட்டையைப் போய்ப் பார்த்து இருக்கிறார்கள். கோட்டையைச் சுற்றிலும் கறுப்பு நிறச் சுவர்கள் இருக்கின்றன. தோக் பாத்தின் ஆடோங், அங்கு இருந்து எடுத்து வந்த இரு கல்வெட்டுகளையும் இன்று வரையிலும் பாதுகாத்து வருகிறார். அந்தக் கல்வெட்டுகளில் கோட்டையின் படங்கள் வரையப் பட்டு உள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society Vol. 77, No. 2 (287) (2004), pp. 27-58 (32 pages)
  2. The Johor government agrees that there is a lost city in the state. The search for the lost city drew nationwide interest after The Star broke the story last week, prompting the Federal Government to say it would be given top priority.
  3. Sebastian Munster (1614) Map of Taprobana.
  4. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பக்: 171
  5. The 1990 agreement allowed Singapore to build a dam across Sungei Linggiu (a tributary of the Johor River) to facilitate the extraction of water from the Johor River.
  6. கோத்தா கெலாங்கியின் சுவடுகளைத் தேடிய ரேய்மி செ ரோஸ்.
  7. https://ari.nus.edu.sg/
  8. A 1,000 year-old lost city may have been found in the jungles of southern Johor, a researcher claimed in a report published today.
  9. Now the lost city is a forest reserve. And no one can enter without the permission of the authorities. Though museum authorities, on the other hand, have indicated interest in studying Kota Gelanggi but nothing much has transpired since then. Lack of funds, inaccessibility, possibility of different locations – have been cited till date to undertake a serious study.
  10. The Johor find of 2005 which was quietly dropped was none other than Kota Gelanggi lost city reflecting Srivijaya and its Buddhist splendour. But they deliberately disregarded it because that would have sidelined Malacca Empire and Islam which was smaller and came some 500 years later.
  11. Hervey, Dudley Francis Amelius, (1849-1911), Colonial Administrator.
  12. Winstedt served as president of the Malayan Branch of the Royal Asiatic Society in the 1920s and was a member of the Raffles Library and Museum committee.
  13. Gardner, Gerald (1933). "Notes on some Ancient Gold Coins, from the Johore River". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. XI (II) பக்: 171–176
  14. 1,000-year-old lostcity, possibly older than Angkor Wat in Cambodia and Borobudur in Indonesia, is believed to have been located in the dense jungles of Johor In his paper, he said the place was raided by the South Indian Tamil Chola Kingdoms RAJA RAJENDRA CHOLAVARMAN I, in 1025A.D.
  15. Tracking down Kota Gelanggi (PDF). The Star. May 26, 2011
  16. ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள்.
  17. Ancient Tamil inscriptions show that the city was raided in 1025 by South Indian Chola Dynasty conqueror Rajendra Chola I. Earlier he had destroyed the Sri Vijaya Kingdom of Gangga Negara. The latter that is Gangga Negara is generally equated with the ruins and ancient tombs that can still be seen in Beruas, Perak.
  18. (In Malay) Amad Bahri Mardi, Kota Gelanggi hanya wujud pada nama, Berita Harian, Sunday, 20 February 2005, p. 18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_கெலாங்கி&oldid=3679924" இலிருந்து மீள்விக்கப்பட்டது