சைரந்திரி

சைரந்திரி, பாண்டவர்களுடனான சூதாட்டத்தில் வென்ற கௌரவர்கள் விதித்த படி, திரௌபதியுடன் 12 ஆண்டு வனவாசம் முடித்த திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மத்சய நாட்டின் மன்னர் விராட அரண்மனையில் மாறுவேடத்தில் பணியில் சேர்கின்றனர்.

திரௌபதி, மன்னர் விராடனின் பட்டத்து இராணியான சுதோஷ்ணைக்கு சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி எனும் பெயரில் விராட அரண்மனைப் பணியில் சேர்கிறார்.[1]

பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்

[தொகு]

தருமர் அந்தணர் வேடத்தில் கங்கன் எனும் பெயரில் விராட மன்னரின் அரசவை உறுப்பினராகவும் மற்றும் விராடனுடன் சொக்கட்டான் மற்றும் சதுரங்கம் ஆடும் பணியிலும் சேர்ந்தார். அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நாட்டியம் கற்றுத் தர பிருகன்னளை எனும் பெயரிலும், வீமன் அரண்மனை சமையல்காரராக வல்லபன் எனும் பெயரிலும், சகாதேவன் விராட நாட்டின் ஆநிரைகளை காக்கும் பணியில் தந்திரிபாலன் எனும் பெயரிலும், நகுலன் குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், விராட நாட்டு அரண்மனைப் பணிகளில் சேர்ந்தனர்.

சைரந்திரி மீது காமம் கொண்ட கீசகன்

[தொகு]
சைரந்திரியை அடையத் துடிக்கும் கீசகன்

விராட இராணி சுதோஷ்ணையின் அண்ணனும், விராடனின் தலைமைப் படைத் தலைவருமான கீசகன், அரண்மனையின் அந்தப்புரத்திற்கு சென்ற போது, தனது தங்கை சுதோஷ்ணையின் பணிப்பெண்ணாக இருந்த சைரந்திரியைக் கண்டு, காமம் மிகுதியால் சைரந்திரியை அடைய ஆவல் கொண்டான்.

சைரந்திரி மீதான தனது காமத்தை, கீசகன் இராணி சுதோஷ்ணையிடம் தெரிவிக்க, சுதோஷ்ணை சைரந்திரியை மது கோப்பையுடன் கீசகனின் மாளிகைக்கு செல்ல ஆணையிட்டாள். கீசகன் மாளிகைக்குச் சென்ற சைரந்திரியை[2], கீசகன் காம வெறியுடன் சைரந்திரியின் கையைப் பிடித்து வன்கொடுமை செய்ய முற்பட்ட போது, சைரந்திரி கீசகனின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுத்துத் கொண்டு, விராடனின் அரசவைக்கு ஒடிச் சென்று, கீசகனால் தனக்கு ஏற்பட்ட கொடுமையை எடுத்துரைத்து நீதி கேட்டாள்.

விராட அரசவையில், விராடன் மற்றும் கங்கன் முன்னிலையில் சைரந்திரியை மானபங்கப்படுத்தும் கீசகன்

அரசவையில் கூடியிருந்த மன்னர் விராடன், சுதோஷ்ணை முதலானவர்கள், கீசகனுக்குப் பயந்து சைரந்திரியின் நிலையைக் கண்டு அமைதி காத்தனர். மேலும் அரசவையில் மாறுவேடத்தில் இருந்த கங்கன், பிருகன்னளை மற்றும் வல்லபனும் தாங்கள் வேடதாரிகள் என்பதை மறைக்கும் பொருட்டு சைரந்திரி விடயத்தில் தலையிடாமல் அமைதி காத்தனர்.

கீசகனை கண்டு விராட மன்னரே பயந்த நிலையில், அரண்மனைச் சமையல் அறையில் வல்லபன் பெயரில் மாறுவேடத்தில் இருந்த வீமனை அணுகிய சைரந்திரி, கீசகனால் தனது கற்புக்கு ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து காக்க, கீசகனைக் கொல்லும் படி கூறினாள்.

கீசகன் அழிவு

[தொகு]

கீசகன் கடுமையாக ஆணையிட்டதின் பேரில், சைரந்திரி கீசகனின் காமப் பசியைப் போக்க, கீசகனின் அரண்மனைக்கு நடு இரவில் வருவதாக வாக்களித்தாள்.

சைரந்திரியும், வல்லாளனும் வகுத்த திட்டப்படி, நடு இரவில் கீசகனின் அரண்மனைக்கு சென்று, அங்கிருந்த கட்டிலில் பெண் வேடத்தில் வல்லபன் படுத்துக் கொண்டான்.

காமபசியுடன் சைரந்திரியை அனுபவிக்கும் வெறியுடன் வந்த கீசகன், கட்டிலில் பெண் வேடத்தில் படுத்திருந்த வல்லபனைத் தொட்டான். உடனே வல்லபவன் வெகுண்டெழுந்து, கீசகனின் கை, கால்களை முறித்துக் கொன்றான்.

சைரந்திரியின் கந்தர்வ கணவர்கள்

[தொகு]

யாராலும் வெல்ல முடியாத கீசகனை, சைரந்திரியைக் காக்கும் ஐந்து கந்தர்வக் கணவர்கள் தான் கொன்றதாக விராட நாட்டில் வதந்தி பரவியது. கீசகன் இறந்தான் என்ற செய்தி கேட்டு வந்த கீசகனின் தம்பியர்கள், கீசகன் அடைய விரும்பிய சைரந்திரியையும், கீசகனின் சடலத்துடன் வைத்து தீ மூட்ட முடிவு செய்தனர்.

இச்செய்தி அறிந்த வல்லபன், கீசகன் சவ உடலுடன் இழுத்துச் செல்லப்பட்ட சைரந்திரியை, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் மறித்து, கீசகனின் தம்பியர்களை கொன்று, சைரந்திரியை மீட்டு விராட அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Virata Parva, Section IX
  2. கீசகனிடம் சென்றாள் திரௌபதி! - விராட பர்வம் பகுதி 15

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரந்திரி&oldid=4085965" இலிருந்து மீள்விக்கப்பட்டது