தேன்

ஒளி ஊடுருவும் செம்பழுப்பு நிறத்தில் கண்ணாடி புட்டியில் தேன்
அறுகோண வடிவில் தனித்தனி அறைகள் கொண்ட தேனடை அல்லது தேன் கூடு. தேன்கூடு என்பது தனி ஒரு அறையையும் குறிக்கும்
தேன்கலயம்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்படுத்தப்படாத தேனில் 14%-18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது.

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிலிருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.

தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும்.

உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு)[1], கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]

அறுகோன இருக்கும் தேன் அறைகள் ஒரு இயற்கை அற்புதம். இயற்கை வழி கட்டும் அறிவை தெரிந்து கொண்டுள்ள தேனீக்கள் இந்த வடிவத்தில் பரப்பளவை துல்லியமாகப் பயன்படுத்துகின்றன.

பயன்கள்

[தொகு]

தேன் ஒரு உணவு

[தொகு]

சமையல், ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும் பரவல்,தேநீர் போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம், வணிக பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது. தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி ”தேன் என்பது ஒரு தூய்மையான பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக் கூடாது.பொதுவாக தேன் விருந்து,தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள் வணிக உலகில் பிரபலமாக உள்ளன.

தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் – நீர் கலவையான மதுவகையின் முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும் புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல் கலத்திற்கு மாற்றி மீண்டும் 35 முதல் 40 நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது. தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு விடப்படுகிறது.

தேன் ஒரு ஊட்டச்சத்து

[தொகு]

சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38.5 சதவீதமும் குளுக்கோச் 31.0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48% பிரக்டோச், 47% குளுக்கோச் மற்றும் 5% சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள் தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது.

தேன்
உணவாற்றல்1272 கிசூ (304 கலோரி)
82.4 g
சீனி82.12 g
நார்ப்பொருள்0.2 g
0 g
0.3 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
நியாசின் (B3)
(1%)
0.121 மிகி
(1%)
0.068 மிகி
உயிர்ச்சத்து பி6
(2%)
0.024 மிகி
இலைக்காடி (B9)
(1%)
2 மைகி
உயிர்ச்சத்து சி
(1%)
0.5 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
6 மிகி
இரும்பு
(3%)
0.42 மிகி
மக்னீசியம்
(1%)
2 மிகி
பாசுபரசு
(1%)
4 மிகி
பொட்டாசியம்
(1%)
52 மிகி
சோடியம்
(0%)
4 மிகி
துத்தநாகம்
(2%)
0.22 மிகி
நீர்17.10 g

Shown is for 100 g, roughly 5 tbsp.
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

தேன் – ஆய்வும் பகுதிப்பொருட்களும்:

ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.[3]

தேன் பாதுகாப்பு

[தொகு]

தேனின் தனிப்பட்ட அமைப்பு மற்றும் அதன் இரசாயன பண்புகள், தேனை நீண்ட காலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீண்ட கால சேமிப்பிற்குப் பிறகும் தேன் எளிதில் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கச் செய்கிறது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாகக் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாகும். தூயநிலையில் தேன் போதிய உயர் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டு நொதித்தலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்பொழுது , அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப் படிகமாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம்.

தேன் தரப்படுத்துதல்

[தொகு]

அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது (யுஎஸ்டிஏ "இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு.

தேன் தர அளவுகோல்:-

[தொகு]
தரம் நீர் உள்ளடக்கம் சுவை மற்றும் நறுமணம் குறைகளில்லாமை தெளிவு
< 18.6% நல்லது — சாதாரண சுவை மற்றும் நறுமணம் கொண்டிருக்கும். இனிப்பூட்டும் மலர்களிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். புகை, நொதி , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். பயன்பாட்டிற்கு உகந்தது. — பயன்படுத்த ஏதுவாய் குறைகளின்றி பார்ப்பதற்கும் உண்பதற்கும் உகந்ததாக இருக்கும் தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
> 18.6% and < 20.0% சுமார் — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். ஓரளவுக்கு சுமார் — தோற்றம் மற்றும் உண்ணும் தன்மையை பாதிக்காமல் இருக்கும். சுமாரான தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
< 20.0% பரவாயில்லை — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். குறைகளிருப்பது போல் தோன்றலாம் — ஆனால் தோற்றம் மற்றும் உண்ணூம் தன்மையில் பாதிப்பு இருக்காது. தெளிவில் ஐயம் — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம்.
தரத்திற்கு கீழ் > 20.0% தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது. தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது. தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது.

மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது.

கிளாஸ்டிரீயம் நச்சேற்றம்

[தொகு]

தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது.

குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.

நச்சு தேன்

[தொகு]

அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது.

தேன்-உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் நாடுகள்

[தொகு]
2005 தேன் உறபத்தி செய்யும் நாடுகள்
முதல் ஐந்து இடங்களில் உள்ள தேன் உற்பத்தி செய்யும் நாடுகள்
( ஆயிரம் மெட்ரிக் டன்களில்)
தரம் நாடுகள் 2009 2010 2011
1  சீனா 407,367 409,149 446,089
2  துருக்கி 82,003 81,115 94,245
3  உக்ரைன் 74,100 70,900 70,300
4  ஐக்கிய அமெரிக்கா 66,413 80,042 67,294
5  உருசியா 53,598 51,535 60,010
உலகம் 1,199,943 1,212,586 1,282,102
Source: UN Food & Agriculture Organization [4]

2012 ஆம் ஆண்டில், சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன.[5]

பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் அமெரிக்கா (உலகளவில் நான்காவது இடம்) மற்றும் உருசியா (உலகளவில் ஐந்தாவது இடம்) வகிக்கின்றன.

மெக்சிகோ உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும்.[6] மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு யுகாட்டின் தீபகற்பம் ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தேன் வகைகள்

[தொகு]

தேனில் பலவகைகள் உள்ளது. துளசித் தேன், இஞ்சித் தேன், நெல்லித் தேன், முருங்கைத் தேன், நாவல் தேன் என தேனில் பலவகைகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த ஒரு குறிப்பிட்ட மரங்கள் மற்றும் அதன் பூக்கள் அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப தேனின் நிறம், சுவை மற்றும் ஊட்டச் சத்துக்களும் மாறுபடும். பலவகை பூக்கள் நிறைந்த இடங்களில் இருந்து கிடைக்கும் தேனும் ஒருவகை பூக்களில் இருந்து கிடைக்கும் தேனும் மருத்துவகுணத்திலும் கூட வேறுபாடும்.

குறிப்புகள்

[தொகு]
  1. World book Encyclopedia, 1985 Edition
  2. "கனடிய தேன் சேகரிப்புப் புள்ளியியல் குறிப்பு - மாநில, ஆண்டு வாரியாக". Archived from the original on 2007-04-30. பார்க்கப்பட்ட நாள் 2007-05-18.
  3. "அறுவை‌‌ ‌சி‌கி‌ச்சை காய‌ங்களு‌க்கு அருமரு‌ந்தாகு‌ம் தே‌ன் : ஆ‌ய்வு!". Webdunia. 19 அக்டோபர் 2007. http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0710/19/1071019052_1.htm. பார்த்த நாள்: 2007-12-31. 
  4. "Production of Natural Honey by countries". UN Food & Agriculture Organization. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-08-26.
  5. FAO statistics. faostat.fao.org
  6. Where Honey Comes From பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம். Wherefoodcomesfrom.com (2012-11-09). Retrieved on 2013-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்&oldid=3702269" இலிருந்து மீள்விக்கப்பட்டது