தொற்றுநோய்

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஓர் இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.

நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஓர் உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஓர் உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.

பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நோய்க்கடத்தல்

[தொகு]
தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்

தொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது.

சுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

Culex mosquitos (Culex quinquefasciatus shown) are biological vectors that transmit West Nile Virus.

பல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.

நோய்க்கடத்தலை தடுத்தல்

[தொகு]

நோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் உயிரினம் பற்றி, நோயின் இயல்புபற்றி, நோய் கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, நோய்க்காரணியின் நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.

உதாரணமாக எய்ட்சு எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் வைரசானது (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த வைரசை பரப்ப முடியும். தாம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த நோயைக் காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய நோய்க்காரணியின் தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், நோய் விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.

சிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய தடுப்பூசி முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, நோய்க்காவியை (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம்.

கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic)

[தொகு]

ஒரு தொற்று நோயானது புதிதான ஒரு நோய்க்காரணியாலோ, அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதான ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு நோய்க்காரணியாலோ ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. ஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது கொள்ளைநோய் (epidemic) எனப் பெயரிடப்படும். அதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது உலகம்பரவுநோய் (pandemic) என அழைக்கப்படும்[1].

உலகம்பரவு நோய் வரலாறு

[தொகு]
  • கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது[1].
  • 1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘கறுப்பு இறப்பு காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.
  • 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான பெரியம்மை (smallpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), தைஃபசு (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518–1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது[2].
  • 1556–1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான இன்ஃபுளுவென்சா எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது[2].
  • சின்ன அம்மை நோயினால், 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 60 மில்லியன் மக்கள் இறந்தார்கள்[3]. இது வருடமொன்றுக்கு 400,000 மக்கள் இறப்பைக் கொண்டிருந்தது[4]. ஐந்து வயதுக்குட்பட்ட 80% ஆன குழந்தைகளை உள்ளடக்கியிருந்த, தொற்றுக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 30% ஆனோர் இந்நோய்த் தாக்கத்தினால் இறந்து போக, ஒன்றில் மூன்று பங்கினர் குருடாகினர்[5].
  • 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது[6]. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.
  • 1918ஆம் ஆண்டில் பரவிய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது[7].
  • தற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 – 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.
  • 2009 ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் எனும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது 1918ஆம் ஆண்டில் பரவி, மக்கள் இறப்பை ஏற்படுத்திய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா விற்கான நோய்க்காரணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவற்றிலிருந்து வேறுபட்டு உருவாகிய புதிய வகையாக (strain) காணப்படுகிறது. [2][3].

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது[4]. இவற்றில் 90% இறப்பை, நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia), இன்ஃபுளுவென்சா போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், எய்ட்சு என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், காசநோய் (Tuberculosis), மலேரியா (Malaria), தட்டம்மை அல்லது சின்னமுத்து (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன [5].

மேலதிக இணைப்புக்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Infectious and Epidemic Disease in History
  2. 2.0 2.1 Dobson, Andrew P. and E. Robin Carter (1996) Infectious Diseases and Human Population History (full-text pdf) Bioscience;46 2.
  3. Smallpox. North Carolina Digital History.
  4. Smallpox and Vaccinia. National Center for Biotechnology Information.
  5. Smallpox: The Triumph over the Most Terrible of the Ministers of Death
  6. Multidrug-Resistant Tuberculosis. Centers for Disease Control and Prevention.
  7. "Influenza of 1918 (Spanish Flu) and the US Navy". Archived from the original on 2006-02-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொற்றுநோய்&oldid=3559704" இலிருந்து மீள்விக்கப்பட்டது