புற நரம்பு மண்டலம்

மனிதனின் நரம்புத் தொகுதி, சிவப்பு நிறம் - மைய நரம்பு மண்டலம், நீல நிறம் - புற நரம்பு மண்டலம்

புற நரம்பு மண்டலம் அல்லது புற நரம்புத் தொகுதி (Peripheral Nervous System - PNS) எனப்படுவது, நரம்புத் தொகுதியின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், அத் தொகுதியின் மைய நரம்பு மண்டலம் தவிர்ந்த ஏனைய உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை நரம்பு நாண்கள் (nerve cord), முண்ணாண் (spinal cord), மூளை என்பவற்றுடன் இணைக்கும் நரம்புகளையும் கொண்டது. மையநரம்புத் தொகுதியுடன், கண், காது போன்ற உணர் உறுப்புக்களையும், தசைகள், குருதிக் கலன்கள், சுரப்பிகள் போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கிறது.

மைய நரம்பு மண்டலம் போலன்றி, புற நரம்பு மண்டலமானது எலும்புகளால் சூழப்பட்டிருப்பதில்லை. இதனால் பாதுகாப்பின்றி நச்சுப்பொருள் மற்றும் பொறிமுறைத் தாக்கங்களுக்கு உட்படலாம். இந்த நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உண்டு. அவையாவன: இச்சைவழி இயக்கப்படும் உடல்சார் நரம்புத் தொகுதி (Somatic nervous system), இச்சையின்றி இயங்கும் தன்னிச்சை நரம்புத் தொகுதி (Autonomic nervous system). இவற்றுடன் உணர்வுத் தொகுதியும் இணைந்து இயங்குகின்றது.

விழித்திரை நரம்பு மற்றும் மண்டையோட்டு நரம்பு என்பனவும் புற நரம்பு மண்டலத்தையே சாரும். மண்டையோட்டு நரம்புகளின் நரம்புக் கலத்திரள் (ganglia) மூளையினுள் இருந்தாலும், அவற்றின் நரம்பிழைகள் (axons) மூளைக்கு வெளியாக அமைந்திருப்பதனால், இவை புற நரம்பு மண்டலத்தையே சாரும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. James S. White (21 March 2008). Neuroscience. McGraw-Hill Professional. pp. 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071496230. பார்க்கப்பட்ட நாள் 17 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற_நரம்பு_மண்டலம்&oldid=2108371" இலிருந்து மீள்விக்கப்பட்டது