மணிப்பூரின் வரலாறு
மணிப்பூர் வரலாறானது (பழங்காலத்தில் கங்கலிபாக்) தொல்லியல் ஆராய்ச்சி, தொன்மவியல் மற்றும் எழுதப்பட்ட வரலாறை பிரதிபலிக்கிறது.
பண்டையக் காலம் தொட்டு, மிட்டி மக்கள் உயர்ந்த மலைகளுக்கு ஊடாக இருந்த மணிப்பூர் பள்ளத்தாக்கிலும் மலைப்பகுதிகளிலும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். மிட்டி பன்கள் (முஸ்லீம்) மக்கள் பள்ளத்தாக்குப் பகுதியில் 1606 ஆம் ஆண்டுக்குப் பின் மிய்டிங்கு காகிம்பா ஆட்சிகாலத்தில் குடியேறினர். அப்போதிருந்து, அவர்கள் மிட்டி மக்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தனர்.
1891 இல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் மணிப்பூர் சுதேச அரசாக இருந்தது ; கடைசியில் பல சுதந்திர அரசுகள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின்போது, மணிப்பூரானது சப்பான் மற்றும் நேச நாட்டுப் படைகளுக்கு இடையிலான போர்க்களமாக இருந்தது.
போர் முடிந்த பிறகு, மணிப்பூர் அரசியலமைப்பு சட்டம், 1947 இன்படி மணிப்பூர் குடியரசு வடிவம் பெற்றது அதன்படி நிர்வாக தலைமையில் மகாராஜாவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அரசாங்கமும் நிறுவப்பட்டது. 1949 ஆம் ஆண்டு, மணிப்பூர் மன்னர் போதசந்திர மேகாலய மாநிலத் தலைநகரான ஷில்லாங்குக்கு வரவழைக்கப்பட்டு, தன்நாட்டை அவர் இந்திய ஒன்றியத்தில் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி மணிப்பூர் 1949 அக்டோபரில் இந்தியக் குடியரசின் பகுதியாக மாறியது, அதன் பின்னர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.[1] 1956 இல் மணிப்பூர் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.[2] 1972 இல் மாநிலத் தகுதியைப் பெற்றது.[3] 1972 இல் முகமது அலிமுதின் மணிப்பூரின் முதல் முதலமைச்சர் ஆனார்.[4]
பெயரியல்
[தொகு]மணிப்பூர் அதன் வரலாற்றுக்காலம் முழுக்க மித்ரபாக், கங்லிபாக், மீதிலிபாக்[5] போன்ற இருபது வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[6]
மணிப்பூரும் அதன் மக்களும் வரலாற்றின் பிற்பகுதியில், அவர்களின் அண்டை பிரதேசத்தினரால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படனர். காசி என இப்பகுதியை மியான்மரின் ஷான்ஸ் அல்லது பொங்ஸ் மக்களும், கத்தி என பர்மியர்களும், மெக்லீ என அசாமியர்களும் அழைத்தனர். 1762 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இப்பகுதி மன்னரான மிய்டிங்கு சிங்தாங்கோம்பா (பாக்கியசந்திரன்) ஆகியோருக்கு இடையே கையெழுத்தான முதல் உடன்படிக்கையில், இந்த ராஜ்யத்தின் பெயர் மிக்லே என்று பதிவு செய்யப்பட்டது. பாக்யசந்திரன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மணிப்புரீஸ்வரா அல்லது மணிப்பூர் அரசர் என்ற தங்கள் பட்டத்தை பொறித்த காசுகளை வெளியிட்டனர். பிற்காலத்தில் நடந்த, சமஸ்கிருதமயமாக்கல் வேலையான, தரணி சம்ஹிதா (1825-34) என்னும் புனைவால் மணிப்பூர் என்ற பெயர் பிரபலமானது.[7]
பழங்கால மணிப்பூர்
[தொகு]- நொன்கடா லய்ரின் பகன்கபா (கி.பி. 33-154) என்பவரே மணிப்பூர் ( மீடிலிபாக் அல்லது கங்லிபாக் ) நாட்டை உருவாக்கி ஆண்டவராவார்.
பகன்கபாவுக்குப் பிறகு அவரது மகன், குய்யோய் டோம்போக், கி.பி. 154 ஆட்சிக்கு வந்தார். இவர் புங் என்றும் பறையைக் கண்டுபிடித்தவர் என்று கருதப்படுகிறது. இவரது ஆட்சிக் காலம் அமைதியான காலமாக இருந்தது. மேலும் இவர்காலத்தில் உலோகத் தொழில்நுட்ப புதுமைகள் கொண்ட காலமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- லோயமாபா (கி.பி.1074-1122 ) ஆட்சிக்காலமானது இப்பகுதியின் ஆட்சிக்காலத்தில் முதன்மையான காலகட்டமாக கருதப்படுகிறது. இவர் "சிறப்பான சட்டங்களை ஏற்படுத்தியவர்" என அழைக்கப்பட்டார். இவர் நாட்டின் இராணுவத்தை ஒருங்கிணைத்து பலப்படுத்தினார், லோயமாபா காலத்தில் நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இந்தச் சீர்திருத்தங்கள் அடுத்த ஏழு நூற்றாண்டுகளுக்கு அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருந்தது.
வைணவக் காலம்
[தொகு]வைணவ சமயம் இடைக்காலத்தில் மணிப்பூருக்கு வந்தது இதனால் மணிப்பூர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. மிட்டி எழுத்துகள் வங்கமொழிக்கு மாற்றப்பட்டான.
- மிடிங்கு பம்ஹிபா (1709–1748):
பம்ஹிபா 1709 ஆகத்து 23 நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரது பாரசீகப் பட்டப் பெயர் கரிப்னிவாஜ், இதன் பொருள் "எழைகளின்மீது அன்பு காட்டுபவன்", என்பதாகும் இப்பட்டத்தை இவருக்கு முஸ்லீம் குடியேறிகளால் வழங்கப்பட்டது, இதை ஏற்ற இவர் தான் வெளியிட்ட காசுகளில் இப்பட்டத்தைப் பொறித்தார்.
பாம்ஹிபாவின் இராணுவ வெற்றிகளை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டமாக (1710-17) உள்பகுதி மலைப் பழங்குடியினர் பகுதிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்ததினார். இரண்டாம் கட்டம் (1728-33), பர்மாவின் அவா நாட்டுக்கு எதிரான போர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக (1745-48) வடகிழக்கில் திரிபுராவுக்கு எதிரான போர் நடவடிக்கை ஆகும். இதன் விளைவாக, பாம்ஹிபா தனது பேரரசை கபோ பள்ளத்தாக்கிலிருந்து, அதன் கிழக்கே நோன்ங்னாங் (கசர்), மேற்கில் டக்கால் (திரிபுரா) வரையிலும் விரிவுபடுத்தினார்.
வைணவத்தை ஏற்றல்
[தொகு]பாம்ஹிபா ஒரு சமய சீர்திருத்தவாதியாகவும் இருந்தார் இவரது ஆதரவுடன் ஸ்ரீ வைணவ சைதன்யா பள்ளிகளினால் கௌதியா வைணவம் படிப்படியாக அப்பகுதி முழுவதும் பரவியது.
சமசுகிருதமயமாதல்
[தொகு]வைணவத்தின் பரவலை அடுத்து நாட்டில் சமசுகிருதமயமாக்கம் வேகமாக நடந்தது. இதனால் மீடிலிபாக் அல்லது கங்லிபாக் என அழைக்கப்பட்ட பிரதேசமானது "மணிப்பூர்" ஆக மாற்றப்பட்டது. பல்வேறு இடங்களின் பெயர்கள் மிட்டி மொழியில் இருந்து சமசுகிருதத்துக்கு மாற்றப்பட்டன. 1717 மற்றும் 1737 இடையே, சமஸ்கிருத காவியங்களான மகாபாரதமும், இராமாயணமும் மிட்டி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. மன்னரும் அனைத்து மிட்டிகளும் சத்திரியர்களாக மாற்றப்பட்டனர்.
பம்பிஹிபாவின் நாற்பதாண்டுகால ஆட்சியில் சமய சீர்திருத்தம், இராணுவ வெற்றி, கலாச்சார மற்றும் இலக்கிய சாதனைகள் போன்றவை நிறைந்ததாக இருந்தது. இவரது காலத்தில் பலவேறு காசுகள் வெளியிடப்பட்டன இவற்றில் இவரின் பல்வேறு பட்டங்களான: ‘மணிப்புரீசுவர்’, ‘மிகிலேஸ்வர்’, ’கரிபனிவஜா’ போன்றவை பொரிக்கப்பட்டன.
இவர் 1748 ஆம் ஆண்டு தனது பதவியைத் துறந்து தன் மகன் சிட் சாய் (1748-52) அரியனை ஏற வழிவகுத்தார், 1752 இல் சிட் சாய் தன் சகோதரர் பாரத் சாயிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். 1753 இல் பாரத் சாயை ஆட்சியில் இருந்து நீக்கி கௌரசயாமால் (1753–58) ஆட்சிக்கு வந்தார். 1758, இல் பர்மிய அரசர் அலவுங்பையாவின் படையெடுப்புக்கு நாடு ஆளானது.
- மிடிங்கு சிங்தாங் கோம்பா அல்லது மகாராஜா பாக்கியசந்திரன் (1749–1798)
1764 இல் பர்மாவின் புதிய மன்னர் ஹசின்பையூசின் கபாவ் மீண்டும் மணிப்பூர் மீது படையெடுத்தார். மிட்டி படைகள் தோற்கடிக்கப்பட்டன இதனால் அரசர் பாக்கியசந்திரன் அகோம் நாட்டுக்கு (அசாம்) தப்பி ஓடினார். பின்னர் இவர் அகோம் மன்னர் ராஜேஸ்வர் உதவியுடன் 1768 இல் சிம்மாசனத்தில் மீண்டும் ஏறி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார், 1762 இல் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவரது ஆட்சிக்காலத்தின் அடையாளமாக வைணவ சைதன்யா பள்ளிகள் விளங்கின இது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அதன்பின்னர், மணிப்பூரானது வங்க மொழி மற்றும் அதன் இலக்கிய செல்வாக்கின் கீழ் வந்தது. இக்காலத்தில் பாக்யசந்திரன் "ராஜரிஷி 'என்ற பட்டம் பெற்று இராஜ குருவாகவும் மதிக்கப்பட்டார்.
ஆங்கிலோ பர்மியர் நிகழ்வுகள்
[தொகு]இக்காலகட்டத்தில் பல போர்கள் இப்பகுதியில் மிட்டிஸ், பர்மியர் மற்றும் பிரித்தானியர் இடையே நடந்தன.
- மிடிங்கு மர்ஜித் (1813–1819)
பர்மிய அவா இராச்சியத்தின் உதவியுடன், மர்ஜித் 1813 இல் படையெடுத்துவந்து கங்லிபாக்கை ஆண்டுவந்த தன் சகோதரன் சௌரஜித்தைத் தோற்கடித்து, 1813 இல் அரியனை ஏறிய மர்ஜித் ஆறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
சாஹ தாரிட் குந்தடகபா, ஏழாண்டு பேரழிவு (1819–26)
[தொகு]மிய்டிர்பாக்கானது பர்மிய படையெடுப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் இல்லாமல் இருந்தது. பர்மாவின் அவா இராச்சியத்தின் புதிய மன்னரான பக்யிடாவ் தனது முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளவும், தனக்கு கப்பம் செலுத்தவும் மர்ஜித்தை அழைத்தார். ஆனால் மர்ஜித் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார், இதனால் எரிச்சலுற்ற பர்மிய மன்னர் தனது தளபதி மகா பந்துல தலைமையில் ஒரு பெரிய படையை மர்ஜித்துக்கு எதிராக அனுப்பினார். போரில் தோற்ற மர்ஜித் கசார் என்ற பகுதிக்கு ஓடிப்போனார். இதன்பின்னர் மெய்டராபாக் 1819 முதல் 1826 வரை ஏழு ஆண்டுகள், அவா ஆட்சியின் கீழ் இருந்தது, மிய்டிர்பாக் பர்மாவால் கைப்பற்றப்பட்ட காலத்துடன் மிய்டிர்பாக்கின் இடைக்கால வரலாறு முடிவடைகிறது.
கசாரில் மிய்டிபாக்கின் இளவரசர்கள்
[தொகு]பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மிய்டிர்பாக்கிலிருந்து வெளியேறி, அதன் இளவரசர்கள் கசார் பிரதேசத்தில் இருந்த நிலையில், அந்தப் பிரதேசத்தை யார் ஆளவது என்ற போட்டியில் இருந்தனர். 1819 இல், முன்று சகோதரர்கள் கசார் பகுதியை ஆக்கிரமித்தனர், கோவிந்த சந்திரன் பிரதேசத்திலிருந்து வெளியேறி சில்ஹெட்டுக்குச் சென்றார். முன்னதாக கசார் பேரரசு 1818 ஆம் ஆண்டில் கோவிந்த சந்திரன மற்றும் சாவுராஜித் ஆகியோரிடையே பிரிக்கப்பட்ட நிலையில், மீய்டிர்பாக்கின் மூன்று இளவரசர்கள் சேர்ந்து கோவிந்த சந்திரனை எதிர்த்து அவரை வெளியேற்றினர். கசாரின் கிழக்குப்பகுதியில் மெய்டிபார்க் பகுதிவரையான பகுதிகளை சௌரஜித் சொனாயிலிருந்து ஆண்டார். கம்பீர் சிங் தில்லான் மலைகளின் மேற்குப் பகுதியில் உள்ள நிலப்பரப்பை கும்ராஹாவை தலைநகராகக்கொண்டு ஆண்டார், மர்ஜித் சிங் ஹய்லாகண்டியை ஜாப்ரிபோண்டிலிருந்து ஆண்டார்.
- மிடின்குனக் கம்பீர் சிங் (1826–1834)
இவர் ஆற்றல்மிக்க திறமையான 500 மீட்டி வீரர்கள் மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் உதவியுடன், கம்பீர் சிங் அவா பகுதியை நெடுங்காலமாக ஆக்கிரமித்து இருந்த பர்மியர்களை நிங்தி துரலுக்கு (சிந்திவின் ஆறு) அப்பால் விரட்டினார். இவர் நாட்டை லங்தபாலில் இருந்து ஆண்டார். இவர் 1832 சனவரி 9 அன்று இறந்தார். இதன்பிறகு இவரது குழந்தைப் பருவ மகனான சந்திரகீர்த்தி / நிங்திம் பிஷாக் (1834–1844) அரியனை ஏற்றப்பட்டார்.
- மிடின்குனகு நரா சிங் (1844–1850)
இவர் கம்பீர் சிங்கின் நெருங்கிய உறவினர் மற்றும் பிரதிநிதியாவார். கம்பீர் சிங்கின் மனைவி நரா சிங்மீது அதிருப்தியுற்று தன் மகனுடன் அசாமின் கசார் பகுதிக்குத் தப்பிச் சென்றார். மிய்ட்ரிபாக் மக்களின் விருப்பத்திற்கேற்ப இவர் 1844 இல் தன் 51 ஆம் வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். பின்னர் இவர் தலைநகரை லங்தபாலில் இருந்து காங்லாவுக்கு மாற்றினார். நரா சிங் 1850 ஏப்ரல் 10 அன்று இறந்தார். அவருக்குப்பிறகு அவரது சகோதரர் மிடின்குனாகு தீபேந்திர சிங் பதவிக்கு வந்தார்.
- கசாரில் இருந்து திரும்பிவந்த சந்திரகீர்த்தி (1850–86) தீபேந்திர சிங்கை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை 1850 இல் கைப்பற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் , காங்லாவில் இருந்த புனிதத்தலங்களை மேம்படுத்தி பராமரித்தார். மேலும் காங்லாவில் பாதுகாப்புமிக்க, உள் மற்றும் வெளி அகழிகளைக்கொண்ட, செங்கல் சுவர்கள் மற்றும் மண்ணாலான பாதுகாப்பு அரண்களுடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு சூழப்பட்ட பகுதியின் மையத்தில் அரண்மனையை அமைத்தார. இவர் 1886 பெப்ரவரி 20 அன்று இறந்தார்.
மணிப்பூர் பயணம்
[தொகு]சந்திரகீர்த்தியின் மறைவுக்குப்பின் அவரது மகன் மிடின்குனகு சூர்சந்திரன் (1886–90) ஆட்சிக்கு வந்தார் அப்போது 1885 இல் அவருக்கு எதிராக சனா போரசோபா மற்றும் தினசந்திரன் ஆகியோர் தலைமையில் கலகம் வெடித்தது, இந்த -முயற்சி தோல்வியைத் தழுவியது. என்றாலும், 1890 செப்டம்பர் 21, இளவரசர் சிலா நகம்பா மற்றும் அக்கோவ்சனா ஆகியோர் படைத்தலைவர் திகேந்திசித் ஆதரவுடன், சூரிசந்திரனுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர், இதனால் சூர்சந்திரன் பதவியைத் துறந்து மெய்டிராபாக்கை விட்டு வெளியேறி பிரிந்தாபனுக்குச் (பிருந்தாவனம்) சென்றார். இவரது சகோதரர் குலசந்திர சிங் 1890 இல் அரியனை ஏறினார், சேனாபதியான திகேந்திசித் திரை மறைவிலிருந்து ஆட்சி செய்தார். சூர்சந்திரன் தன் சிம்மாசனத்தை மீட்டுத் தருமாறு இந்திய அரசை கோரினார் ஆனால் பிரித்தானிய அரசு குலச்சந்திரனை மன்னராக அங்கீகரித்தது, மேலும் அரண்மனையில் புரட்சியில் ஈடுபட்ட யுவராஜ் திகேந்திரசித்தை கைது செய்தது.[8]
அசாம் தலைமை ஆணையர், ஜேம்ஸ் வாலஸ் குவிண்டோன் இந்திய அரசின் ஆணையுடன் மணிப்பூருக்கு கிளம்பினார் அவருடன் கர்னல் சார்லஸ் மேக் டொனால்ட் தலைமையில் 400 படையினரையும் அழைத்து வந்தார், இந்த நிகழ்வு 1891 ஆம் ஆண்டைய ஆங்கிலோ-மணிப்பூர் போருக்கு வழிவகுத்தது.
ஆங்கிலேய மணிப்பூர் போரின் போர்களங்களில் மிட்டி வீரர்கள் பலர் இறந்தனர் போரின் முடிவில் மெய்ட்ராபாக். தோல்வியுற்று 27 ஏப்ரல் 1891 இல் பிரித்தானியரிடம் அதன் சுதந்திரத்தை இழந்தது. தளபதி தங்கல் மேஜர், இளவரசர் திகேந்திரஜித் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் பங்கேற்ற இதர இளவரசர்கள் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இதன்பிறகு பிரித்தானிய அரசு மிடின்குனகு சூரசந்த் சிங் (1891-1941), என்ற சிறுவனை மெந்டுராபாக் அரசராக தெரிவுசெய்தனர். இவருக்கு புதியதாக காங்கலா அரண்மனையானது வாங்கேயில் கட்டப்பட்டது மேலும் காங்கலா பிரித்தானிய ஆக்கிரமிப்பில் வைக்கப்பட்டது. பிரித்தானிய காலனிய ஆட்சியின் போது, காங்கலா மணிப்பூர் கோட்டை என்று அறியப்பட்டது மேலும் அங்கு அசாம் ரைபிள் படைப்பிரிவு ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிரபல மிட்டி எழுத்தாளரான, எம்.கே. பினோதினி தேவி (1922-2011) அரசரின் இளைய மகளாவார்.[9]
இரண்டாம் உலகப் போர்
[தொகு]போரின்போது ஜப்பனிய விமானப்படை விமானங்கள் மணிப்பூர் தலைநகர் இம்பால்மீது தாக்குதல் தொடுக்க வந்தன. முதல் குண்டு வீச்சு 1942 மே 10 அன்று நடந்தது இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். மற்றொரு விமானத் தாக்குதலில் 16 மே அன்று நிகழ்ந்தது .
1944 இல் ஜப்பானிய பேரரசின் தாக்குதலை எதிர்கொள்ள, பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் இம்பால் அருகே நிறுத்திவைக்கப்பட்டன.
1947 இல் பிரித்தானியர் மணிப்பூரைவிட்டு வெளியேறினர்.
1947க்குப் பிறகு
[தொகு]இந்திய ஒன்றியத்தில் மணிப்பூர்
[தொகு]1947 இல் ஆங்கிலேயர் வெளியேறியபிறகு மணிப்பூரில் இயற்றப்பட்ட மணிப்பூர் அரசியலமைப்பு சட்டம், 1947 இன்படி மணிப்பூர் குடியரசு வடிவம் பெற்றது அதன்படி நிர்வாக தலைமையில் மகாராஜாவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அரசாங்கமும் நிறுவப்பட்டது. 1949 ஆம் ஆண்டு, மணிப்பூர் மன்னர் போதசந்திர சிங் மேகாலய மாநிலத் தலைநகரான ஷில்லாங்குக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரைப் பணிய வைக்க இந்திய ராணுவம் அசாம் பகுதியில் தயார் நிலையில் இருந்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு 21 செப்டம்பரில் அவர் கையெழுத்திட நேர்ந்தது. இந்த இணைப்பு அக்டோபர் 15, 1949 அன்று அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.
மன்னரின் கையொப்பத்தைத் தொடர்ந்து அதுவரை மணிப்பூர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்பட்டு வந்த சட்டசபை கலைக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் ராவல் அமர் சிங் என்ற அதிகாரியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பின்பு துணைநிலை மாநிலமாக மாறியது, மக்களின் நீடித்த போராட்டத்துக்குப் பிறகு 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் 1963இல் செயல்படத் தொடங்கியது. தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்து ஐக்கியத் தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் அமைதியான போராட்டங்களைத் தொடர்ந்து 1972 சனவரியில் மணிப்பூர் தனி மாநிலமாக உருவானது.[10]
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்
[தொகு]பக்கத்து மாநிலங்களில் நாகா, மிசோ போன்ற இனக் குழுக்களின் இடையில் தோன்றிய ஆயுதக் குழுக்களைப் பின்பற்றி, 1980-களில் மணிப்பூரிலும் தங்கள் தனித்தன்மையைக் காக்க ஆயுதக் குழுக்கள் தோன்றின. இவர்களது தனித் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன. இதையடுத்து 1980 களில் இந்த ஆயுதக் குழுக்களுக்குள்ளான தாக்குதல்களை ஒடுக்கும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டு, ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் நிறுவப்பட்டது. இந்தக் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு அண்மையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.[11]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Manipur Merger Agreement, 1949". Satp.org. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ "The Constitution (Amendment)". Indiacode.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ [1]
- ↑ http://twocircles.net/2014nov21/1416545962.html#.
- ↑ Laininghan Naoria Phulo, Meetei Haubham Wari (The Origin History of Meiteis), 1934.
- ↑ Naorem Sanajaoba, Manipur Past and Present, Mittal Publication, Delhi, 2005
- ↑ Gangmuei Kabui, History of Manipur, National Publishing House, Delhi, 1991.
- ↑ Imperial Gazetteer of India, v. 17, p. 186.
- ↑ "Manipuri author Binodini Devi dies at 89". இந்தியன் எக்சுபிரசு. 19 January 2011. http://www.indianexpress.com/news/briefly-nation/739280/.
- ↑ வீ.பா.கணேசன் (29 நவம்பர் 2016). "போராடிப் பெற்ற மணிப்பூர்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Fight against AFSPA: Sharmila says she has changed her strategy". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
[தொகு]- Cheitharol Kumbaba, Ed - Lairenmayum Ebungohal and Nithoukhongjam Khelchandra, Pub- Manipuri Sahitya Parishad, Imphal, 1967.
- The Royal Chronicle of Manipur, the Cheitharol Kumbaba Ed. and Trans.- Saroj Nalini Arambam Parratt (London: Routledge, 2005).