முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போர்
மேல் இடமிருந்து வலமாக: சொம்மே யுத்தத்தில் பிரித்தானிய செசயர் தரைப்படைப் பிரிவு (1916); மத்திய கிழக்கு போர் முனைக்குப் புறப்படும் உதுமானிய அரபு ஒட்டகப் படைப்பிரிவு (1916); அல்பியோன் நடவடிக்கையின் (1917) போது செருமனியின் எஸ். எம். எஸ். குரோசர் குர்புர்சுது கப்பல்; வெர்துன் யுத்தத்தின் போது செருமானிய வீரர்கள் (1916); உருசியர்களின் பிரிசேமைசில் முற்றுகைக்கு (1914–15) பிறகு; மொனாசுதிர் தாக்குதலின் போது பல்கேரியத் துருப்புக்கள் (1916).
நாள் 28 சூலை 1914 – 11 நவம்பர் 1918
(4 ஆண்டுகள், 3 மாதங்கள், 2 வாரங்கள்)
அமைதி ஒப்பந்தங்கள்
  • வெர்சாய் ஒப்பந்தம்
    28 சூன் 1919
    (4 ஆண்டுகள், 11 மாதங்கள்)[a]
  • செயின் செருமைன் என் லாயே ஒப்பந்தம்
    10 செப்டம்பர் 1919
    (5 ஆண்டுகள், 1 மாதம், 1 வாரம், 6 நாட்கள்)
  • நியூல்லி சுர் செயினே ஒப்பந்தம்
    27 நவம்பர் 1919
    (4 ஆண்டுகள், 1 மாதம், 1 வாரம், 6 நாட்கள்)[b]
  • திரியனோன் ஒப்பந்தம்
    4 சூன் 1920
    (5 ஆண்டுகள், 10 மாதங்கள், 1 வாரம்)
  • செவ்ரேசு ஒப்பந்தம்
    10 ஆகத்து 1920
    (6 ஆண்டுகள், 1 வாரம், 6 நாட்கள்)[c]
  • ஐக்கிய அமெரிக்க-ஆத்திரிய அமைதி ஒப்பந்தம்
    24 ஆகத்து 1921
    (3 ஆண்டுகள், 8 மாதங்கள், 2 வாரங்கள், 3 நாட்கள்)[d][e]
  • ஐக்கிய அமெரிக்க-செருமானிய அமைதி ஒப்பந்தம்
    25 ஆகத்து 1921
    (4 ஆண்டுகள், 4 மாதங்கள், 2 வாரங்கள், 5 நாட்கள்)[f]
  • ஐக்கிய அமெரிக்க-அங்கேரி அமைதி ஒப்பந்தம்
    29 ஆகத்து 1921
    (3 ஆண்டுகள், 8 மாதங்கள், 3 வாரங்கள், 1 நாள்)[g]
  • இலௌசன்னே ஒப்பந்தம்
    24 சூலை 1923
    (8 ஆண்டுகள், 8 மாதங்கள், 3 வாரங்கள், 4 நாட்கள்)[h]
இடம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள், சீனா, இந்தியப் பெருங்கடல், வடக்கு மற்றும் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடல்
நேச நாடுகள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
  • யுகோஸ்லாவியா, வெய்மர் செருமனி, போலந்து, சோவியத் ஒன்றியம், லித்துவேனியா, எசுத்தோனியா, லாத்வியா, ஆத்திரியா, அங்கேரி, செக்கொஸ்லோவாக்கியா, துருக்கி, எசசு, மற்றும் ஏமன் போன்ற புதிய நாடுகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உருவாக்கப்படுதல்
  • செருமானியக் காலனிகளும், நிலப்பரப்புகளும் மற்ற நாடுகளுக்கு மாற்றி வழங்கப்படுதல், உதுமானியப் பேரரசு பிரிக்கப்படுதல், ஆத்திரியா-அங்கேரி கலைக்கப்படுதல்
பிரிவினர்
நேச நாடுகள்: மைய சக்திகள்:
தளபதிகள், தலைவர்கள்
  • பிரெஞ்சு மூன்றாம் குடியரசு இரேமன்ட் பொயின்கேர்
  • பிரெஞ்சு மூன்றாம் குடியரசு சியார்சசு கிளமென்சியே
  • பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் ஐந்தாம் ஜோர்ஜ்
  • பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் எர்பெர்டு என்றி அசுகுயித்
  • பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் தாவீது லொல்லாய்டு சியார்ச்
  • இரண்டாம் நிக்கலாசு மரணதண்டணை
  • Russian Republic அலெக்சாண்டர் கெரென்சுகி
  • செர்பியா இராச்சியம் முதலாம் பேதுரு
  • பெல்ஜியம் முதலாம் ஆல்பெர்ட்
  • சப்பானியப் பேரரசு பேரரசர் தைசோ
  • மாண்டினிக்ரோ இராச்சியம் முதலாம் நிக்கோலசு
  • இத்தாலி இராச்சியம் மூன்றாம் விக்டர் எம்மானுவேல்
  • இத்தாலி இராச்சியம் விட்டோரியோ ஓர்லான்டோ
  • ஐக்கிய அமெரிக்கா ஊட்ரோ வில்சன்
  • உருமேனியப் பேரரசு முதலாம் பெர்டினான்ட்
  • எசசு இராச்சியம் உசேன் பின் அலி
  • கிரேக்க நாடு எலெப்தோரியோசு வெனிசெலோசு
  • தாய்லாந்து நான்காம் இராமா
  • சீனக் குடியரசு (1912-1949) பெங் குவோசங்
  • சீனக் குடியரசு (1912-1949) சூ சிச்சாங்
    மற்றும் பிறர் ...
  • செருமானியப் பேரரசு இரண்டாம் வில்லியம்
  • ஆத்திரியா-அங்கேரி முதலாம் பிரான்சு யோசோப்பு[k]
  • ஆத்திரியா-அங்கேரி முதலாம் சார்லசு
  • உதுமானியப் பேரரசு ஐந்தாம் மெகுமெது[l]
  • உதுமானியப் பேரரசு ஆறாம் மெகுமெது
  • உதுமானியப் பேரரசு மூன்று பாசாக்கள்
  • பல்கேரியப் பேரரசு முதலாம் பெர்டினான்ட்
    மற்றும் பிறர் ...
பலம்
மொத்தம்: 4,29,28,000[1] மொத்தம்: 2,52,48,000[1]
6,81,76,000 (ஒட்டு மொத்தம்)
இழப்புகள்
  • இராணுவ இறப்பு: 55,25,000
  • இராணுவத்தில் காயமடைந்தவர்கள்: 1,28,32,000
  • மொத்தம்: 1,83,57,000
  • குடிமக்கள் இறப்பு: 40,00,000
  • இராணுவ இறப்பு: 43,86,000
  • இராணுவத்தில் காயமடைந்தவர்கள்: 83,88,000
  • மொத்தம்: 1,27,74,000
  • குடிமக்கள் இறப்பு: 37,00,000

முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன. சண்டைகளில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2.3 கோடி இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கை, பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக 50 இலட்சம் குடிமக்கள் இறந்தனர்.[2] உதுமானியப் பேரரசுக்குள் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் 1918 இன்புளுவென்சா தொற்றுப் பரவல் ஆகியவற்றின் காரணமாகத் தசம இலட்சங்களில் மேலும் பலர் இறந்தனர். போரின் போது இராணுவ வீரர்களின் பயணம் காரணமாக நோய்த் தொற்றானது கடுமையானது.[3][4]

1914க்கு முன்னர் ஐரோப்பிய உலக வல்லமைகள் முந்நேச நாடுகள் (பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன்) மற்றும் முக்கூட்டணி நாடுகள் (செருமனி, ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலி) ஆகிய இரு பிரிவாகப் பிரிந்து இருந்தன. ஆத்திரியா-அங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டைக் காவ்ரீலோ பிரின்சிப் என்ற ஒரு போசுனிய செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து, பால்கன் குடாவில் இருந்த பதட்டங்கள் 28 சூன் 1914 அன்று போராக உருவெடுத்தன. ஆத்திரியா-அங்கேரி செர்பியாவை இதற்குக் குற்றம் சாட்டியது. இது சூலை பிரச்சினைக்கு இட்டுச் சென்றது. சண்டையைத் தவிர்ப்பதற்காக ஒரு வெற்றியடையாத முயற்சியாக நடந்த பேச்சுவார்த்தையே சூலைப் பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது. 28 சூலை 1914 அன்று ஆத்திரியா-அங்கேரி செர்பியா மீது போரை அறிவித்தது. செர்பியாவின் தற்காப்பிற்காக உருசியா வந்தது. ஆகத்து 4ஆம் தேதி வாக்கில் செருமனி, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகியவை அவற்றின் காலனிகளுடன் போருக்குள் இழுக்கப்பட்டன. நவம்பர் 1914இல் உதுமானியப் பேரரசு, செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகியவை மைய சக்திகள் என்ற அமைப்பை உருவாக்கின. 26 ஏப்ரல் 1915இல் பிரிட்டன், பிரான்சு, உருசியா மற்றும் செர்பியாவுடன் இத்தாலி இணைந்தது. இவை முதலாம் உலகப் போரின் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன.

1914இல் செருமானிய உத்தியானது தனது படைகளைப் பிரான்சை ஆறு வாரங்களில் தோற்கடிப்பதற்குப் பயன்படுத்தி, பிறகு அவற்றைக் கிழக்குப் போர்முனைக்கு நகர்த்தி உருசியாவையும் அதே போல் தோற்கடிப்பது ஆகும்.[5] எனினும், செப்டம்பர் 1914இல் மர்னே என்ற இடத்தில் செருமானியப் படை தோற்கடிக்கப்பட்டது. மேற்குப் போர் முனையின் பக்கவாட்டில் இரு பிரிவினரும் எதிர்கொண்டதுடன் அந்த ஆண்டு முடிவடைந்தது. மேற்குப் போர்முனை என்பது ஆங்கிலேயக் கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து வரையில் தோண்டப்பட்டிருந்த ஒரு தொடர்ச்சியான பதுங்கு குழிகள் ஆகும். 1917 வரை மேற்கிலிருந்த போர் முனைகளில் சிறிதளவே மாற்றம் நிகழ்ந்து. அதே நேரத்தில், கிழக்குப் போர் முனையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டன. ஆத்திரியா-அங்கேரி மற்றும் உருசியா ஆகிய இரண்டு நாடுகளுமே பெரும் அளவிலான நிலப்பரப்பை வென்றும் இழந்தும் வந்தன. மற்ற முக்கியமான போர் அரங்குகளானவை மத்திய கிழக்கு, இத்தாலி, ஆசியா பசிபிக் மற்றும் பால்கன் பகுதி ஆகியவை ஆகும். பால்கன் பகுதியில் பல்கேரியா, உருமேனியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் போருக்குள் இழுக்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு முழுவதும் உருசியா மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகிய இரு நாடுகளுமே பெரும் அளவிலான உயிரிழப்புகளைக் கிழக்கில் சந்தித்தன. அதே நேரத்தில், கலிப்பொலி மற்றும் மேற்குப் போர் முனையில் நேச நாடுகளின் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. 1916இல் வெர்துனில் நடைபெற்ற செருமானியத் தாக்குதல்கள் மற்றும் சொம்மேயின் மீது நடத்தப்பட்ட பிராங்கோ-பிரித்தானியத் தாக்குதல் ஆகியவை சிறிதளவே பலனைக் கொடுத்து, ஏராளமான இழப்புகளுக்கு இட்டுச் சென்றன. அதே நேரத்தில், உருசியப் புருசிலோவ் தாக்குதலானது ஆரம்பத்தில் வெற்றிகரமாக அமைந்த போதும் பிறகு நிறுத்தப்பட்டது. 1917இல் உருசியாவில் புரட்சி ஏற்படும் நிலை இருந்தது. பிரெஞ்சு நிவெல் தாக்குதலானது தோல்வியில் முடிந்தது. பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானியப் படைகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தன. இது பங்கெடுத்த அனைத்து நாடுகளுக்கும் வீரர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. கடுமையான பொருளாதார அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்தது. நேச நாடுகள் கடல் முற்றுகை நடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறைங்கள் செருமனியைக் கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் முறையைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றன. இதனால் 6 ஏப்ரல் 1917 அன்று முன்னர் நடுநிலை வகித்த ஐக்கிய அமெரிக்கா போருக்குள் இழுக்கப்பட்டது.

உருசியாவில் 1917 அக்டோபர் புரட்சியில் போல்செவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மார்ச் 1918இல் பிரெசுது-லிதோவ்சுகு ஒப்பந்தத்துடன் போரில் இருந்து வெளியேறினர். பெருமளவு எண்ணிக்கையிலான செருமானியத் துருப்புகளை விடுதலை செய்தனர். இந்த மேற்கொண்ட வீரர்களைப் பயன்படுத்திச் செருமனியானது மார்ச் 1918இல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், பிடிவாதமான நேச நாடுகளின் தற்காப்பு, கடுமையான இழப்புகள் மற்றும் இராணுவப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. நேச நாடுகள் ஆகத்து மாதத்தில் நூறு நாட்கள் தாக்குதலைத் தொடங்கிய போது ஏகாதிபத்தியச் செருமானிய இராணுவமானது தொடர்ந்து கடுமையாகச் சண்டையிட்டது. ஆனால், நேச நாடுகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்த மட்டுமே அவர்களால் முடிந்தது. அதைத் தடுக்க இயலவில்லை.[6] 1918இன் இறுதியில் மைய சக்திகள் சிதைவுறத் தொடங்கின. 29 செப்டம்பர் அன்று பல்கேரியாவும், 31 அக்டோபர் அன்று உதுமானியர்களும், பிறகு 3 நவம்பர் அன்று ஆத்திரியா-அங்கேரியும் போர்நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. தாய் நாட்டில் செருமானிப் புரட்சியை எதிர் நோக்கி இருந்தது, கிளர்ச்சியில் ஈடுபடத் தயாராக இருந்த தனது இராணுவம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டது ஆகியவை காரணமாக 9 நவம்பர் அன்று இரண்டாம் வில்லியம் தனது பதவியைத் துறந்தார். புதிய செருமானிய அரசாங்கமானது 11 நவம்பர் 1918இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இது போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தத் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீது 1919-20ஆம் ஆண்டின் பாரிசு அமைதி மாநாடானது பல்வேறு ஒப்பந்தங்களை விதித்தது. இதில் பலராலும் அறியப்பட்ட ஒன்று வெர்சாய் ஒப்பந்தமாகும். 1917இல் உருசியப் பேரரசு, 1918இல் செருமானியப் பேரரசு, 1920இல் ஆத்திரியா-அங்கேரியப் பேரரசு மற்றும் 1922இல் உதுமானியப் பேரரசு ஆகியவற்றின் கலைப்புகள் பல்வேறு மக்கள் எழுச்சிகளுக்கு இட்டுச் சென்றன. போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோசுலாவியா உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன. இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ள ஒரு சில காரணங்கள், போருக்கு இடைப்பட்ட காலங்களின் போது இந்த எழுச்சி மூலம் ஏற்பட்ட நிலையற்ற தன்மையைக் கையாள்வதில் அடைந்த தோல்வி ஆகியவை செப்டம்பர் 1939இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பில் முடிந்தது.

பெயர்கள்

[தொகு]

உலகப் போர் என்ற சொற்றொடரானது முதன் முதலில் செப்டம்பர் 1914இல் செருமானிய உயிரியலாளர் மற்றும் தத்துவவாதியான ஏர்ன்ஸ்ட் ஹேக்கலால் முதலில் பயன்படுத்தப்பட்டது. 20 செப்டம்பர் 1914 அன்று த இன்டியானாபொலிஸ் ஸ்டார் பத்திரிகையில், "'ஐரோப்பியப் போர்' என்று அனைவரும் பயந்த இந்தப் போரின் போக்கு மற்றும் தன்மையானது … முழுவதும் பொருள் படக்கூடிய வகையில் முதலாம் உலகப் போர் என்றாகும் என்பதில் சந்தேகமில்லை"[7] என்று அவர் எழுதினார்.

முதலாம் உலகப் போர் என்ற சொற்றொடரானது சார்லசு ஏ கோர்ட் ரெபிங்டன் என்கிற ஒரு பிரித்தானிய இராணுவ அதிகாரியால் அவரது நினைவுக் குறிப்புகளுக்குத் தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டது. இக்குறிப்புகள் 1920இல் பதிப்பிக்கப்பட்டன. தனது நாட்குறிப்பில் 10 செப்டம்பர் 1918 அன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அதிகாரியான ஜான்ஸ்டோனுடன் இதைப் பற்றி விவாதித்ததற்காக இவர் குறிப்பிடப்படுகிறார்.[8][9] இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் 1914-1918இன் நிகழ்வுகள் பொதுவாகப் பெரிய போர் அல்லது எளிமையாக உலகப் போர் என்று அறியப்பட்டன.[10][11] 1914 ஆகத்து மாதத்தில் த இன்டிபென்டன்ட் என்ற பருவ இதழானது, "இது தான் அந்தப் பெரிய போர். இப்போர் இப்பெயரைத் தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது" என்று எழுதியது.[12] அக்டோபர் 1914இல் கனடா நாட்டுப் பருவ இதழான மெக்லீன் இதே போன்று, "சில போர்கள் தங்களுக்குத் தாமே பெயரைக் கொடுத்துக் கொள்கின்றன. இது தான் அந்தப் பெரிய போர்" என்று எழுதியது.[13] அக்கால ஐரோப்பியர்கள் இப்போரை, "போரை நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்று குறிப்பிட்டனர். மேலும், "அனைத்துப் போர்களையும் நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்றும் விவரித்தனர். அதற்கு முன்னர் நடந்திராத அளவில் இது நடைபெற்றது, அழிவு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக இது இவ்வாறு அழைக்கப்பட்டது.[14] 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்குப் பிறகு இச்சொற்றொடர்கள் தரப்படுத்தப்பட்டன. பிரித்தானியப் பேரரசின் கனடா நாட்டவர் உள்ளிட்ட வரலாற்றாளர்கள் "முதலாம் உலகப் போர்" என்ற பெயரை விரும்பிப் பயன்படுத்தினர். அமெரிக்கர்கள் "உலகப் போர் ஒன்று" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர்.[15][not in citation given]

பின்னணி

[தொகு]
முதலாம் உலகப் போருக்கு முந்தைய நிகழ்வுகள்
  1. செருமானிய ஒருங்கிணைப்பு 1864–71
  2. இரண்டாம் ஐரோப்பிய இசைக் கச்சேரி 1871
  3. பெரும் கிழக்குப் பிரச்சினை 1875–78
  4. போஸ்னியா படையெடுப்பு 1878
  5. இரட்டைக் கூட்டணி 1879
  6. முக்கூட்டணி 1882
  7. பல்கேரியப் பிரச்சினை 1885–88
  8. சமோவா பிரச்சினை 1887–89
  9. பிராங்கோ-உருசியக் கூட்டணி 1894
  10. ஆங்கிலேய-செருமானியக் கடற்படை ஆயுதப் போட்டி 1898–1912
  11. முப்பிரிவுக் கூட்டணி 1899
  12. நேசக் கூட்டணி 1904
  13. உருசிய-சப்பானியப் போர் 1904–05
  14. முதலாம் மொராக்கோ பிரச்சினை 1905–06
  15. பன்றிப் போர் 1906–08
  16. ஆங்கிலேய-உருசிய மாநாடு 1907
  17. போஸ்னியப் பிரச்சினை 1908–09
  18. அகதிர் பிரச்சினை 1911
  19. இத்தாலிய-துருக்கியப் போர் 1911–12
  20. பால்கன் போர்கள் 1912–13
  21. பிரான்சு பெர்டினான்டின் அரசியல் கொலை 1914
  22. சூலை பிரச்சினை 1914

அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணிகள்

[தொகு]
Map of Europe focusing on Austria-Hungary and marking the central location of ethnic groups in it including Slovaks, Czechs, Slovenes, Croats, Serbs, Romanians, Ukrainians, Poles.
1914இல் எதிரெதிர் இராணுவக் கூட்டணிகள்:
       முக்கூட்டணி நாடுகள்
       முந்நேச நாடுகள்
இதில் முந்நேச நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான "கூட்டணி" ஆகும்; மற்றவை அதிகாரப்பூர்வமற்ற ஆதரவு முறைகளாக இருந்தன.

19ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தில் முக்கிய ஐரோப்பியச் சக்திகள் தங்களுக்கு மத்தியில் ஒரு திடமற்ற அதிகாரச் சம நிலையைப் பேணி வந்தன. இது ஐரோப்பிய இசைக் கச்சேரி என்று அறியப்படுகிறது.[16] 1848க்கு பிறகு இந்நிலைக்கு, மிகச்சிறந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று அழைக்கப்பட்ட பிரித்தானியப் பின்வாங்கல், உதுமானியப் பேரரசின் இறங்கு முகம், ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் கீழ் புருசியாவின் வளர்ச்சி ஆகிய பல்வேறு காரணிகள் சவால் விடுத்தன. 1866இல் ஆத்திரிய-புருசியப் போரானது செருமனியில் புருசியாவின் ஆதிக்கத்தை நிறுவியது. 1870-71இன் பிராங்கோ-புருசியப் போரில் பெற்ற வெற்றியானது புருசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு செருமானியப் பேரரசாக செருமானிய அரசுகளை ஒருங்கிணைக்கப் பிஸ்மார்க்குக்கு அனுமதி வழங்கியது. 1871 தோல்விக்குப் பழிவாங்க அல்லது இழந்த அல்சேசு-லொரைன் மாகாணங்களை மீட்டெடுப்பது ஆகியவை அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிரெஞ்சுக் கொள்கையின் முதன்மையான பகுதிகளாக உருவாயின.[17]

பிரான்சைத் தனிமைப்படுத்தவும், இருமுனைப் போரைத் தவிர்க்கவும் ஆத்திரியா-அங்கேரி, உருசியா மற்றும் செருமனி ஆகிய நாடுகளுக்கு இடையில் மூன்று பேரரசர்களின் குழுமத்துடன் பிஸ்மார்க் பேச்சுவார்த்தை நடத்தினார். 1877-1878இன் உருசிய-துருக்கியப் போரில் உருசியா வெற்றி பெற்றதற்குப் பிறகு, பால்கன் குடாவில் உருசிய ஆதிக்கம் குறித்து எழுந்த ஆத்திரிய ஐயப்பாடுகள் காரணமாக இந்தக் குழுமமானது கலைக்கப்பட்டது. ஏனெனில், பால்கன் பகுதியைத் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆத்திரியா-அங்கேரி கருதியது. பிறகு செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி 1879இல் இரட்டைக் கூட்டணியை ஏற்படுத்தின. 1882இல் இதில் இத்தாலி இணைந்த போது இது முக்கூட்டணியானது.[18] மூன்று பேரரசுகளும் தங்களுக்கு மத்தியிலான எந்த ஒரு பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரான்சைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தங்களின் குறிக்கோளாகப் பிஸ்மார்க்குக்கு இருந்தது. உருசியாவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு முயற்சிகள் 1880இல் பிஸ்மார்க்கின் இந்த நிலைக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கிய போது, 1881இல் அவர் குழுமத்தை மீண்டும் உருவாக்கினார். இது 1883 மற்றும் 1885இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1887இல் இந்த ஒப்பந்தம் காலாவதியான போது, பழைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக மறு காப்பீட்டு ஒப்பந்தம் என்ற ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பிஸ்மார்க் ஏற்படுத்தினார். பிரான்சு அல்லது ஆத்திரியா-அங்கேரியால் செருமனி அல்லது உருசியா ஆகிய இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தாக்கப்பட்டால் இரு நாடுகளுமே நடு நிலை வகிக்க வேண்டும் என்பதே இந்த இரகசிய ஒப்பந்தமாகும்.[19]

கூட்டணிகள்

செருமனி அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படையாக உருசியாவுடனான அமைதியைப் பிஸ்மார்க் கருதினார். ஆனால், 1890இல் இரண்டாம் வில்லியம் கைசராகப் பதவிக்கு வந்த பிறகு அவர் பிஸ்மார்க்கை ஓய்வு பெறும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினார். அவரது புதிய வேந்தரான லியோ வான் கேப்ரிவி மறு காப்பீட்டு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டாமென அவரை இணங்க வைத்தார்.[20] கூட்டணிக்கு எதிராகச் செயலாற்றப் பிரான்சுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கியது. பிரான்சு 1894இல் உருசியாவுடன் பிராங்கோ-உருசியக் கூட்டணி, 1904இல் பிரிட்டனுடன் நேசக் கூட்டணி மற்றும் இறுதியாக 1907ஆம் ஆண்டு ஆங்கிலேய-உருசியக் கூட்டத்தில் முந்நேச நாடுகள் கூட்டணி ஆகியவற்றில் கையொப்பமிட்டது. இவை அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாத போதும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் நீண்டகாலமாக இருந்த காலனிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததன் மூலம் பிரான்சு அல்லது உருசியா தொடர்பான எந்த ஒரு எதிர்காலச் சண்டையிலும் பிரிட்டன் நுழையும் என்ற வாய்ப்பை இது உருவாக்கியது.[21] 1911ஆம் ஆண்டின் அகதிர் பிரச்சினையின் போது, செருமனிக்கு எதிராகப் பிரான்சுக்குப் பிரித்தானிய மற்றும் உருசிய ஆதரவானது இவர்களின் கூட்டணியை மீண்டும் வலுவுடையதாக்கியது. ஆங்கிலேய-செருமானிய நட்பற்ற நிலையை அதிகமாக்கியது. நாடுகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளை அதிகமாக்கியது. இது 1914இல் போராக வெடித்தது.[22]

ஆயுதப் போட்டி

[தொகு]
எஸ். எம். எஸ். ரெயின்லாந்து, ஒரு நசாவு வகுப்புப் போர்க்கப்பல், பிரித்தானிய திரெத்நாட் போர்க்கப்பலுக்கு எதிர்வினையாகச் செருமனி இக்கப்பலை அறிமுகப்படுத்தியது

1871ஆம் ஆண்டுக்குப் பிறகு செருமானியத் தொழில்துறை வலிமையானது, ஓர் ஒன்றிணைந்த அரசின் உருவாக்கம், பிரெஞ்சு இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் அல்சேசு-லொரைன் பகுதி இணைக்கப்பட்டது ஆகியவற்றால் பெருமளவு அதிகரித்தது. இரண்டாம் வில்லியமால் ஆதரவளிக்கப்பட்ட கடற்படைத் தளபதி ஆல்பிரெட் வான் திர்பித்சு பொருளாதார சக்தியின் இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியச் செருமானியக் கடற்படையை உருவாக்க விரும்பினார். உலகக் கடற்படை முதன்மை நிலைக்குப் பிரித்தானிய அரச கடற்படையுடன் இது போட்டியிடலாம் என்று கருதினார்.[23] உலகளாவிய அதிகாரத்திற்கு ஓர் ஆழ்கடல் கடற்படையை வைத்திருப்பது என்பது முக்கியமானது என்று ஐக்கிய அமெரிக்கக் கடற்படை உத்தியாளர் ஆல்பிரெட் தாயெர் மாகனின் வாதத்தால் இவரது எண்ணங்கள் தாக்கத்துக்கு உள்ளாயின. திர்பித்சு இவரது நூல்களையும் செருமானியத்திற்கு மொழி பெயர்த்தார். அதே நேரத்தில், வில்லியம் தனது ஆலோசகர்கள் மற்றும் மூத்த இராணுவத்தினருக்கு இதைப் படிப்பதைக் கட்டாயமாக்கினார்.[24]

எனினும், இது ஒரு உணர்ச்சிப் பூர்வமான முடிவாகவும் இருந்தது. அரச கடற்படையை வில்லியம் மதிக்கவும் செய்தார். அதை விட முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் கடற்படை முதன்மை நிலை தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் வரை ஐரோப்பாவில் பிரிட்டன் தலையிடாது என பிஸ்மார்க் கணித்தார். ஆனால், 1890இல் அவரது பதவி நீக்கம் செருமனியில் கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. ஆங்கிலேய-செருமானிய கடற்படை ஆயுதப் போட்டிக்குக் காரணமாகியது.[25] திர்பித்சு பெருமளவிலான பணத்தைச் செலவழித்த போதும், 1906இல் எச். எம். எஸ். திரெத்நாட் போர்க்கப்பலின் அறிமுகமானது பிரித்தானியர்களுக்கு அவர்களது செருமானிய எதிரிகளுடன் ஒப்பிடும் போது ஒரு தொழில்நுட்ப அனுகூலத்தை வழங்கியது. இந்த தொழில்நுட்ப இடைவெளியைப் பிரித்தானியர்கள் என்றுமே இழக்கவில்லை.[23] இறுதியாக, இந்த ஆயுதப் போட்டியானது பெருமளவிலான வளங்களை ஒரு செருமானியக் கடற்படையை உருவாக்குவதற்கு வழி மாற்றியது. பிரிட்டனுக்குச் சினமூட்டக்கூடிய அளவுக்குச் செருமானிய கடற்படை உருவாகியது. ஆனால் அதை தோற்கடிப்பதற்காக அல்ல. 1911இல் வேந்தர் தியோபால்டு வான் பெத்மன் கோல்வெக் தோல்வியை ஒப்புக்கொண்டார். இது 'இராணுவத் தளவாடத் திருப்பு முனைக்கு' இட்டுச் சென்றது. அப்போது அவர் செலவுகளை கடற்படையிடமிருந்து இராணுவத்திற்கு வழி மாற்றினார்.[26]

அரசியல் பதட்டம் குறைந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, 1905இன் உருசிய-யப்பானியப் போரில் அடைந்த தோல்வியில் இருந்து உருசிய மீளும் என்ற செருமானியக் கவலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த புரட்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரெஞ்சு நிதியுதவியால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 1908ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஒரு பெருமளவிலான தொடருந்து மற்றும் உட்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. குறிப்பாக, செருமனியின் மேற்கு எல்லைப் பகுதிகளில் இந்த விரிவாக்கம் நடைபெற்றது.[27] உருசியாவுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்த தங்களது இராணுவத்தைச் சரி செய்ய செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி தங்களது துருப்புகளை வேகமாக நகர்த்துவதில் கவனம் செலுத்தின. அரச கடற்படையுடன் போட்டியிடுவதை விட உருசியாவுடனான இந்த இடைவெளி அச்சுறுத்தலைச் சரி செய்வது மிக முக்கியமானதாகச் செருமனிக்கு இருந்தது. 1913இல் செருமனி தன் நிரந்தர இராணுவத்தினரின் அளவை 1,70,000 துருப்புகள் அதிகப்படுத்தியதற்குப் பிறகு, பிரான்சு அதன் கட்டாய இராணுவச் சேவையை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டித்தது. இதே போன்ற நடவடிக்கைகள் பால்கன் பகுதி நாடுகளாலும், இத்தாலியாலும் எடுக்கப்பட்டன. இது உதுமானியர்கள் மற்றும் ஆத்திரியா-அங்கேரி அதிகரிக்கப்பட்ட செலவினங்களை மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றது. செலவீனங்களைப் பிரித்துக் குறிப்பிடுவதில் உள்ள வேறுபாடுகள் காரணமாக சரியான அளவு செலவினங்கள் கணிப்பதற்கு கடினமானவையாக உள்ளன. இந்தச் செலவினங்கள் தொடருந்து போன்ற குடிசார் உட்கட்டமைப்புத் திட்டங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், தொடருந்துகள் இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், 1908 முதல் 1913 வரை ஆறு முக்கிய ஐரோப்பியச் சக்திகளின் இராணுவச் செலவினமானது நேரடி மதிப்பில் 50%க்கும் மேல் அதிகரித்தது.[28]

பால்கன் சண்டைகள்

[தொகு]
Photo of large white building with one signs saying "Moritz Schiller" and another in Arabic; in front is a cluster of people looking at poster on the wall.
1908இல் ஆத்திரியா சாரயேவோவை இணைத்துக் கொண்ட பொது அறிவிப்புச் சுவரொட்டியைப் படிக்கும் சாரயேவோ குடிமக்கள்

1914க்கு முந்தைய ஆண்டுகளில், மற்ற சக்திகள் உதுமானிய இறங்கு முகத்தில் இருந்து அனுகூலங்களைப் பெற விரும்பியதன் காரணமாகப் பால்கன் பகுதியில் ஒரு தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்பட்டன. சிலாவிய சார்பு மற்றும் மரபு வழி உருசியாவானது தன்னை செர்பியா மற்றும் பிற சிலாவிய அரசுகளின் பாதுகாப்பாளராகக் கருதிய அதே நேரத்தில், உத்தியியல் ரீதியாக மிக முக்கியமான பொசுபோரசு நீர் இணைப்பை, குறிக்கோள்களை உடைய ஒரு சிலாவிய சக்தியான பல்கேரிய கட்டுப்படுத்துவதை விட ஒரு பலவீனமான உதுமானிய அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்பியது. கிழக்குத் துருக்கியில் உருசிய தனக்கென சொந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. பால்கன் பகுதியில் உருசியச் சார்பு நாடுகள் தங்களுக்கிடையே பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. இதை சமநிலைப்படுத்துவது என்பது உருசியக் கொள்கை உருவாக்குபவர்கள் இடையே பிரிவை உண்டாக்கியது. இது பிராந்திய நிலையற்ற தன்மையை அதிகப்படுத்தியது.[29]

தங்களது பேரரசு தொடர்ந்து நிலை பெற்றிருக்கப் பால்கன் பகுதி மிக முக்கியமானது எனவும், செர்பிய விரிவாக்கமானது ஒரு நேரடியான அச்சுறுத்தல் எனவும் ஆத்திரிய அரசியல் மேதைகள் கருதினர். 1908-1909க்கு முந்தைய உதுமானிய நிலப்பரப்பான போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆத்திரியா இணைத்த போது போஸ்னியா பிரச்சனையானது தொடங்கியது. ஆத்திரியா 1878ஆம் ஆண்டிலிருந்து போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆக்கிரமித்திருந்தனர். பல்கேரியா உதுமானியப் பேரரசில் இருந்து சுதந்திரம் அடைந்ததாக இதே நேரத்தில் அறிவித்தது. ஆத்திரியாவின் இந்த ஒரு சார்புச் செயலானது ஐரோப்பிய சக்திகளால் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இதை எவ்வாறு சரி செய்வது என்ற ஒத்த கருத்து ஏற்படாததால் ஐரோப்பிய சக்திகள் இதை ஏற்றுக்கொண்டன. சில வரலாற்றாளர்கள் இது ஒரு முக்கியமான பிரச்சனை அதிகரிப்பாகக் கருதுகின்றனர். பால்கன் பகுதியில் உருசியாவுடன் எந்த ஒரு ஆத்திரிய ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் இது முடித்து வைத்தது. அதே நேரத்தில் பால்கன் பகுதியில் தங்களது சொந்த விரிவாக்கக் குறிக்கோள்களைக் கொண்டிருந்த செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளுடனான ஆத்திரியாவின் உறவையும் மோசமாக்கியது.[30]

1911-1912இல் நடந்த இத்தாலிய-துருக்கியப் போரானது உதுமானியப் பலவீனத்தை வெளிப்படுத்திய போது பதட்டங்கள் அதிகரித்தன. இது செர்பியா, பல்கேரியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் இணைந்து பால்கன் குழுமம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு இட்டுச் சென்றது.[31] 1912-1913இல் நடந்த முதலாம் பால்கன் போரில் பெரும்பாலான ஐரோப்பியத் துருக்கி மீது இந்தக் குழுமமானது தாக்குதல் ஓட்டம் நடத்திச் சீக்கிரமே கைப்பற்றியது. இது வெளிப்புறப் பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.[32] அத்திரியாத்திக்கில் இருந்த துறைமுகங்களைச் செர்பியா கைப்பற்றியதால், 21 நவம்பர் 1912 அன்று ஆத்திரியா பகுதியளவு படைத் திரட்டலை ஆரம்பித்தது. கலீசியாவில் இருந்த உருசிய எல்லையின் பக்கவாட்டில் இராணுவப் பிரிவுகளைத் திரட்டியதும் இதில் அடங்கும். அடுத்த நாள் நடந்த ஒரு சந்திப்பில் இதற்குப் பதிலாகத் துருப்புகளைத் திரட்ட வேண்டாம் என உருசிய அரசாங்கம் முடிவெடுத்தது. தாங்கள் இன்னும் தயாராகாத ஒரு போரில் வலுக்கட்டாயமாக ஈடுபட உருசியர்கள் விரும்பவில்லை.[33]

1913ஆம் ஆண்டு இலண்டன் ஒப்பந்தத்தின் வழியாக மீண்டும் கட்டுப்பாட்டை நிலை நாட்ட பெரிய சக்திகள் விரும்பின. இந்த ஒப்பந்தப்படி சுதந்திர அல்பேனியா உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்கேரியா, செர்பியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகள் விரிவடைந்தன. எனினும், வெற்றியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் 33 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் பால்கன் போருக்குக் காரணமாயின. 16 சூன் 1913 அன்று செர்பியா மற்றும் கிரேக்கம் மீது பல்கேரியா தாக்குதல் நடத்தியது. இதில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது. செர்பியா மற்றும் கிரேக்கத்திடம் பெரும்பாலான மாசிடோனியாவையும், உருமேனியாவிடம் தெற்கு தோப்ருசாவையும் பல்கேரியா இழந்தது.[34] இதன் விளைவானது பால்கன் போரில் அனுகூலங்களைப் பெற்ற செர்பியா மற்றும் கிரேக்கம் போன்ற நாடுகள் கூட "தங்களுக்குரிய ஆதாயங்களைப்" பெறுவதில் ஏமாற்றப்பட்டதாகக் கருதும் நிலையில் இருந்தது. இதில் தனது வேறுபட்ட நிலையையும் ஆத்திரியா வெளிக்காட்டியது. செருமனி உள்ளிட்ட மற்ற சக்திகள் இதைத் தங்களது மனக் கலக்கத்துடன் கண்டன.[35] கலவையான மற்றும் சிக்கலான இந்த மனக்குறை, தேசியவாதம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவை 1914க்கு முந்தைய பால்கன் பகுதி "ஐரோப்பாவின் வெடிமருந்துக் கொள்கலம்" என்று பின்னர் அறியப்பட்டதற்குக் காரணமாயின.[36]

முன் நிகழ்வுகள்

[தொகு]

சாராயேவோ அரசியல் கொலை

[தொகு]
இது பொதுவாக காவ்ரீலோ பிரின்சிப்பைக் கைது செய்வதாக எண்ணப்பட்டது. ஆனால், தற்போது வரலாற்றாளர்கள் பெர்டினான்டு பெகர் (வலது) என்ற வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அப்பாவியின் படம் என்று நம்புகின்றனர்.[37][38]

28 சூன் 1914 அன்று ஆத்திரியாவின் பேரரசர் பிரான்சு யோசோப்பின் வாரிசாகக் கருதப்பட்ட இளவரசர் பிரான்சு பெர்டினான்டு புதிதாக இணைக்கப்பட்ட மாகாணங்களான போஸ்னியா எர்செகோவினாவின் தலைநகரான சாரயேவோவுக்கு வருகை புரிந்தார். இளவரசரின் வாகனங்கள் செல்லும் வழிக்குப் பக்கவாட்டில் இளம் போஸ்னியா என்று அறியப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஆறு அரசியல் கொலைகாரர்கள்[m] கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது எண்ணம் இளவரசரைக் கொல்வதாகும். செர்பிய கருப்புக் கை உளவு அமைப்பில் இருந்த தீவிரப் போக்குடையவர்களால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை இவர்கள் கொண்டிருந்தனர். இளவரசரின் இறப்பானது போஸ்னியாவை ஆத்திரிய ஆட்சியில் இருந்து விடுதலை செய்யும் என்று அவர்கள் நம்பினர். எனினும், அதற்குப் பிறகு ஆட்சி யாரிடம் இருக்குமென்பதில் அவர்களிடம் சிறிதளவே கருத்தொற்றுமை இருந்தது.[40]

நெதெல்சுகோ கப்ரினோவிச் இளவரசரின் சிற்றுந்து மீது ஒரு கையெறி குண்டை வீசினான். இளவரசரின் உதவியாளர்கள் இருவருக்குக் காயம் ஏற்படுத்தினான். உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஊர்திகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தன. மற்ற கொலைகாரர்களும் வெற்றியடையவில்லை. ஆனால், 1 மணி நேரத்திற்குப் பிறகு காயமடைந்த அதிகாரிகளைப் பார்த்துத் திரும்பிக் கொண்டிருந்த பெர்டினான்டின் சிற்றுந்தானது ஒரு தெருவில் தவறான முனையில் திரும்பியது. அங்கு காவ்ரீலோ பிரின்சிப் நின்று கொண்டிருந்தான். அவன் முன்னோக்கி நகர்ந்து கைத் துப்பாக்கி மூலம் இரண்டு குண்டுகளைச் சுட்டான். பெர்டினான்டு மற்றும் அவரது மனைவி சோபியாவுக்கு ஆபத்தான காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீக்கிரமே அவர்கள் இருவரும் இறந்தனர்.[41] பேரரசர் பிரான்சு யோசப்பு இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்து இருந்த போதிலும், அரசியல் மற்றும் தனி மனித வேறுபாடுகள் காரணமாக பேரரசருக்கும், இளவரசருக்கும் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. அவரது முதல் குறிப்பிடப்பட்ட கருத்தானது, "நம்மை மீறிய சக்தியானது அதன் பணியைச் செய்துள்ளது. ஐயோ! இதில் என்னால் நன்னிலையில் வைத்திருக்க எதுவும் கிடையாது" என்பது எனப் பேரரசர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[42]

வரலாற்றாளர் சபைனெக் செமனின் கூற்றுப்படி, பேரரசரின் எதிர்வினையானது மிகப்பரவலாக வியன்னாவில் எதிரொலித்தது. அங்கு "இந்நிகழ்வானது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஞாயிறு 28 சூன் மற்றும் திங்கள் 29 அன்று மக்கள் கூட்டங்கள் எதுவுமே நடைபெறாதது போல இசையைக் கேட்டுக்கொண்டிருந்தன."[43][44] எவ்வாறாயினும், அரியணைக்கான வாரிசின் கொலையின் தாக்கமானது முக்கியத்துவமானதாக இருந்தது. வரலாற்றாளர் கிறித்தோபர் கிளார்க் இதை "வியன்னாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றிய, 9/11 விளைவு போன்ற வரலாற்றில் முக்கியத்துவமுடைய ஒரு தீவிரவாத நிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.[45]

போஸ்னியா எர்செகோவினாவில் வன்முறை பரவுதல்

[தொகு]
29 சூன் 1914 அன்று சாராயேவோவில் செர்பியர்களுக்கு எதிரான கலவரங்களுக்குப் பிறகு தெருக்களில் கூட்டங்கள்

இதைத் தொடர்ந்து சாராயேவோவில் இறுதியாக நடந்த செர்பியர்களுக்கு எதிரான கலவரங்களை ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் ஊக்குவித்தன. இதில் போஸ்னியா குரோசியர்கள் மற்றும் போஸ்னியாக்குகள் இரண்டு போஸ்னிய செர்பியர்களைக் கொன்றனர். செர்பியர்களுக்குச் சொந்தமான ஏராளமான கட்டடங்களை சேதப்படுத்தினர்.[46][47] சாராயேவோவுக்கு வெளிப்புறம், ஆத்திரியா-அங்கேரியின் கட்டுப்பாட்டிலிருந்த போஸ்னியா எர்செகோவினாவின் மற்ற நகரங்கள், குரோசியா மற்றும் சுலோவேனியாவிலும் செர்பிய இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நடத்தப்பட்டன. போஸ்னியா மற்றும் எர்செகோவினாவில் இருந்த ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் சுமார் 5,500 முக்கியமான நபர்களைக் கைது செய்து, விசாரணைக்காக ஆத்திரியாவுக்கு அனுப்பினர். இதில் 700 முதல் 2,200 வரையிலான செர்பியர்கள் சிறையில் இறந்தனர். மேலும், 460 செர்பியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெரும்பாலும் போஸ்னியாக்குகளைக் கொண்டிருந்த சுத்சோகார்ப்சு என்ற ஒரு சிறப்பு படைத்துறை சாராப் பிரிவினர் உருவாக்கப்பட்டு, செர்பியர்களுக்கு எதிரான கொடுமைகளைச் செயல்படுத்தினர்.[48][49][50][51]

சூலை பிரச்சினை

[தொகு]

அரசியல் கொலையானது சூலை பிரச்சினையைத் தொடங்கி வைத்தது. ஆத்திரியா-அங்கேரி, செருமனி, உருசியா, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு மாத தூதரக நடவடிக்கைகளே சூலை பிரச்சினை என்று அழைக்கப்படுகின்றன. செர்பிய உளவு அமைப்பினர் பிரான்சு பெர்டினான்டின் கொலையைச் செயல்படுத்த உதவினர் என்று நம்பிய ஆத்திரிய அதிகாரிகள் போஸ்னியாவில் செர்பியர்களின் தலையீட்டை முடித்து வைக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்பினர். போர் ஒன்றே இதை அடைய ஒரு சிறந்த வழி என்று கருதினர்.[52] எனினும், செர்பியாவின் தொடர்பு சம்பந்தமாக உறுதியான ஆதாரங்கள் எதுவும் ஆத்திரிய வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை. செர்பியத் தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்ட கோப்பானது பல தவறுகளை உள்ளடக்கி இருந்தது.[53] 23 சூலை அன்று செர்பியாவுக்கு ஆத்திரியா இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஏற்கத்தகாத 10 கோரிக்கைகளை செர்பியாவிடம் பட்டியலிட்டு, சண்டையைத் தொடங்க அதை ஒரு சாக்கு போக்காக ஆத்திரியா பயன்படுத்தியது.[54]

1910இல் ஆத்திரியா-அங்கேரியின் இன-மொழி வரைபடம். போஸ்னியா எர்செகோவினாவானது 1908இல் ஆத்திரியாவால் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சூலை 25 அன்று இராணுவத்தை ஒருங்கிணைக்கும் பொது ஆணையை செர்பியா வெளியிட்டது. ஆனால் செர்பியாவுக்குள் உள்ள, இரகசியமாக அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு வாய்ப்புள்ள காரணிகளை ஒடுக்குவதற்கும், அரசியல் கொலையுடன் தொடர்புடைய செர்பியர்கள் மீதான புலனாய்வு மற்றும் நீதி விசாரணையில் ஆத்திரிய பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்குமான அதிகாரத்தை வழங்கும் இரு நிபந்தனைகள் தவிர மற்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் செர்பியா ஒப்புக்கொண்டது.[55][56] இது நிராகரிப்புக்கு நிகரானது என்று கூறிய ஆத்திரியா தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. மறுநாள் பகுதியளவு இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. சூலை 28 அன்று செர்பியா மீது போரை ஆத்திரியா அறிவித்தது. பெல்கிறேட் மீது வெடிகலங்களை செலுத்த ஆரம்பித்தது. சூலை 25 அன்று போருக்கான ஆயத்தங்களை தொடங்கிய உருசியா 30ஆம் தேதி அன்று செர்பியாவுக்கு ஆதரவாக பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது.[57]

உருசியாவை வலிய சென்று தாக்குதல் நடத்தும் நாடாக உருவப் படுத்தி அதன் மூலம் செருமனியின் எதிர்க்கட்சியான பொதுவுடமை ஜனநாயக கட்சியின் ஆதரவை பெரும் நோக்கத்தில் பெத்மன் கோல்வெக் சூலை 31 வரை போருக்கான ஆயத்தங்களை தொடங்கவில்லை.[58] 12 மணி நேரத்திற்குள் "செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரிக்கு எதிரான அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு" உருசிய அரசாங்கத்திடம் ஒரு குறிப்பு பிற்பகலில் செருமனியால் வழங்கப்பட்டது.[59] பிரான்சு நடுநிலை வகிக்க வேண்டும் என்ற செருமனியின் மேற்கொண்ட கோரிக்கையானது பிரான்சால் நிராகரிக்கப்பட்டது. பிரான்சு பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. ஆனால் போரை அறிவிப்பதை தாமதப்படுத்தியது.[60] இரு பக்கங்களில் இருந்தும் போரை எதிர்பார்த்து இருப்பதாக செருமானிய இராணுவ தலைமையானது நீண்ட காலமாக கருதி வந்தது; சிலியேபென் திட்டமானது 80% இராணுவத்தை பயன்படுத்தி மேற்கே பிரான்சை தோற்கடித்து விட்டு, பிறகு அதே இராணுவத்தை கிழக்கே உருசியாவுக்கு எதிராக போரிட பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தியலை கொண்டிருந்தது. இதற்கு படையினரை வேகமாக நகர்த்த வேண்டிய தேவை இருந்ததால் அதே நாள் பிற்பகலில் இராணுவ ஒருங்கிணைப்புக்கான ஆணைகள் செருமனியால் வெளியிடப்பட்டன.[61]

போர் அறிவிக்கப்பட்ட அன்று இலண்டன் மற்றும் பாரிசில் ஆரவரிக்கும் மக்கள் கூட்டம்.

சூலை 29 அன்று நடந்த ஒரு சந்திப்பில் 1839ஆம் ஆண்டின் இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் பெல்ஜியத்திற்கு பிரிட்டன் கொடுத்த உறுதிமொழிகளின் படியான, பெல்ஜியம் மீதான செருமனியின் ஒரு படையெடுப்புக்கான எதிர்ப்பை இராணுவப்படை மூலம் வெளிப்படுத்துவது என்பது தேவையில்லை என பிரித்தானிய அமைச்சரவை குறுகிய வேறுபாட்டுடன் முடிவெடுத்தது. எனினும் இது பெரும்பாலும் பிரிட்டன் பிரதமர் அசுகுயித்தின் ஒற்றுமையை பேணும் விருப்பத்தாலேயே நடந்தது. அவரும் அவரது மூத்த அமைச்சர்களும் பிரான்சுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். அரச கடற்படையானது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தலையிடுவதற்கு பொதுமக்களிடையே நிலவிய கருத்தும் வலிமையாக ஆதரவளித்தது.[62] சூலை 31 அன்று பிரிட்டன் செருமனி மற்றும் பிரான்சுக்கு குறிப்புகளை அனுப்பியது. பெல்ஜியத்தின் நடு நிலைக்கு மதிப்பளிக்குமாறு அவற்றிடம் கோரியது. பிரான்சு மதிப்பளிப்பதாக உறுதி கொடுத்தது. செருமனி பதிலளிக்கவில்லை.[63]

ஆகத்து 1 அன்று காலையில் உருசியாவுக்கு செருமனி விடுத்த இறுதி எச்சரிக்கையானது ஒரு முறை காலாவதியான பிறகு இரு நாடுகளும் போரில் ஈடுபட்டன. அதே நாள் பிறகு இலண்டனில் இருந்த தனது தூதர் இளவரசர் லிச்னோவ்சுகியின் தகவலின் படி செருமனியின் வில்லியமுக்கு கொடுக்கப்பட்ட தகவலானது, பிரான்சு தாக்கப்படாவிட்டால் பிரிட்டன் தொடர்ந்து நடுநிலை வகிக்கும், மேலும் அயர்லாந்தில் அப்போது நடந்து கொண்டிருந்த தாயக ஆட்சி பிரச்சனையில் பிரிட்டன் ஈடுபட்டிருந்ததால் போரில் கூட ஈடுபடாது என்பதாகும்.[64] இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்த செருமனியின் வில்லியம் செருமனியின் முப்படை தளபதியான தளபதி மோல்ட்கேவுக்கு "ஒட்டு மொத்த இராணுவத்தையும் கிழக்கு நோக்கி அணிவகுக்க செய்" என ஆணையிட்டார். மோல்ட்கேவுக்கு கிட்டத்தட்ட நரம்பியல் பிரச்சினை வரும் அளவுக்கு இது அழுத்தத்தை கொடுத்தது என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோல்ட்கே "இதை செய்ய முடியாது. தசம இலட்சங்களில் இராணுவ வீரர்களை திடீரென ஆயத்தம் செய்து களமிறக்க இயலாது" என்றார்.[65] தன்னுடைய உறவினர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜிடமிருந்து தந்திக்காக காத்திருக்கலாம் என செருமனியின் வில்லியம் அறிவுறுத்திய போதும் தான் தவறாக புரிந்து கொண்டதை லிச்னோவ்சுகி சீக்கிரமே உணர்ந்தார். தகவலானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்த பிறகு வில்லியம் மோல்ட்கேயிடம் "தற்போது நீ உன் விருப்பப்படி செய்" என்றார்.[66]

பெல்ஜியம் வழியாக தாக்குவதற்கான செருமானிய திட்டங்களை அறிந்த பிரெஞ்சு தலைமை தளபதியான யோசப்பு சோப்ரே அத்தகைய ஒரு தாக்குதலை முறியடிக்க எல்லை தாண்டிச் சென்று பிரான்சு முன்னரே தாக்குதற்கான அனுமதியை தனது அரசாங்கத்திடம் கேட்டார். பெல்ஜியத்தின் நடுநிலை மீறப்படுவதை தவிர்ப்பதற்காக அத்தகைய எந்த ஒரு முன்னேற்றமும் ஒரு செருமானியப் படையெடுப்புக்குப் பின்னரே வரும் என்று அவருக்கு கூறப்பட்டது.[67] ஆகத்து 2 அன்று செருமனி இலக்சம்பர்க்கை ஆக்கிரமித்தது. பிரெஞ்சு பிரிவுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. ஆகத்து 3 அன்று செருமனி பிரான்சு மீது போரை அறிவித்தது. பெல்ஜியம் வழியாக சுதந்திரமாக செல்வதற்கான வழியைக் கோரியது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகத்து 4 காலை அன்று செருமானியர்கள் படையெடுத்தனர். இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் உதவ வருமாறு பெல்ஜியத்தின் முதலாம் ஆல்பர்ட் வேண்டினார்.[68][69] பெல்ஜியத்தில் இருந்து பின்வாங்குமாறு செருமனிக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை பிரிட்டன் விடுத்தது. எந்த ஒரு பதிலும் பெறப்படாமல் நள்ளிரவு இந்த எச்சரிக்கை காலாவதியான பிறகு, இரு பேரரசுகளும் போரில் ஈடுபட்டன.[70]

போரின் போக்கு

[தொகு]

எதிர்ப்பு தொடங்குதல்

[தொகு]

மைய சக்திகள் நடுவே குழப்பம்

[தொகு]

மைய சக்திகளின் உத்தியானது போதிய தொடர்பின்மை காரணமாக பாதிப்புக்கு உள்ளானது. செர்பியா மீதான ஆத்திரியா-அங்கேரியின் படையெடுப்புக்கு உதவுவதாக செருமனி உறுதியளித்தது. ஆனால் இது குறித்த விளக்கத்தின் பொருளானது வேறுபட்டது. முன்னர் சோதனை செய்யப்பட்ட படையிறக்கும் திட்டங்கள் 1914ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இந்த திட்டங்கள் அதற்கு முன்னர் பயிற்சிகளில் என்றுமே சோதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆத்திரியா-அங்கேரிய தலைவர்கள் உருசியாவிடம் இருந்து தங்களது வடக்கு முனையை செருமனி தாக்கும் என நம்பினர். ஆனால், ஆத்திரியா-அங்கேரியானது அதன் பெரும்பாலான துருப்புகளை உருசியாவுக்கு எதிராக பயன்படுத்தும் என்றும், அதே நேரத்தில் தான் பிரான்சை கையாளலாம் என்றும் செருமனி எண்ணியது.[71] இந்த குழப்பமானது ஆத்திரியா-அங்கேரியானது அதன் படைகளை உருசிய மற்றும் செர்பிய முனைகளுக்கு இடையில் பிரித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியது.

செர்பியா மீதான படையெடுப்பு

[தொகு]
செர்பிய இராணுவத்தின் ஒன்பதாம் பிளேரியோட் "ஒலுச்", 1915

12 ஆகத்தில் தொடங்கி, ஆத்திரியர் மற்றும் செர்பியர் செர் மற்றும் கோலுபரா ஆகிய யுத்தங்களில் சண்டையிட்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆத்திரியாவின் தாக்குதல்கள் அதற்கு கடுமையான இழப்புகளை கொடுத்ததுடன் முறியடிக்கவும் பட்டன. ஒரு விரைவான வெற்றியை பெரும் ஆத்திரியாவின் நம்பிக்கையை இது குலைத்தது. போரில் நேச நாடுகளின் முதல் பெரும் வெற்றியை இது குறித்தது. இதன் விளைவாக ஆத்திரிய தன்னுடைய படைகளில் குறிப்பிடத்தக்க அளவை செர்பிய போர் முனையில் நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. இதனால் உருசியாவுக்கு எதிரான ஆத்திரியாவின் முயற்சிகள் பலவீனம் அடைந்தன.[72] 1914ஆம் ஆண்டு படையெடுப்பில் செர்பியா ஆத்திரியாவைத் தோற்கடித்ததானது 20ஆம் நூற்றாண்டின் சிறிய நாடு பெரிய நாட்டை வீழ்த்திய முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.[73] 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தரையில் இருந்து வானத்தில் சுடுவதன் மூலம் ஓர் ஆத்திரிய போர் விமானமானது சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இந்த படையெடுப்பானது விமான எதிர்ப்பு போர் முறையின் முதல் பயன்பாட்டைக் கண்டது. மேலும், 1915ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் செர்பிய இராணுவமானது வீரர்களின் காயங்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக அவர்களை பத்திரமாக மீட்ட முதல் செயல் முறையையும் இப்போர் கண்டது.[74][75]

பெல்ஜியம் மற்றும் பிரான்சில் செருமானிய தாக்குதல்

[தொகு]
1914இல் எல்லைக்கு பயணிக்கும் செருமானிய வீரர்கள். இந்த நேரத்தில் அனைத்து நாடுகளும் இந்த போரானது ஒரு குறுகிய கால போராக இருக்கும் என்று எண்ணின.

1914ஆம் ஆண்டு படைகளை ஒருங்கிணைத்த பிறகு செருமானிய இராணுவத்தின் 80% பேர் மேற்குப் போர் முனையில் நிறுத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் கிழக்கே ஒரு மறைப்பு திரையாக செயல்படுவதற்காக நிறுத்தப்பட்டனர். இந்த திட்டத்தின் அலுவல் பூர்வமான பெயரானது இரண்டாம் ஔப்மார்ச் மேற்கு என்பதாகும். இது பொதுவாக சிலியேபென் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1891ஆம் ஆண்டு முதல் 1906ஆம் ஆண்டு வரை செருமானிய தலைமை தளபதியாக இருந்த ஆல்பிரட் வான் சிலியேபென் என்பவர் உருவாக்கியதன் காரணமாக இத்திட்டம் இவ்வாறு அறியப்பட்டது. தங்களது பகிரப்பட்ட எல்லை தாண்டி ஒரு நேரடித் தாக்குதலை நடத்துவதற்குப் பதிலாக, செருமானிய வலது பிரிவானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாக வேகமாக முன்னேறிச் செல்லும். பிறகு தெற்கு நோக்கி திரும்பி பாரிசை சுற்றி வளைக்கும். சுவிட்சர்லாந்து எல்லைக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தை பொறியில் சிக்க வைக்கும். இது ஆறு வாரங்கள் எடுக்குமென சிலியேபென் மதிப்பிட்டார். இதற்குப் பிறகு செருமானிய இராணுவமானது கிழக்கு நோக்கி திரும்பி உருசியர்களைத் தோற்கடிக்கும்.[76]

இந்த திட்டமானது அவருக்கு பின் வந்த இளைய எல்முத் வான் மோல்ட்கேயால் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டது. சிலியேபென் திட்டப்படி மேற்கில் இருந்த 85% செருமானிய படைகள் வலது பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தன. எஞ்சியவை எல்லையை தற்காத்துக் கொண்டிருந்தன. தன்னுடைய இடது பிரிவை வேண்டுமென்றே பலவீனமாக வைத்ததன் மூலம் "இழந்த மாகாணங்களான" அல்சேசு-லொரைனுக்குள் பிரெஞ்சுக்காரர்களை ஒரு தாக்குதல் நடத்த இழுக்க முடியும் என இவர் நம்பினார். இது உண்மையில் அவர்களது திட்டமான 17இல் குறிப்பிடப்பட்ட உத்தியாக இருந்தது.[76] எனினும் பிரெஞ்சுக்காரர்கள் இவரது இடது பிரிவின் மீது மிகுந்த அழுத்தத்துடன் முன்னேறுவார்கள் என்று இவருக்கு கவலை ஏற்பட்டது. மேலும் செருமானிய இராணுவமானது அதன் 1908 அளவிலிருந்து 1916 அளவில் அதிகரித்திருந்ததால் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான படைகளின் பகிர்ந்தளிப்பை 85:15 என்பதிலிருந்து 70:30 என்று இவர் மாற்றியமைத்தார்.[77] செருமானிய வணிகத்திற்கு டச்சு நடுநிலையானது தேவையானது என்று இவர் கருதினார். நெதர்லாந்து வழியாக ஊடுருவுவதை நிராகரித்தார். இதன் பொருளானது பெல்ஜியத்தில் ஏதாவது தாமதங்கள் ஏற்பட்டால் ஒட்டு மொத்த திட்டத்தையும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பதாகும்.[78] வரலாற்றாளர் ரிச்சர்டு கோம்சின் வாதத்தின்படி இந்த மாற்றங்களின் பொருளானது வலது பிரிவானது தீர்க்கமான வெற்றியை பெறுவதற்கு போதிய அளவு பலம் உடையதாக இல்லை என்பதாகும். இது அடைய இயலாத இலக்குகள் மற்றும் கால அளவுக்கு இட்டுச் சென்றது.[79]

பிரெஞ்சு துப்பாக்கி முனை ஈட்டி படையினர் எல்லைப்புற யுத்தத்தின் போது முன்னேறி செல்கின்றனர். ஆகத்து முடிவில் பிரெஞ்சு இழப்பானது 2.60 இலட்சத்தையும் விட அதிகமாக இருந்தது. இதில் 75,000 பேர் இறந்ததும் அடங்கும்.

மேற்கில் தொடக்க செருமானிய முன்னேற்றமானது மிகுந்த வெற்றிகரமாக இருந்தது. ஆகத்து மாத இறுதியில் நேச நாடுகளின் இடது பிரிவானது முழுமையாக பின் வாங்கிக் கொண்டிருந்தது. இந்த பிரிவில் பிரித்தானிய சிறப்பு படையும் இருந்தது. அதே நேரத்தில் அல்சேசு-லொரைனில் பிரெஞ்சு தாக்குதலானது அழிவுகரமான தோல்வியாக இருந்தது. இதில் பிரஞ்சுக்காரர்களுக்கு 2.60 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் எல்லைப்புற யுத்தத்தின்போது ஆகத்து 22 அன்று கொல்லப்பட்ட 27,000 வீரர்களும் அடங்குவர்.[80] செருமானிய திட்டமிடலானது பரந்த உத்தி அறிவுறுத்தல்களை கொடுத்தது. அதே நேரத்தில் போர்முனையில் இந்த உத்திகளை செயல்படுத்த இராணுவ தளபதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரத்தையும் வழங்கியது. இது 1866 மற்றும் 1870இல் நன்றாக பலன் அளித்தது. ஆனால் 1914இல் வான் குலுக் தனது சுதந்திரத்தை ஆணைகளை மீறுவதற்கும், பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த செருமானிய இராணுவங்களுக்கு இடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தினார்.[81] பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்கள் இந்த இடைவெளியை பாரிசுக்கு கிழக்கே செருமானிய முன்னேற்றத்தை முதலாம் மர்னே யுத்தத்தில் செப்டம்பர் 5 முதல் 12 வரை தடுத்து நிறுத்துவதற்கு அனுகூலமாக பயன்படுத்தினர். செருமானியப் படைகளை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி தள்ளினர்.

1911இல் உருசிய இராணுவ தலைமையான இசுத்தவுக்காவானது இராணுவத்தை ஒருங்கிணைத்து 15 நாட்களுக்குள் செருமனியை தாக்குவதென பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்புக்கொண்டது. இது செருமானியர்கள் எதிர்பார்த்ததை விட 10 நாட்கள் முன்னர் ஆகும். 17 ஆகத்து அன்று கிழக்கு புருசியாவுக்குள் நுழைந்த இரண்டு உருசிய இராணுவங்கள் அவர்களது பெரும்பாலான ஆதரவு காரணிகள் இன்றி இதை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்த போதும் இவ்வாறாக திட்டமிடப்பட்டது.[82] 26 முதல் 30 ஆகத்துக்குள் தன்னன்பர்க்கு யுத்தத்தில் உருசிய இரண்டாவது இராணுவமானது நிறைவாக அழிக்கப்பட்ட போதும் உருசிய இராணுவத்தின் முன்னேற்றமானது செருமானியர்கள் அவர்களது 8வது கள இராணுவத்தை பிரான்சிலிருந்து கிழக்கு புருசியாவுக்கு மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. இது மர்னே யுத்தத்தில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தது.[சான்று தேவை]

1914இன் இறுதியில் பிரான்சுக்குள் வலிமையான தற்காப்பு நிலைகளை செருமானிய துருப்புக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. பிரான்சின் உள்நாட்டு நிலக்கரி வயல்களில் பெரும்பாலானவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. தாங்கள் இழந்ததை விட 2,30,000 மேற்கொண்ட இராணுவ இழப்புகளை பிரான்சை அடையச் செய்தன. எனினும் தொடர்பு பிரச்சினைகள் மற்றும் தலைமையின் கேள்விக்குரிய முடிவுகள் ஒரு தீர்க்கமான முடிவானது செருமனிக்கு சாதகமாக ஏற்படுவதை வீணாக்கின. அதே நேரத்தில் ஒரு நீண்ட, இருமுனை போரை தவிர்க்கும் முதன்மை இலக்கை அடைவதிலும் செருமனி தோல்வி அடைந்தது.[83] ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செருமானிய தலைவர்களுக்கு தெரிந்தபடி, இது ஒரு முக்கிய தோல்விக்கு சமமானதாக இருந்தது. மர்னே யுத்தத்திற்கு பிறகு சீக்கிரமே பட்டத்து இளவரசரான வில்லியம் ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளரிடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் போரில் தோல்வியடைந்து விட்டோம். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் நாங்கள் தற்போதே தோல்வியடைந்து விட்டோம்."[84]

ஆசியா பசிபிக்

[தொகு]
1914 வாக்கில் உலக பேரரசுகள் மற்றும் காலனிகள்

30 ஆகத்து 1914 அன்று நியூசிலாந்து செருமானிய சமோவாவை ஆக்கிரமித்தது. இதுவே தற்போதைய சுதந்திர நாடான சமோவா ஆகும். 11 செப்டம்பர் அன்று ஆத்திரேலிய கடற்படை மற்றும் இராணுவ சிறப்புப்படையானது நியூ பிரிட்டன் தீவில் இறங்கியது. இந்த தீவானது அந்நேரத்தில் செருமானிய நியூ கினியாவின் பகுதியாக இருந்தது. 28 அக்டோபர் அன்று செருமானிய விரைவுக் கப்பலான எஸ்எம்எஸ் எம்டன் உருசிய விரைவு கப்பலான செம்சுக்கை பெனாங் யுத்தத்தில் மூழ்கடித்தது. செருமனி மீது சப்பான் போரை அறிவித்தது. பசிபிக்கில் இருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றியது. இந்த நிலப்பரப்புகளே பின்னாளில் தெற்கு கடல்கள் உரிமைப் பகுதிகள் என்று அழைக்கப்பட்டன. திசிங்தாவோவில் இருந்த சீன சாண்டோங் மூவலந்தீவில் அமைந்திருந்த செருமானிய ஒப்பந்த துறைமுகங்களையும் சப்பான் கைப்பற்றியது. தன்னுடைய விரைவு கப்பலான எஸ்எம்எஸ் கெய்செரின் எலிசபெத்தை திசிங்தாவோவில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ள வியன்னா மறுத்தபோது சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீதும் போரை அறிவித்தது. இந்த கப்பலானது திசிங்தாவோவில் நவம்பர் 1914 அன்று மூழ்கடிக்கப்பட்டது.[85] சில மாதங்களுக்குள்ளாகவே அமைதிப் பெருங்கடலில் இருந்த அனைத்து செருமானிய நிலப்பரப்புகளையும் நேச நாடுகள் கைப்பற்றின. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வணிக பகுதிகள் மற்றும் நியூ கினியாவில் இருந்த சில தற்காப்பு பகுதிகள் மட்டுமே இதில் எஞ்சியவையாக இருந்தன.[86][87]

ஆப்பிரிக்க படையெடுப்புகள்

[தொகு]

ஆப்பிரிக்காவில் போரின் சில முதன்மையான சண்டைகள் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானிய காலனி படைகளை ஈடுபடுத்தியதாக இருந்தன. ஆகத்து 6 முதல் 7 வரை செருமானிய பாதுகாப்பு பகுதிகளான தோகோலாந்து மற்றும் கமேரூன் ஆகியவற்றின் மீது பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய துருப்புக்கள் படையெடுத்தன. 10 ஆகத்து அன்று தென் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த செருமானிய படைகள் தென் ஆப்பிரிக்காவை தாக்கின. அங்கொன்றும் இங்கொன்றுமான மற்றும் வன்மையான சண்டையானது எஞ்சிய போர் முழுவதும் தொடர்ந்தது. முதலாம் உலகப்போரின்போது செருமானிய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த கர்னல் பால் வான் லோட்டோவ்-ஓர்பெக் தலைமையிலான செருமானிய காலனி படைகள் கரந்தடிப் போர்முறையை பின்பற்றின. ஐரோப்பாவில் போர் நிறுத்த ஒப்பந்தமானது செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் அவை சரணடைந்தன.[88]

நேச நாடுகளுக்கு இந்தியாவின் உதவி

[தொகு]
பிரான்சில் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் காலாட்படை பிரிவுகள்; இந்த துருப்புக்கள் திசம்பர் 1915இல் திரும்ப பெறப்பட்டன. இவை மெசபத்தோமிய படையெடுப்பில் சேவையாற்றின.

போருக்கு முன்னர் இந்திய தேசியவாதம் மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியமயத்தை தனது அனுகூலத்திற்கு செருமனி பயன்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. 1914ஆம் ஆண்டுக்கு பின்னரும் தொடர்ந்த இந்த கொள்கையானது இந்தியாவில் எழுச்சிகளை தூண்டியது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நியேதர்மயர்-கென்டிக் பயணமானது மைய சக்திகளின் பக்கம் போரில் இணையுமாறு ஆப்கானித்தானை தூண்டியது. எனினும் இந்தியாவில் எழுச்சி ஏற்படும் என பிரிட்டன் அஞ்சியதற்கு மாறாக போரின் தொடக்கமானது இந்தியாவில் தேசியவாத நடவடிக்கைகளில் குறைவு ஏற்பட்டதை கண்டது.[89][90] பிரித்தானிய போர் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என்பது இந்திய சுயாட்சியை விரைவுபடுத்தும் என காங்கிரசு மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பெரும்பாலும் நம்பியதே இதற்குக் காரணம் ஆகும். இந்த உறுதிமொழியானது 1917இல் இந்தியாவுக்கான பிரிட்டனின் செயலாளராக இருந்த மாண்டேகுவால் அப்பட்டமாக கொடுக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.[91]

1914இல் பிரித்தானிய இந்திய இராணுவமானது பிரிட்டனின் இராணுவத்தை விடவும் பெரியதாக இருந்தது. 1914 மற்றும் 1918க்கு இடையில் 13 இலட்சம் இந்திய வீரர்களும், பணியாளர்களும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சேவையாற்றினர் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசாங்கமும் அதன் சமஸ்தான கூட்டாளிகளும் பெரும் அளவிலான உணவு, நிதி மற்றும் வெடி மருந்தை பிரிட்டனுக்கு அளித்தன. ஒட்டு மொத்தமாக மேற்குப் போர்முனையில் 1.40 இலட்சம் வீரர்களும், மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேரும் சேவையாற்றினர். இதில் 47,746 பேர் கொல்லப்பட்டனர். 65,126 பேர் காயமடைந்தனர்.[92] போரால் ஏற்பட்ட இழப்புகள், போர் முடிந்ததற்குப் பிறகு இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதில் பிரித்தானிய அரசாங்கம் அடைந்த தோல்வி ஆகியவை காந்தி மற்றும் பிறரால் தலைமை தாங்கப்பட்ட முழுமையான சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது.[93]

மேற்கு முனை (1914 - 1916)

[தொகு]

பதுங்கு குழி போர் தொடங்கியது

[தொகு]
பிரான்சின் இலவேன்டியில் பதுங்கு குழிகளை தோண்டும் பிரித்தானிய இந்திய போர்வீரர்கள், ஆண்டு 1915.

வெட்ட வெளி போர் மீது முக்கியத்துவத்தை கொடுத்த போருக்கு முந்தைய இராணுவ உத்திகளும், தனி நபர் துப்பாக்கி வீரர் போர் முறையும் 1914இல் வெளிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்ட போது அவை வழக்கொழிந்தவை என நிரூபணமாயின. முள்கம்பி, இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற ஒட்டு மொத்த காலாட்படையின் முன்னேற்றத்தை தடுக்கும் வல்லமை கொண்ட வலிமையான தற்காப்பு அமைப்புகளின் உருவாக்கத்திற்கு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சக்தி வாய்ந்த சேணேவி ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனுமதியளித்தன. சேணேவியானது யுத்தகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது. வெட்ட வெளி நிலப்பரப்பை கடப்பது என்பதை இராணுவங்களுக்கு மிகவும் கடினமாக்கியது.[94] கடுமையான இழப்புகளை சந்திக்காமல் பதுங்கு குழி அமைப்புகளை உடைத்து முன்னேறுவதற்கான உத்திகளை உருவாக்குவதில் இரு பிரிவினரும் கடுமையாக போராட்டத்தை சந்தித்தனர். எனினும் தகுந்த நேரத்தில் வாயு போர்முறை மற்றும் பீரங்கி வண்டி போன்ற புதிய தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை தொடங்க தொழில்நுட்பம் உதவியது.[95]

செப்டம்பர் 1914இல் முதலாம் மர்னே யுத்தத்திற்கு பிறகு நேச நாட்டு மற்றும் செருமானிய படைகள் ஒன்றை மற்றொன்று சுற்றி வளைப்பதில் முயற்சி செய்து தோல்வி அடைந்தன. இந்த தொடர்ச்சியான நகர்வுகள் பின்னர் "கடலை நோக்கிய ஓட்டம்" என்று அறியப்பட்டன. 1914இன் முடிவில் ஆங்கிலேய கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து எல்லை வரை இருந்த தடையற்ற பதுங்கு குழி நிலைகளின் கோட்டின் பக்கவாட்டில் இரு எதிரெதிர் படைகளும் ஒன்றை மற்றொன்று எதிர்கொண்டன.[96] எங்கு தங்களது நிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனபதில் செருமானியர்கள் பொதுவாக வெற்றியடைந்த காரணத்தால் அவர்கள் எப்பொழுதுமே உயரமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதே நேரத்தில் அவர்களது பதுங்கு குழிகளும் நன்றாக கட்டமைக்கப்பட்டவையாக இருந்தன. பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பதுங்கு குழிகள் ஆரம்பத்தில் "தற்காலிகமானவையாக" கருதப்பட்டன. செருமானிய தற்காப்பை நொறுக்கும் ஒரு தாக்குதல் வரையிலுமே அவை தேவைப்பட்டன.[97] அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி போரின் வெற்றி தோல்வியற்ற நிலையை மாற்ற இரு பிரிவு நாடுகளுமே முயற்சித்தன. 22 ஏப்ரல் 1915 அன்று இரண்டாம் இப்பிரேசு யுத்தத்தில் செருமானியர்கள் கேகு மரபை மீறி மேற்குப் போர்முனையில் முதல் முறையாக குளோரின் வாயுவை பயன்படுத்தினர். சீக்கிரமே பல்வேறு வகைப்பட்ட வாயுக்கள் இரு பிரிவினராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. எனினும் இவை என்றுமே ஒரு தீர்க்கமான, யுத்தத்தை வெல்லும் ஆயுதமாக நீடிக்கவில்லை. போரின் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய மற்றும் நன்றாக நினைவு படுத்தப்பட்ட கோரங்களில் ஒன்றாக இது உருவானது.[98][99]

பதுங்கு குழி போர் தொடருதல்

[தொகு]

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு பிரிவினரும் ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்த இயலாமல் இருந்தனர். 1915 முதல் 1917 முழுவதும் பிரித்தானிய பேரரசும், பிரான்சும் செருமனியை விட அதிகப்படியான உயிரிழப்புகளை சந்தித்தன. இதற்கு காரணம் இரு பிரிவினரும் தேர்ந்தெடுத்த முடிவுகளே ஆகும். உத்தி ரீதியில் செருமனியானது ஒரே ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது, நேச நாடுகள் செருமானிய கோடுகள் வழியாக உடைத்து முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தன.

1916ஆம் ஆண்டின் சொம்மே யுத்தத்தில் செருமானிய உயிரிழப்புகள்

1916 பெப்ரவரியில் வெர்துன் யுத்தத்தில் பிரெஞ்சு தற்காப்பு நிலைகள் மீது செருமானியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலை திசம்பர் 1916 வரை நீடித்தது. செருமானியர்கள் ஆரம்பத்தில் முன்னேற்றங்களை பெற்றனர். ஆனால் பிரெஞ்சு பதில் தாக்குதல்கள் நிலைமையை மீண்டும் கிட்டத்தட்ட தொடக்க புள்ளிக்கு கொண்டு வந்து நிறுத்தின. பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் செருமானியர்களும் அதிகமான இழப்பை சந்தித்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் 7[100] முதல் 9.75 இலட்சம்[101] வரை உயிரிழப்புகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பிரெஞ்சு மன உறுதி மற்றும் தியாகத்தின் ஓர் அடையாளமாக வெர்துன் கருதப்படுகிறது.[102]

சொம்மே யுத்தம் என்பது 1916ஆம் ஆண்டின் சூலை முதல் நவம்பர் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆங்கிலேய-பிரெஞ்சு தாக்குதலாகும். பிரித்தானிய இராணுவத்தின் வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த ஒற்றை நாளாக1 சூலை 1916 கருதப்படுகிறது. பிரித்தானிய இராணுவமானது 57,470 பாதிப்புகளை சந்தித்தது. இதில் 19,240 பேர் இறந்ததும் அடங்கும். ஒட்டு மொத்தமாக சொம்மே தாக்குதலானது 4.20 இலட்சம் பிரித்தானியர்கள், 2 இலட்சம் பிரெஞ்சு மற்றும் 5 இலட்சம் செருமானியர்கள் இறப்பதற்கு இட்டுச் சென்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.[103] உயிரிழப்பை ஏற்படுத்தியதில் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை. பதுங்கு குழிகளில் பரவிய நோய்களே இரு பிரிவினருக்கும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய காரணிகளாக அமைந்தன. பதுங்கு குழிகளின் இருந்த மோசமான வாழ்வு நிலை காரணமாக எண்ணிலடங்காத நோய்களும், தொற்றுக்களும் பரவின. இவற்றில் பதுங்கு குழி கால் நோய், வெடிகல அதிர்ச்சி, சல்பர் மஸ்டர்டால் ஏற்பட்ட கண்பார்வை இழப்பு அல்லது எரிகாயங்கள், பேன், பதுங்கு குழி காய்ச்சல், கூட்டிகள் என்று அழைக்கப்பட்ட உடல் பேன் மற்றும் எசுப்பானிய புளூ ஆகியவையாகும்.[104][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

கடற்போர்

[தொகு]
1917இல் செருமானிய ஏகாதிபத்திய கடற்படை குழுவான ஓக்சிபுளோட் உடைய போர்க்கப்பல்கள்

போரின் தொடக்கத்தில் செருமானிய விரைவு கப்பல்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடந்தன. இறுதியில் இவற்றில் சில, நேச நாடுகளின் வணிக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. பிரித்தானிய அரச கடற்படையானது அமைப்பு ரீதியாக இத்தகைய விரைவு கப்பல்களை வேட்டையாடியது. அதே நேரத்தில் நேச நாடுகளின் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதில் பிரித்தானிய அரச கடற்படைக்கு இயலாமை இருந்த காரணத்தால் சில அவமானங்களையும் ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக இலகுரக விரைவு கப்பலான எஸ். எம். எஸ். எம்டன் செருமானிய கிழக்கு ஆசிய கப்பல் குழுவின் ஒரு பகுதியாக கிங்தாவோவில் நிறுத்தப்பட்டிருந்தது. இது 15 வணிக கப்பல்கள், மேலும் ஓர் உருசிய விரைவு கப்பல் மற்றும் ஒரு பிரெஞ்சு போர்க் கப்பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தது அல்லது மூழ்கடித்தது. செருமனியின் பெரும்பாலான குழுக் கப்பல்கள் செருமனிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எம்டன் நவம்பர் 1914இல் கோரோனெல் யுத்தத்தில் இரண்டு பிரித்தானிய கவச விரைவு கப்பல்களை மூழ்கடித்தது. இறுதியில் திசம்பரில் நடைபெற்ற பால்க்லாந்து தீவு யுத்தத்தில் கிட்டத்தட்ட முழுவதுமாக எம்டன் அழிக்கப்பட்டது. செருமனியின் எஸ். எம். எஸ். திரெசுதன் போர்க்கப்பலானது அதன் சில துணைக் கப்பல்களுடன் தப்பித்தது. ஆனால் மாசா தியேரா யுத்தத்திற்கு பிறகு அவையும் அழிக்கப்பட்டன அல்லது சிறைப்படுத்தப்பட்டன.[105]

சண்டை தொடங்கிய பிறகு சீக்கிரமே செருமனிக்கு எதிராக ஒரு கடல் முற்றுகையை பிரிட்டன் தொடங்கியது. இந்த உத்தியானது பலனளிக்க கூடியது என நிரூபணம் ஆகியது. இது முக்கியமான இராணுவ மற்றும் குடிமக்களுக்கு தேவையான பொருட்களின் வழியை வெட்டி விட்டது. முந்தைய இரண்டு நூற்றாண்டுகளின் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களால் குறிப்பிடப்பட்டு சர்வதேச சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தவற்றை இந்த முற்றுகையானது மீறியிருந்த போதும் இது பலனளிக்கக் கூடியதாக இருந்தது.[106] பெருங்கடலின் ஒட்டு மொத்த பகுதிகளுக்கும் எந்த ஒரு கப்பலும் நுழைவதை தடுப்பதற்காக பிரிட்டன் சர்வதேச நீர்ப்பரப்பில் கண்ணி வெடிகளை பதித்தது. இது நடு நிலை வகித்த நாடுகளின் கப்பல்களுக்கும் கூட ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.[107] பிரிட்டனின் இந்த உத்திக்கு சிறிதளவே எதிர்ப்பு கிளம்பியதால், தன்னுடைய வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறைக்கும் இதே போன்று சிறிதளவே எதிர்ப்பு இருக்கும் என செருமனி எதிர்பார்த்தது.[108]

சூட்லாந்து யுத்தம் (செருமானிய மொழி: ஸ்காகெராக்ஸ்லாக்ட், அல்லது ஸ்காகெராக் யுத்தம்) என்பது 1916 மே அல்லது சூன் மாதத்தில் தொடங்கியது. போரின் மிகப்பெரிய கடற்படை யுத்தமாக மாறியது. போரின்போது முழு அளவில் போர் கப்பல்கள் மோதிக்கொண்ட ஒரே ஒரு யுத்தமாக இது திகழ்ந்தது. வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. செருமனியின் உயர் கடல் கப்பல் குழுவானது துணைத்தளபதி ரெயினார்டு சீரால் தலைமை தாங்கப்பட்டது. இது தளபதி சர் யோவான் செல்லிக்கோவால் தலைமை தாங்கப்பட்ட பிரிட்டனின் அரச கடற்படையின் பெரும் கப்பல் குழுவுடன் சண்டையிட்டது. இந்த சண்டையானது ஒரு நிலைப்பாடாக இருந்தது. செருமானியர்களை அளவில் பெரியதாக இருந்த பிரித்தானியக் கப்பல் குழுவானது பக்கவாட்டில் சென்று சுற்றி வளைத்தது. ஆனால் தாங்கள் சந்தித்த இழப்புகளை விட பிரித்தானிய கப்பல் குழுவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி விட்டு செருமானியக் கப்பல் குழுவானது தப்பிச்சென்றது. எனினும் உத்தி ரீதியாக பிரித்தானியர்கள் கடல் மீதான தங்களது கட்டுப்பாட்டை நிலை நாட்டினர். போர் காலத்தின் போது பெரும்பாலான செருமானிய கடற்பரப்பு குழுவானது துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.[109]

1918ஆம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இலண்டனில் உள்ள கோபுர பாலத்திற்கு அருகில் யு-155 கப்பலானது பொதுமக்கள் பார்வைக்கு காட்டப்படுகிறது.

வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட வணிக கப்பல் வழிகளை வெட்டிவிட செருமானிய நீர்மூழ்கி யு கப்பல்கள் முயற்சித்தன.[110] நீர்மூழ்கி போர்முறையின் இயல்பு யாதெனில் அவற்றின் தாக்குதல்கள் பெரும்பாலான நேரங்களில் எச்சரிக்கை கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டன. இதனால் வணிக கப்பல்களின் மக்கள் உயிர் பிழைப்பதற்கு சிறிதளவே வாய்ப்பு இருந்தது.[110][111] ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. செருமனி தனது போர்முறை விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்தது. 1915இல் பயணிகள் கப்பலான ஆர். எம். எஸ். லூசிதனியாவின் மூழ்கடிப்புக்குப் பிறகு பயணிகள் கப்பல்களை இலக்காகக் கொள்ள மாட்டோம் என செருமனி உறுதியளித்தது. அதே நேரத்தில் பிரிட்டன் தனது வணிகக் கப்பல்களில் ஆயுதங்களை பாதுகாப்புக்காக பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக "விரைவு கப்பல் சட்டங்களின்" பாதுகாப்புக்குள் வணிகக் கப்பல்கள் வர இயலாமல் போனது. விரைவு கப்பல் விதிகளானவை எச்சரிக்கையையும், கப்பலில் உள்ளவர்கள் "ஒரு பாதுகாப்பான இடத்திற்கு" செல்வதையும் உறுதி செய்ய வலியுறுத்தின. அதே நேரத்தில் கப்பல் மூழ்கினால் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் படகுகள் இத்தகைய தரத்தை பூர்த்தி செய்யவில்லை. [112]இறுதியாக 1917ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறை என்ற ஒரு கொள்கையை செருமனி பின்பற்ற ஆரம்பித்தது. அமெரிக்கர்கள் இறுதியாக போருக்குள் நுழைவார்கள் என்பதை உணர்ந்த பிறகு அது இதைச் செய்தது.[113][110] ஒரு பெரிய இராணுவத்தை அயல்நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா நகர்த்துவதற்கு முன்னர் நேச நாடுகளின் கடல் வழிகளை அழிக்க செருமனி முயற்சித்தது. இதில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், இறுதியாக செருமனி தோல்வியடைந்தது.[110]

யு வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தலானது 1917ஆம் ஆண்டு குறைந்தது. அந்நேரத்தில் வணிகக் கப்பல்கள் போர்க் கப்பல்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு குழுவாக பயணித்தன. இந்த உத்தியானது யு கப்பல்களுக்கு இலக்குகளை கண்டுபிடிப்பதை கடினமாக்கியது. இது இழப்புகளை பெருமளவு குறைத்தது. நீருக்கடியில் உள்ள அதிர்வுகளை கண்டுபிடிக்கும் கருவி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மேல் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்யும் நுட்பம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்த போர்க்கப்பல்கள் நீரில் மூழ்கியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வெற்றிகரமாக ஓரளவு தாக்குவதற்கு வாய்ப்பு உருவானது. பொருட்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதை இந்த கப்பல் குழுக்கள் மெதுவாக்கின. ஏனெனில் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படும் வரை வணிகக் கப்பல்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த காத்திருப்புகளுக்கு தீர்வாக புதிய வணிகக் கப்பல்களை உருவாக்கும் ஒரு விரிவான திட்டமானது செயல்படுத்தப்பட்டது. துருப்புக்களை கொண்டு செல்லும் கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை விட மிகுந்த வேகத்தில் பயணித்தன. வட அத்திலாந்திக்கு பெருங்கடலில் இவ்வகை துருப்பு கப்பல்கள் குழுக்களாக பயணிக்கவில்லை.[114] யு கப்பல்கள் 5,000க்கும் மேற்பட்ட நேச நாடுகளின் கப்பல்களை மூழ்கடித்தன. அதே நேரத்தில் 199 நீர்மூழ்கி யு கப்பல்களும் இந்த நடவடிக்கைகளின் போது மூழ்கின.[115]

யுத்தத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப்போர் கண்டது. எச். எம். எஸ். பியூரியசு வானூர்தி தாங்கிக் கப்பலானது சோப்வித் கேமல் எனும் போர் விமானங்களை பயன்படுத்தி சூலை 1918இல் தொண்டெர்ன் என்ற இடத்தில் செப்பலின் வான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு எதிராக ஒரு வெற்றிகரமான ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியது. மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான ரோந்துக்காக பிலிம்ப் எனப்படும் வான் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப் போர் முதன் முதலாக கண்டது.[116]

தெற்கு போர் அரங்குகள்

[தொகு]

பால்கன் பகுதியில் போர்

[தொகு]
செர்பியாவில் இருந்து அகதிகள் கொண்டு செல்லப்படுதல். இடம் லெயிப்னித்சு, செர்பியா ஆண்டு 1914.
ஒரு பதுங்கு குழியில் பல்கேரிய வீரர்கள். வந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திற்கு எதிராக சுடுவதற்கு தயாராகின்றனர்.
கைது செய்யப்பட்ட செர்பியர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தும் ஆத்திரியா-அங்கேரிய துருப்புகள், ஆண்டு 1917. போரின் போது சுமார் 8.50 இலட்சம் பேரை செர்பியா இழந்தது. இது போருக்கு முந்தைய செர்பியாவின் மக்கள் தொகையில் கால் பங்கு ஆகும்.[117]

உருசியாவை கிழக்கில் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் செர்பியாவை தாக்குவதற்கு தன் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஆத்திரியா-அங்கேரியால் பயன்படுத்த முடிந்தது. கடுமையான இழப்புகளை சந்தித்ததற்குப் பிறகு செர்பியாவின் தலைநகரான பெல்கிறேடை ஆத்திரியர்கள் குறுகிய காலத்திற்கு ஆக்கிரமித்திருந்தனர். கோலுபரா யுத்தத்தில் நடத்தப்பட்ட ஒரு செர்பிய பதில் தாக்குதலானது ஆத்திரியர்களை செர்பியாவிலிருந்து 1916ஆம் ஆண்டின் இறுதியில் துரத்துவதில் வெற்றியடைந்தது. 1915ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கு ஆத்திரியா-அங்கேரியானது அதன் இராணுவ சேம கையிருப்பு படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் சண்டையிடுவதற்கு பயன்படுத்தியிருந்தது. எனினும் செர்பியா மீதான தாக்குதலுக்கு தங்களுடன் இணைவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்ததன் மூலம் செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய தூதர்கள் எதிர் தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்தனர்.[118] ஆத்திரியா-அங்கேரிய மாகாணங்களான சுலோவீனியா, குரோவாசியா மற்றும் பொசுனியா ஆகியவை செர்பியா, உருசியா மற்றும் இத்தாலியுடனான சண்டையில் ஆத்திரியா-அங்கேரிக்கு துருப்புக்களை வழங்கின. அதே நேரத்தில் மான்டினீக்ரோ செர்பியாவுடன் இணைந்தது.[119]

செர்பியா மீது 14 அக்டோபர் 1915 அன்று பல்கேரியா போரை அறிவித்தது. மக்கென்சென் தலைமையிலான 2.50 இலட்சம் வீரர்களைக் கொண்ட ஆத்திரியா-அங்கேரிய இராணுவம் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த தாக்குதலில் தன்னை இணைத்துக் கொண்டது. தற்போது பல்கேரியாவையும் உள்ளடக்கியிருந்த மைய சக்திகள் ஒட்டு மொத்தமாக 6 இலட்சம் துருப்புகளை செர்பியாவுக்கு அனுப்பியிருந்தன. செர்பியாவானது ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான காலத்தில் வெல்லப்பட்டது. இரு முனைகளிலும் போரில் சண்டையிட்டு கொண்டிருந்த மற்றும் தோல்வியடையும் நிலையை எதிர் நோக்கி இருந்த செர்பிய இராணுவமானது வடக்கு அல்பேனியாவுக்குள் பின் வாங்கியது. கொசோவா யுத்தத்தில் செர்பியர்கள் தோல்வியடைந்தனர். 6-7 சனவரி 1916இல் மோச்கோவக் யுத்தத்தில் அத்திரியாத்திக் கடற்கரையை நோக்கி பின்வாங்கிக் கொண்டிருந்த செர்பியர்களுக்கு மான்டினீக்ரோ படையினர் பக்கவாட்டு பாதுகாப்பை அளித்தனர். ஆனால் இறுதியாக ஆத்திரியர்கள் மான்டினீக்ரோவையும் வென்றனர். உயிர் பிழைத்திருந்த செர்பிய வீரர்கள் கப்பல் மூலம் கிரேக்கத்திற்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர்[120]. இந்த வெற்றிக்கு பிறகு செர்பியாவானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியாவால் பிரித்துக் கொள்ளப்பட்டது.[121]

1915ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பிரெஞ்சு-பிரித்தானிய படையானது கிரேக்கத்தின் சலோனிகாவில் உதவி அளிப்பதற்காகவும், கிரேக்க அரசாங்கத்தை மைய சக்திகளுக்கு எதிராக போரை அறிவிக்கச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காகவும் வந்திறங்கியது. எனினும் செருமனிக்கு ஆதரவான கிரேக்க மன்னர் முதலாம் கான்சுடன்டைன் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்த எலெப்தெரியோசு வெனிசெலோசின் அரசாங்கத்தை நேச நாடுகளின் சிறப்பு படை வருவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்தார்.[122] கிரேக்க மன்னர் மற்றும் நேச நாடுகளுக்கு இடையிலான உரசலானது கிரேக்கம் பிரிக்கப்படும் நிலை வரை தொடர்ந்து அதிகரித்தது. மன்னருக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்த பகுதிகள் மற்றும் சலோனிகாவில் நிறுவப்பட்ட வெனிசெலோசின் புதிய மாகாண அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் இறுதியாக கிரேக்கம் பிரிக்கப்பட்டது. தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏதென்சில் நேச நாட்டு மற்றும் கிரேக்க அரசு படைகளுக்கு இடையிலான ஓர் ஆயுதச் சண்டைக்கு பிறகு கிரேக்க மன்னர் பதவி விலகினார். இந்த சண்டையானது நோவம்விரியானா என்றும் அறியப்படுகிறது. கிரேக்க மன்னருக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் அலெக்சாந்தர் அவரது பதவிக்கு வந்தார். சூன் 1917 அன்று நேச நாடுகள் பக்கம் கிரேக்கம் அலுவல் பூர்வமாக போரில் இணைந்தது.

மாசிடோனிய போர் முனையானது தொடக்கத்தில் பெரும்பாலும் மாறாததாக இருந்தது. கடுமையான இழப்புகளை தந்த மொனசுதிர் தாக்குதலைத் தொடர்ந்து 19 நவம்பர் 1916 அன்று மீண்டும் பிதோலாவை கைப்பற்றியதன் மூலம் மாசிடோனியாவின் சில பகுதிகளை பிரெஞ்சு மற்றும் செர்பிய படைகள் கைப்பற்றின. இது இப்போர் முனைக்கு ஒரு நிலைத் தன்மையை கொடுத்தது.[123]

பெரும்பாலான செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய துருப்புக்கள் பின் வாங்கியதற்கு பிறகு செப்டம்பர் 1918இல் வர்தர் தாக்குதலில் செர்பியா மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் இறுதியாக ஒரு முன்னேற்றத்தை அடைந்தன. தோபுரோ உச்சி யுத்தத்தில் பல்கேரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பல்கேரிய இராணுவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொழுது 25 செப்டம்பருக்குள் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் எல்லையை தாண்டி முதன்மை பல்கேரியாவுக்குள் நுழைந்தன. நான்கு நாட்களுக்கு பிறகு 29 செப்டம்பர் 1918 அன்று பல்கேரியா தோல்வியை ஒப்புக் கொண்டது.[124] செருமானிய உயர் தலைமையானது இதற்கு எதிர்வினையாக எல்லை கோட்டை தற்காப்பதற்காக துருப்புகளை அனுப்பியது. ஆனால் ஒரு போர் முனையை மீண்டும் நிறுவுவதற்கு இந்த துருப்புகள் மிகவும் பலவீனமானவையாக இருந்தன.[125]

மாசிடோனிய போர் முனையானது மறைந்து விட்டதன் பொருள் யாதெனில் புடாபெசுட்டு மற்றும் வியன்னாவுக்கான வழியானது நேச நாடுகளின் படைகளுக்கு தற்போது திறந்து விடப்பட்டது என்பதாகும். இன்டன்பர்க்கு மற்றும் லுதென்தோர்பு ஆகியோர் உத்தி மற்றும் திட்ட சமநிலையானது தீர்க்கமாக மைய சக்திகளுக்கு எதிராக முடிவானதை குறிப்பிட்டனர். பல்கேரியா வீழ்ச்சியடைந்து ஒரு நாளுக்குப் பிறகு உடனடி அமைதி உடன்படிக்கைக்கு வலியுறுத்தினர்.[126]

உதுமானியப் பேரரசு

[தொகு]
கலிப்பொலி படையெடுப்பின் போது ஒரு துருக்கிய பதுங்கு குழிக்கு அருகில் ஆத்திரேலியத் துருப்புக்கள் முன்னேறுதல்
கான்ஸ்டண்டினோபிலுக்கு வருகை புரியும் செருமனியின் இரண்டாம் வில்லியமை வரவேற்கும் உதுமானியப்பேரரசின் ஐந்தாம் மெகமெது

உருசியாவின் காக்கேசிய நிலப்பரப்புகள் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவுடனான பிரிட்டனின் தொடர்புகளுக்கு உதுமானியர்கள் அச்சுறுத்தலாக விளங்கினார். சண்டையானது தொடர்ந்த போது போரில் ஐரோப்பிய சக்திகள் கவனம் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உதுமானியப் பேரரசு பூர்வகுடி ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய கிறித்தவ மக்களை ஒழிக்கும் ஒரு பெரிய அளவிலான இனப் படுகொலையை நடத்தியது. இவை ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய இனப் படுகொலைகள் என்று அறியப்படுகின்றன.[127][128][129]

பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் தம் அயல் நாட்டு போர் முனைகளை கலிப்பொலி (1915) மற்றும் மெசொப்பொத்தேமிய (1914) படையெடுப்புகளின் மூலம் தொடங்கினர். கலிப்பொலியில் உதுமானியப் பேரரசானது வெற்றிகரமாக பிரித்தானிய, பிரெஞ்சு, மற்றும் ஆத்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ பிரிவினரை வெற்றிகரமாக முறியடித்தது. மெசொப்பொத்தேமியாவில் மாறாக உதுமானியர்களின் கூத் முற்றுகையில் (1915-16) பிரித்தானிய தற்காப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, மார்ச் 1917இல் பிரித்தானிய ஏகாதிபத்திய படைகள் மீண்டும் ஒருங்கிணைந்து பகுதாதுவை கைப்பற்றின. மெசொப்பொத்தேமியாவில் பிரித்தானியர்களுக்கு உள்ளூர் அரேபிய மற்றும் அசிரிய வீரர்கள் உதவி செய்தனர். அதே நேரத்தில் உதுமானியர்கள் உள்ளூர் குர்து மற்றும் துருக்கோமன் பழங்குடியினங்களை பயன்படுத்தினர்.[130]

பாலத்தீனத்தில் ஓர் இயந்திரத் துப்பாக்கி பயிற்சியாளருடன் இத்தாலிய இராணுவத்தின் குறிபார்த்துச் சுடும் பெர்சக்லியேரி துருப்பினர்

மேலும் மேற்கே 1915 மற்றும் 1916இல் சூயஸ் கால்வாயானது உதுமானிய தாக்குதல்களில் இருந்து தற்காக்கப்பட்டது. ஆகத்து மாதத்தில் ஒரு செருமானிய மற்றும் உதுமானியப் படையானது உரோமானி யுத்தத்தில் ஆத்திரேலியா-நியூசிலாந்து காலாட் படை பிரிவு மற்றும் பிரித்தானிய இராணுவத்தின் 52வது (தாழ்நில) காலாட் படை பிரிவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு எகிப்திய சிறப்பு படையானது சினாய் தீபகற்பம் முழுவதும் முன்னேறியது. திசம்பரில் மக்தபா யுத்தம் மற்றும் சனவரி 1917இல் எகிப்திய சினாய் மற்றும் உதுமானிய பாலத்தீனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எல்லையில் நடந்த இராப்பா யுத்தத்தில் உதுமானியப் படைகளை உந்தித் தள்ளியது.[131]

உருசிய இராணுவங்கள் காக்கேசிய படையெடுப்பில் பொதுவாக வெற்றி பெற்றன. உதுமானிய ஆயுதப்படைகளின் உச்ச தளபதியான என்வர் பாஷா வெற்றி மற்றும் அதிகாரம் மீது உயரவா உடையவராக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. உருசியாவிடம் முன்னர் இழந்த பகுதிகள் மற்றும் நடு ஆசியாவை மீண்டும் வெல்வது குறித்து கனவு கண்டார். எனினும், இவர் ஒரு பலவீனமான தளபதியாக இருந்தார்.[132] 1 இலட்சம் வீரர்களைக் கொண்டு திசம்பர் 1914இல் காக்கேசியாவில் உருசியர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை இவர் தொடங்கினார். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்த உருசியர்களின் நிலைகளுக்கு எதிராக குளிர்காலத்தில் ஒரு தாக்குதலை நடத்துவதற்கு இவர் வலியுறுத்தினார். சரிகமிசு யுத்தத்தில் இவர் தனது படைகளில் 86 சதவீதத்தை இழந்தார்.[133]

துருக்கிய துருப்புகளின் 15ஆவது படைப்பிரிவை ஆய்வு செய்யும் செருமனியின் இரண்டாம் கெய்சர் வில்லியம். இடம் கிழக்கு கலீசியா, ஆத்திரியா-அங்கேரி (இது தற்போது போலந்தில் உள்ளது). கிழக்குப் போர்முனையில் செருமானிய இராணுவத்தின் உச்ச தளபதியான பவாரியாவின் இளவரசரான லியோபோல்ட் இடது புறமிருந்து இரண்டாவதாக உள்ளார்.

உதுமானியப் பேரரசானது செருமானிய உதவியுடன் திசம்பர் 1916இல் பாரசீகம் (தற்போதைய ஈரான்) மீது படையெடுத்தது. காசுப்பியன் கடலுக்கு அருகில் இருந்த பக்கூவை சுற்றியிருந்த எண்ணெய் வளங்களுக்கான பிரித்தானிய மற்றும் உருசிய தொடர்பை வெட்டிவிடும் முயற்சியாக அது இதைச் செய்தது.[134] வெளிப்படையாக பாரசீகமானது நடுநிலை வகித்து வந்தது. எனினும், நீண்ட காலமாக பிரித்தானிய மற்றும் உருசிய செல்வாக்கு பகுதியாக இருந்தது. உதுமானியர்கள் மற்றும் செருமானியர்களுக்கு குர்து மற்றும் அசேரி படைகளும், கசுகை, தங்கிசுதானிகள், லுர்கள் மற்றும் கம்சே போன்ற முதன்மையான ஈரானிய பழங்குடிகளின் ஒரு பெரும் அளவிலான எண்ணிக்கையுடையவர்களும் உதவி புரிந்தனர். அதே நேரத்தில் உருசியர்கள் மற்றும் பிரித்தானியர்களுக்கு ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் உதவி புரிந்தன. பாரசீக படையெடுப்பானது 1918ஆம் ஆண்டு வரை நீடித்தது. உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு ஒரு தோல்வியாக இது முடிவடைந்தது. எனினும், 1917இல் போரில் இருந்து உருசியா பின்வாங்கிய நிகழ்வானது உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் படைகளுக்கு ஒரு தொடர்ச்சியான தோல்விகளை கொடுத்த ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் இராணுவ பொருட்கள் வழங்கும் வழிகள் துண்டிக்கப்பட்டது, எண்ணிக்கை குறைவு, ஆயுதம் குறைவு மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால் பாதிப்படைந்தன. இதன் காரணமாக அப்படையினர் வடக்கு மெசபத்தோமியாவில் இருந்த பிரித்தானிய கோடுகளை நோக்கி சண்டையிட்டவாறே தப்பித்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.[135]

1914-1915இல் சரிகமிசு யுத்தத்தில் ஓர் உருசிய காட்டு பதுங்கு குழி

1915 - 1916இல் உருசிய தளபதியாக இருந்த தளபதி யுதேனிச்சு ஒரு தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் பெரும்பாலான தெற்கு காக்கேசியாவில் இருந்து துருக்கியர்களை துரத்தி அடித்தார்.[133] 1916ஆம் ஆண்டின் படையெடுப்பின் போது எருசுரும் தாக்குதலில் உருசியர்கள் துருக்கியர்களை தோற்கடித்தனர். மேலும் திராப்சோனையும் ஆக்கிரமித்தனர். 1917இல் உருசியாவின் மாட்சி மிக்க கோமான் நிகோலசு காக்கேசிய போர்முனைக்கான தலைமையை ஏற்றார். வெற்றி பெற்ற நிலப்பரப்புகளுக்கு உருசிய ஜார்ஜியாவில் இருந்து ஒரு தொடருந்து வழித்தடத்தை ஏற்படுத்த நிகோலசு திட்டமிட்டார். இதன் மூலம் 1917ஆம் ஆண்டுக்கான ஒரு புதிய தாக்குதலுக்காக இராணுவ பொருட்கள் கொண்டு வரப்படலாம் என எண்ணினார். எனினும், மார்ச் 1917 (இது புரட்சிக்கு முந்தைய உருசிய நாட்காட்டியில் பெப்ரவரி என்று குறிப்பிடப்படுகிறது) பெப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து ஜார் மன்னர் பதவி விலகினார். புதிய உருசிய காக்கேசிய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது.

பிரித்தானிய அயல்நாட்டு அலுவலகத்தின் அரேபிய பிரிவால் தூண்டப்பட்ட அரபுக் கிளர்ச்சியானது சூன் 1916இல் தொடங்கியது. இதன் முதல் சண்டையாக மெக்கா யுத்தம் நடைபெற்றது. மெக்காவைச் சேர்ந்த சரீப் உசைன் இதற்கு தலைமை தாங்கினார். திமிஷ்குவை உதுமானியர்கள் சரணடைய வைத்ததுடன் இது முடிவடைந்தது. மதீனாவின் உதுமானிய தளபதியான பக்ரி பாஷா மதீனா முற்றுகையின் போது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தாக்குப் பிடித்தார். பிறகு சனவரி 1919இல் சரணடைந்தார்.[136]

இத்தாலிய லிபியா மற்றும் பிரித்தானிய எகிப்து ஆகிய நாடுகளின் எல்லையின் பக்கவாட்டில் அமைந்திருந்த செனுச்சி பழங்குடியினமானது துருக்கியர்களால் தூண்டப்பட்டு ஆயுத உதவி பெற்றது. இப்பழங்குடியினம் நேச நாட்டு துருப்புகளுக்கு எதிராக ஒரு சிறு அளவிலான கரந்தடிப் போர் முறையை தொடுத்தது. செனுச்சி படையெடுப்பில் இப்பழங்குடியினத்தை எதிர்ப்பதற்காக 12,000 துருப்புகளை அனுப்பும் நிலைக்கு பிரித்தானியர்கள் தள்ளப்பட்டனர். 1916ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த கிளர்ச்சியானது இறுதியாக நொறுக்கப்பட்டது.[137]

உதுமானிய போர் முனைகளில் ஒட்டு மொத்த நேச நாட்டுப் போர் வீரர்களின் இழப்பானது 6.50 இலட்சம் வீரர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த உதுமானிய இழப்பானது 7.25 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3.25 இலட்சம் பேர் இறந்தனர். 4 இலட்சம் பேர் காயமடைந்தனர்.[138]

இத்தாலிய போர் முனை

[தொகு]
இசோன்சோ தாக்குதல், 1915-1917

1882இலேயே முக்கூட்டணியில் இத்தாலி இணைந்திருந்த போதும், இதன் பாரம்பரிய எதிரியான ஆத்திரியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமானது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. பின் வந்த அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தன. 1915ஆம் ஆண்டு தான் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டன.[139] திரெந்தினோ, ஆத்திரிய கரைப் பகுதி, ரிசேகா மற்றும் தால்மேசியா ஆகியவற்றில் இருந்த ஆத்திரிய-அங்கேரிய நிலப்பரப்பு மீது இத்தாலிய தேசியவாதிகளுக்கு விருப்பம் இருந்தது. 1866ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எல்லைகளை பாதுகாப்பதற்கு இப்பகுதிகள் மிகவும் இன்றியமையாதவை என கருதப்பட்டன.[140] 1902ஆம் ஆண்டு பிரான்சுடன் உரோம் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது. இந்த உடன்படிக்கைப் படி பிரான்சை செருமனி தாக்கினால் இத்தாலி நடுநிலை வைக்கும் என்பதாகும். முக்கூட்டணியில் இத்தாலியின் பங்கை இந்த உடன்படிக்கை ஒன்றுமில்லாததாக்கியது.[141]

பதுங்கு குழியில் இத்தாலிய வீரர்கள், ஆண்டு 1918
ஆர்ட்லெர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,850 மீட்டர்கள் உயரத்திலிருந்த ஆத்திரியா-அங்கேரிய படையின் பதுங்கு குழி. போரின் மிகுந்த சவால் விடுக்கக் கூடிய போர் முனையாக இது திகழ்ந்தது.

1914ஆம் ஆண்டு போர் தொடங்கிய போது முக்கூட்டணியானது இயற்கையில் தற்காப்புத் தன்மை உடையது என இத்தாலி வாதிட்டது. செர்பியா மீதான ஆத்திரியாவின் தாக்குதலுக்கு உதவுவதற்கு தான் உடன்படாது என்றும் கூறியது. செப்டம்பரில் துருக்கி மைய சக்திகளின் ஒர் உறுப்பினரான போது மைய சக்திகளின் பக்கம் இத்தாலி இணைவதற்கு எதிர்ப்பானது மேலும் அதிகரித்தது. 1911ஆம் ஆண்டு முதல் லிபியா மற்றும் தோதேகனீசு தீவுகளில் இருந்த உதுமானிய பகுதிகளை இத்தாலி ஆக்கிரமித்திருந்தது.[142] இத்தாலிய நடுநிலைமையை மாற்றுவதற்காக மைய சக்திகள் இத்தாலிக்கு பிரெஞ்சு பாதுகாப்பு பகுதியான துனீசியாவை கொடுக்க முன் வந்தன. இதற்கு பதிலாக போரில் உடனடியாக இத்தாலி நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்தின. அதே நேரத்தில் ஆத்திரிய நிலப்பரப்பு மீதான இத்தாலியின் கோரிக்கை மற்றும் தோதேகனீசு தீவின் மீதான இறையாண்மை ஆகியவற்றுக்கு நேச நாடுகள் ஒப்புக் கொண்டன.[143] இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் இந்த பிரிவுகள் ஏப்ரல் 1915இன் இலண்டன் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. இத்தாலி முந்நேச நாடுகள் பக்கம் இணைந்தது. 23 மே அன்று ஆத்திரியா-அங்கேரி மீது போரை அறிவித்தது.[144] 15 மாதங்கள் கழித்து செருமனி மீதும் போரை அறிவித்தது.

1914க்கு முந்தைய கால கட்டத்தில் இத்தாலியின் இராணுவமானது ஐரோப்பாவிலேயே பலவீனமானதாக இருந்தது. அதிகாரிகள், பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆகியவற்றில் பற்றாக்குறை இருந்தது. போதிய அளவு போக்குவரத்து வசதிகள் மற்றும் நவீன ஆயுதங்களும் இதனிடம் இல்லாமல் இருந்தன. ஏப்ரல் 1915ஆம் ஆண்டு வாக்கில் இந்த குறைகளில் சில சரி செய்யப்பட்டன. ஆனால் இலண்டன் ஒப்பந்தத்தால் கோரப்பட்ட ஒரு பெரும் தாக்குதலுக்கு இத்தாலி இன்னும் தயாராகாமலேயே இருந்தது.[145] அதிகப்படியான எண்ணிக்கையில் இருந்த வீரர்களை கொண்டிருந்த இத்தாலியின் அனுகூலத்தை கடுமையான நிலப்பரப்பானது குறைத்தது. பெரும்பாலான சண்டையானது கடல் பரப்பில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்த ஆல்ப்ஸ் மற்றும் தோலோமைத்து மலைப் பகுதிகளில் நடைபெற்றது. அங்கு பதுங்கு குழிகளை அமைக்க பாறைகளையும், பனிக் கட்டிகளையும் வெட்ட வேண்டியிருந்தது. மேலும், துருப்புகளுக்கு இராணுவ பொருட்களை வழங்குவதும் ஒரு முதன்மையான சவாலாக இருந்தது. நன்றாக வகுக்கப்படாத உத்திகள் இந்த பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கின.[146] 1915 மற்றும் 1917க்கு இடையில் இத்தாலிய தளபதியான லுயிகி கதோர்னா இசோன்சோவுக்கு பக்கவாட்டில் ஒரு தொடர்ச்சியான முன் கள தாக்குதல்களை மேற்கொண்டார். எனினும், இதில் சிறிதளவே முன்னேற்றம் கண்டார். ஏராளமான வீரர்களை இழந்தார். போரின் முடிவில் சண்டையில் இழந்த ஒட்டு மொத்த இத்தாலிய வீரர்களின் எண்ணிக்கையானது சுமார் 5.48 இலட்சமாக இருந்தது.[147]

1916ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தங்களது இசுதிராபே படையெடுப்பில் ஆத்திரியா-அங்கேரியர்கள் அசியாகோவில் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் சிறிதளவே வெற்றி பெற்றனர். அவர்கள் இத்தாலியர்களால் தைரோலுக்கு மீண்டும் உந்தித் தள்ளப்பட்டனர்.[148] மே 1916இல் தெற்கு அல்பேனியாவை இத்தாலிய படைப் பிரிவினர் ஆக்கிரமித்து இருந்த போதும், அவர்களது முதன்மையான இலக்காக இசோன்சோ போர் முனை திகழ்ந்தது. ஆகத்து 1916இல் கோரிசியா கைப்பற்றப்பட்டது. பிறகு இந்த போர் முனையானது அக்டோபர் 1917 வரை யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தது. கபோரெட்டோவில் ஓர் ஒன்றிணைந்த ஆத்திரியா-அங்கேரியப் படையானது ஒரு பெரும் வெற்றியை பெற்றதற்கு பிறகு, இத்தாலிய தளபதி பதவியானது கதோர்னாவிடம் இருந்து ஆர்மாண்டோ தயசிடம் கொடுக்கப்பட்டது. அவர் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பின் வாங்கி பியாவே ஆற்றின் பக்கவாட்டில் தனது நிலைகளை அமைத்து தற்காக்க ஆரம்பித்தார்.[149] சூன் 1918இல் ஓர் இரண்டாவது ஆத்திரிய தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. அக்டோபர் மாத இறுதியில் மைய சக்திகள் தோல்வியடைந்து விட்டது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. 24 அக்டோபர் அன்று விட்டோரியோ வெனெட்டோ யுத்தத்தை தயசு தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் பிடிவாதமான எதிர்ப்பை சந்தித்தார்.[150] ஆனால் ஆத்திரியா-அங்கேரி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காரணத்தால் இத்தாலியிலிருந்து அங்கேரிய படைப் பிரிவினர் தாங்கள் குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.[151] இதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, மேலும் பலரும் இவ்வாறு கூற ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது. இத்தாலியர்கள் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை பிடித்தனர்.[152] 30 நவம்பர் அன்று வில்லா கியுசுதி போர் நிறுத்த ஒப்பந்தமானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலிக்கு இடையிலான சண்டைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அத்திரியாத்திக்கு கடலுக்கு பக்கவாட்டில் திரியேசுதே மற்றும் பிற பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இத்தாலிக்கு அப்பகுதிகள் 1915இல் கொடுக்கப்பட்டன.[153]

உருமேனிய பங்கெடுப்பு

[தொகு]
முதலாம் உலகப் போர் is located in உருமேனியா
திமிசோவரா (பனத்)
திமிசோவரா (பனத்)
குலுச் (திரான்சில்வேனியா)
குலுச் (திரான்சில்வேனியா)
சிசினவு (மால்தோவா)
சிசினவு (மால்தோவா)
கான்சுடன்டா (தோபுருசா)
கான்சுடன்டா (தோபுருசா)
மரசெசுதி
மரசெசுதி
ஒயிதுசு
ஒயிதுசு
உருமேனியா முக்கிய இடங்கள் 1916–1918 (குறிப்பு; 2022 எல்லைகள் படி)

1883ஆம் ஆண்டு முக்கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இரகசியமாக ஒப்புக்கொண்ட போதும் 1912 - 1913 பால்கன் போர்களில் பல்கேரியாவிற்கு மைய சக்திகள் ஆதரவளித்ததன் காரணமாக உருமேனியாவுக்கும், மைய சக்திகளுக்கும் கருத்து வேறுபாடானது அதிகரித்து வந்தது. அங்கேரியால் கட்டுப்படுத்தப்பட்ட திரான்சில்வேனியாவில்[154] உருமேனிய இன சமூகங்களின் நிலை குறித்தும் உருமேனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மொத்த மக்கள் தொகையான 50 இலட்சத்தில் 28 இலட்சம் உருமேனிய இனத்தவரை திரான்சில்வேனியா உள்ளடக்கி இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[155] உருமேனியாவின் ஆளும் வர்க்கத்தினர் செருமானிய ஆதரவு மற்றும் நேச நாட்டு ஆதரவு பிரிவுகளாக இருந்தனர். 1914இல் உருமேனியா தொடர்ந்து நடு நிலை வகித்தது. உருமேனியாவும் இத்தாலியைப் போலவே, செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் பிரகடனம் செய்தால் அப்போரில் உருமேனியாவும் இணைய வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை என்று கூறியது.[156] இந்நிலையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உருமேனியா பேணி வந்தது. அதே நேரத்தில் இராணுவ பொருட்கள் மற்றும் ஆலோசகர்களை உருமேனிய நிலப்பரப்பு வழியாக எடுத்துச் செல்வதற்கு செருமனி மற்றும் ஆத்திரியாவுக்கு உருமேனியா அனுமதி அளித்து வந்தது.[157]

செப்டம்பர் 1914இல் திரான்சில்வேனிய மற்றும் பனத் உள்ளிட்ட ஆத்திரியா-அங்கேரிய நிலப்பரப்புகளுக்கு உருமேனியா கொண்டிருந்த உரிமையை உருசியா ஒப்புக்கொண்டது. இப்பகுதிகளை உருமேனியா வாங்கியது பரவலான பொது மக்களின் ஆதரவை பெற்றது.[155] ஆத்திரியாவுக்கு எதிராக உருசியாவின் வெற்றியானது ஆகத்து 1916இன் புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் நேச நாடுகள் பக்கம் உருமேனியா இணைவதற்கு இட்டுச் சென்றது.[157] கருதுகோள் இசட் என்று அறியப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் உருமேனிய இராணுவமானது திரான்சில்வேனியாவுக்குள் ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டது. அதே நேரத்தில், தெற்கு தோபுருசா மற்றும் கியூர்கியூ ஆகிய பகுதிகள் மீது ஒரு வேளை பல்கேரியா பதில் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் திட்டமிட்டது.[158] 27 ஆகத்து 1916 அன்று உருமேனியர்கள் திரான்சில்வேனியாவை தாக்கினர். அம்மாகாணத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதிகளை ஆக்கிரமித்தனர். பிறகு, முன்னாள் செருமானிய தலைமை தளபதி பால்கன்கயனால் தலைமை தாங்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட செருமானிய 9ஆம் இராணுவத்தால் மீண்டும் அங்கிருந்து உந்தித் தள்ளப்பட்டனர்.[159] ஓர் ஒன்றிணைந்த செருமானிய-பல்கேரிய-துருக்கிய தாக்குதலானது தோபுருசா மற்றும் கியூர்கியூ பகுதிகளை கைப்பற்றியது. எனினும், பெருமளவிலான உருமேனிய இராணுவமானது சுற்றி வளைக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. புக்கரெஸ்டுக்கு பின் வாங்கியது. புக்கரெஸ்ட் 6 திசம்பர் 1916 அன்று மைய சக்திகளிடம் சரண் அடைந்தது.[160]

போருக்கு முந்தைய ஆத்திரியா-அங்கேரியின் மக்கள் தொகையானது உருமேனியர்களை சுமார் 16 சதவீதமாக உள்ளடக்கி இருந்தது. போர் தொடர்ந்த நேரத்தில் ஆத்திரியா-அங்கேரிக்கான அவர்களது விசுவாசமானது மங்க ஆரம்பித்தது. 1917ஆம் ஆண்டு வாக்கில் ஆத்திரிய ஏகாதிபத்திய இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற 3 இலட்சம் வீரர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் உருமேனிய இனத்தவர்களாக இருந்தனர்.[161] உருசிய பேரரசால் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளில் இருந்து உருமேனிய தன்னார்வ பிரிவானது உருவாக்கப்பட்டது. இப்பிரிவினர் 1917இல் உருமேனியாவிற்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்.[162][163][n] இவர்களில் பலர் மரசுதி, மரசெசுதி மற்றும் ஒயிதுசு ஆகிய இடங்களில் சண்டையிட்டனர். அங்கு உருசிய ஆதரவுடன் உருமேனிய இராணுவமானது மைய சக்திகளின் ஒரு தாக்குதலை தோற்கடித்தது. சில நிலப்பரப்புகளையும் கூட மீண்டும் கைப்பற்றியது.[166] அக்டோபர் புரட்சியானது போரில் இருந்து விலகும் நிலைக்கு உருசியாவை தள்ளியதற்கு பிறகு, உருமேனியா தனித்து விடப்பட்டது. 9 திசம்பர் 1917 அன்று உருமேனியா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.[167] இதற்கு பிறகு சீக்கிரமே, அருகில் இருந்த உருசிய நிலப்பரப்பான பெச்சராபியாவில் போல்செவிக்குகள் மற்றும் உருமேனிய தேசியவாதிகளுக்கு இடையில் சண்டை ஆரம்பித்தது. உருமேனிய தேசியவாதிகள் தங்கள் நாட்டினரிடமிருந்து இராணுவ உதவியை வேண்டினர். உருமேனிய நாட்டினரின் தலையீட்டுக்குப் பிறகு பெப்ரவரி 1918இல் சுதந்திரமான மால்தோவிய சனநாயக குடியரசானது உருவாக்கப்பட்டது. இக்குடியரசு உருமேனியாவுடன் இணைவதற்கு 27 மார்ச் அன்று வாக்களித்தது.[168]

மரசெசுதி யுத்தத்தின் போது உருமேனிய துருப்புகள், ஆண்டு 1917

7 மே 1918 அன்று மைய சக்திகளுடன் உருமேனியா புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. பெச்சராபியா மீதான உருமேனிய இறையாண்மையை அங்கீகரித்ததற்கு பதிலாக, கார்பேதிய மலைகளில் இருந்த கணவாய்களின் கட்டுப்பாட்டை ஆத்திரியா-அங்கேரிக்கு அளிப்பதற்கும், செருமனிக்கு எண்ணேய் சலுகைகளை கொடுப்பதற்கும் இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் இருந்தன.[169] பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும், உருமேனியாவின் முதலாம் பெர்டினான்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். அவர் நேச நாடுகளின் ஒரு வெற்றிக்காக நம்பிக்கை கொண்டிருந்தார். 10 நவம்பர் 1918 அன்று நேச நாடுகளுக்கு ஆதரவாக உருமேனியா போரில் மீண்டும் நுழைந்தது. 11 நவம்பர் 1918இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி புக்கரெஸ்ட் ஒப்பந்தமானது அலுவல் பூர்வமாக ஏற்பதற்கு உரியதல்ல என்று அறிவிக்கப்பட்டது.[170][o] 1914 மற்றும் 1918க்கு இடையில் ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தில் 4 - 6 இலட்சம் வரையிலான உருமேனியா இனத்தவர்கள் சேவையாற்றினர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1.50 இலட்சம் பேர் யுத்த களத்தில் கொல்லப்பட்டனர். தற்போதைய உருமேனிய எல்லைகளுக்குள் உட்பட்ட ஒட்டு மொத்த இராணுவ மற்றும் குடிமக்களின் இறப்பானது 7.48 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[172]

கிழக்குப் போர் முனை

[தொகு]

ஆரம்ப நடவடிக்கைகள்

[தொகு]
பேரரசர் இரண்டாம் நிக்கலாசு மற்றும் மாட்சி மிக்க கோமான் நிகோலயேவிச் ஆகியோர் பிரேமிசெல் நகரத்தை உருசியர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து காணப்படுகின்றனர். இந்த முற்றுகையே முதலாம் உலகப் போரின் மிக நீண்ட கால முற்றுகையாகும்.

பிரான்சுடன் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, போரின் ஆரம்பத்தில் உருசியாவின் திட்டமானது ஆத்திரிய கலீசியா மற்றும் கிழக்கு புருசியாவுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரே நேரத்தில் முன்னேறுவது ஆகும். கலீசியா மீதான உருசியர்களின் தாக்குதலானது பெரும்பாலும் வெற்றிகரமாக இருந்த போதிலும், படை வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வேகம் காரணமாக உருசியர்கள் பெரும்பாலான தங்களது கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாமல் இதை செய்தனர். மேற்குப் போர் முனையில் இருந்து செருமனி அதன் துருப்புகளை இடமாற்றுமாறு கட்டாயப்படுத்தும் உருசியர்களின் குறிக்கோளானது இந்த படையெடுப்புகளால் அடையப்பட்டது. எனினும், கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாத காரணங்களானவை தன்னென்பர்க்கு மற்றும் மசூரிய ஏரிகளில் முறையே ஆகத்து மற்றும் செப்டம்பர் 1914இல் உருசிய தோல்விகளுக்கு காரணமாயின. இதன் காரணமாக கிழக்கு பகுதியில் இருந்து கடுமையான இழப்புகளுடன் பின் வாங்கும் நிலைக்கு உருசியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.[173][174] 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் கலீசியாவில் இருந்தும் அவர்கள் பின் வாங்கினர். மே 1915இன் கோர்லிசு-தர்னோவு தாக்குதலானது உருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மீது படையெடுக்க மைய சக்திகளுக்கு வாய்ப்பளித்தது.[175] 5 ஆகத்து அன்று வார்சாவாவை இழந்த நிகழ்வானது உருசியர்கள் அவர்களது போலந்து நிலப்பரப்புகளை அப்படியே விட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளியது.

கிழக்கு கலீசியாவில் ஆத்திரியர்களுக்கு எதிராக வெற்றிகரமான சூன் 1916 புருசிலோவ் தாக்குதல் நடைபெற்ற போதும்,[176] இராணுவ பொருட்களின் பற்றாக்குறை, கடுமையான இழப்புகள் மற்றும் தலைமைத்துவ தோல்விகள் ஆகியவை உருசியர்கள் தங்களது வெற்றியில் இருந்து முழுவதுமாக மிகு நலன் பெறுவதிலிருந்து தடுத்தன. எனினும், போரின் மிக முக்கியமான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். வெர்துனில் இருந்து செருமானிய வீரர்களை இடமாற்றியது, இத்தாலியர்கள் மீது இருந்த ஆத்திரியா-அங்கேரிய அழுத்தத்தை விடுவித்தது மற்றும் 27 ஆகத்து அன்று நேச நாடுகளின் பக்கம் உருமேனியா போரில் நுழைவதற்கு இணங்க வைத்தது ஆகியவற்றுக்கு இது காரணமானது. ஆத்திரியா மற்றும் உருசியா ஆகியவற்றின் இரு இராணுவங்களுக்கும் இடரார்ந்த பலவீனத்தை ஏற்படுத்த இந்த தாக்குதல் காரணமானது. இவர்களது இழப்புக்களின் காரணமாக இரு இராணுவங்களின் தாக்குதல் ஆற்றலும் பெருமளவு பாதிக்கப்பட்டது. போர் மீதான நல்லெண்ணமும் உருசியாவில் படிப் படியாக தகர்க்கப்பட்டது. இறுதியாக இது உருசிய புரட்சிக்கு வழி வகுத்தது.[177]

போர் முனையில் ஜார் மன்னர் தொடர்ந்து இருந்ததால் உருசியாவில் மக்களிடையே அமைதியின்மை அதிகமானது. உருசிய போர் முனையானது பேரரசி அலெக்சாந்திராவால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இவரது அதிகரித்து வந்த ஆற்றலற்ற ஆட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை 1916இன் இறுதியில் பரவலான போராட்டங்களுக்கு வழி வகுத்தது.[சான்று தேவை]

மைய சக்திகளின் அமைதி முயற்சிகள்

[தொகு]
"அவர்கள் (நம்மை) கடந்து செல்லக் கூடாது" என்பது பொதுவாக வெர்துன் தற்காப்புடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு சொற்றொடர் ஆகும்.

12 திசம்பர் 1916 அன்று வெர்துன் யுத்தம் மற்றும் உருமேனியாவிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த ஒரு மிருகத் தனமான 10 மாதங்களுக்கு பிறகு நேச நாடுகளுடன் ஓர் அமைதியை ஏற்படுத்த செருமனி முயற்சித்தது.[178] எனினும், ஒரு "போலித் தனமான போர் சூழ்ச்சி" என எந்த வித யோசனையும் இன்றி இந்த முயற்சியானது நிராகரிக்கப்பட்டது.[178]

இதற்கு பிறகு சீக்கிரமே ஐக்கிய அமெரிக்க அதிபரான ஊட்ரோ வில்சன் ஓர் அமைதி ஏற்படுத்துபவராக தலையீடு செய்ய முயற்சித்தார். இரு பிரிவினரும் தங்களது கோரிக்கைகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு வேண்டினார். பிரித்தானிய பிரதமர் லாய்ட் ஜார்ஜின் போர் தொடர்பான அமைச்சரவையானது செருமனி அளிக்க வந்த வாய்ப்பை நேச நாடுகளுக்கு இடையில் பிரிவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி என கருதியது. ஆரம்ப சீற்றம் மற்றும் பெருமளவு விவாதத்திற்குப் பிறகு வில்சனின் குறிப்பை ஒரு தனி முயற்சி என எடுத்துக் கொண்டது. "நீர்மூழ்கி சீற்றங்களை" தொடர்ந்து செருமனிக்கு எதிராக போருக்குள் நுழையும் தருவாயில் ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது என்ற சமிக்ஞையை இது காட்டியது. வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு அளிக்க வேண்டிய ஒரு பதில் கொடுத்து நேச நாடுகள் விவாதித்த அதே நேரத்தில் கருத்துகளை "நேரடியாக பரிமாறிக் கொள்ளும்" ஒரு முயற்சிக்கு ஆதரவாக செருமானியர்கள் வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு மட்டம் தட்டும் முறையில் மறுப்பு தெரிவித்தனர். செருமானிய பதில் குறித்து அறிந்த நேச நாட்டு அரசாங்கங்களுக்கு 14 சனவரி அன்று வெளியிடப்பட்ட அவற்றின் பதிலில் தெளிவான கோரிக்கைகளை கேட்க சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பாதிப்புகளை மறு சீரமைப்பு செய்தல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இருந்து வெளியேறுதல், பிரான்சு, உருசியா மற்றும் உருமேனியா ஆகியவற்றுக்கு நிவாரண தொகை அளித்தல், ஒவ்வொரு தேச குடிமகன்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் கொள்கை ஆகியவற்றை கோரின.[179] இத்தாலியர்கள், இசுலாவியர்கள், உருமேனியர்கள், செக்கோஸ்லோவாக்கியர்கள் ஆகியோரை விடுவித்தல் மற்றும் ஒரு "சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த போலந்தை உருவாக்குதல்" ஆகியவற்றையும் இந்த கோரிக்கைகள் உள்ளடக்கி இருந்தன.[179] பாதுகாப்பு குறித்த கேள்வியை பொறுத்த வரையில் எதிர் கால போர்களை தடுக்கும் அல்லது தாக்கத்தை குறைக்கும் பொருளாதார தடைகளுடன் கூடிய உத்தரவாதங்களை எந்த ஓர் அமைதி உடன்படிக்கைக்கும் ஒரு நிபந்தனையாக நேச நாடுகள் கோரின.[180] இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட கோரிக்கைகளையும் செருமனி முன்வைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு நேச நாடுகள் செருமனியின் வாய்ப்பளிப்பை நிராகரித்தன.

1917; முதன்மை நிகழ்வுகளின் காலவரிசை

[தொகு]

மார்ச் முதல் நவம்பர் 1917: உருசியப் புரட்சி

[தொகு]

1916இன் இறுதியில் போரில் இழந்த ஒட்டு மொத்த உருசியர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 50 இலட்சமாக இருந்தது. இவர்களில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் அல்லது கைது செய்யப்பட்டும் இருந்தனர். முதன்மை நகரப் பகுதிகள் உணவு பற்றாக்குறைகள் மற்றும் விலைவாசியால் பாதிக்கப்பட்டிருந்தன. மார்ச் 1917இல் ஜார் மன்னர் நிக்கலாசு பெத்ரோகிராதில் நடந்த ஓர் அலை போன்ற வேலை நிறுத்தங்களை கட்டாயப்படுத்தி ஒடுக்குமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார். ஆனால் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துருப்புகள் மறுத்தன.[181] புரட்சியாளர்கள் பெத்ரோகிராது சோவியத் என்ற மன்றத்தை உருவாக்கினர். இடது சாரிகள் அரசை கைப்பற்றும் நிலை வரலாம் என்று அச்சமடைந்த உருசியாவின் துமா அவையானது பதவியிலிருந்து விலகுமாறு நிக்காலசை கட்டாயப்படுத்தியது. உருசிய இடைக்கால அரசை நிறுவியது. இடைக்கால அரசானது போரை தொடரும் உருசியாவின் ஒப்புதலை உறுதி செய்தது. எனினும், பெத்ரோகிராது சோவியத் மன்றமானது கலைக்கப்பட மறுத்தது. போட்டி அதிகார மையங்களை உருவாக்கியது. குழப்பம் மற்றும் அமளிக்கு காரணமானது. இதன் காரணமாக முன் கள வீரர்கள் மன உறுதி குலைந்து போரிட மறுக்கும் நிலை அதிகரித்தது.[182]

1917இன் கோடை காலத்தில் உருமேனியாவை போரில் இருந்து வெளியேற்றுவதற்காக மைய சக்திகள் அகத்து வான் மக்கென்சென் தலைமையில் உருமேனியாவில் ஒரு தாக்குதலை தொடங்கின. இதன் காரணமாக ஒயிதுசு, மரசுதி மற்றும் மரசெசுதி ஆகிய இடங்களில் யுத்தங்கள் நடைபெற்றன. இதில் மைய சக்திகளின் 10 இலட்சம் துருப்புகள் பங்கெடுத்தன. இந்த யுத்தங்கள் 22 சூலை முதல் 3 செப்டம்பர் வரை நடைபெற்றன. இறுதியாக உருமேனிய இராணுவமானது வெற்றி பெற்றது. துருப்புகளை இத்தாலியப் போர் முனைக்கு மாற்ற வேண்டியிருந்ததால் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட அகத்து வான் மக்கென்செனால் இயலவில்லை.[183]

ஜார் மன்னர் பதவி விலகியதற்கு பிறகு செருமானிய அரசாங்கத்தின் உதவியுடன் விளாதிமிர் லெனின் தொடருந்து மூலம் சுவிட்சர்லாந்தில் இருந்து உருசியாவுக்குள் 16 ஏப்ரல் 1917 அன்று அழைத்துச் செல்லப்பட்டார். அதிருப்தி மற்றும் மாகாண அரசாங்கத்தின் பலவீனங்கள் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சியின் பிரபலம் அதிகரிப்பதற்கு வழி வகுத்தது. இக்கட்சி போரை உடனடியாக நிறுத்த கோரியது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு திசம்பரில் செருமனியுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. முதலில் செருமானிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள போல்செவிக்குகள் மறுத்தனர். ஆனால் உக்ரைன் வழியாக செருமானிய துருப்புக்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி அணி வகுத்து வந்த போது புதிய அரசாங்கமானது பிரெசுது-லிதோவுசுக் ஒப்பந்தத்திற்கு 3 மார்ச் 1918 அன்று ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தமானது பின்லாந்து, எசுதோனியா, லாத்வியா, லித்துவேனியா, மற்றும் போலந்தின் பகுதிகள் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்புகளை மைய சக்திகளுக்கு அளித்தது.[184] இந்த மிகப் பெரிய செருமானிய வெற்றி நிகழ்ந்த போதும், செருமானியர்களின் இளவேனிற்கால தாக்குதல் தோல்வியில் முடிந்ததற்கு, பிடிக்கப்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தேவைப்பட்ட மனித வளமானது செருமானியர்களிடம் இல்லை என்பதும் ஒ