இயேசுவின் இறுதி இராவுணவு

இயேசுவின் இறுதி இராவுணவைச் சித்தரிக்கின்ற கலைப்படைப்புகள் பல நூற்றாண்டுகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கலைஞரான லியோனார்டோ டாவின்சி வரைந்த சுவர்ச் சித்திரம் இவண் காட்டப்படுகிறது. காலம்: 1490கள்; காப்பிடம்: மிலான், இத்தாலி[1]

இயேசுவின் இறுதி இராவுணவு (Last Supper) என்பது கிறித்தவ நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து எருசலேம் சென்று துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததற்கு முன்னால் தம் சீடர்களோடு சேர்ந்து இறுதியாக உணவு அருந்திய நிகழ்ச்சியைக் குறிக்கும்.[2]

இயேசு அருந்திய இறுதி இராவுணவை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் புனித வியாழன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.[3] மேலும், கிறித்தவர் ஆண்டு முழுவதும் கொண்டாடுகின்ற நற்கருணை, திருப்பலி நிகழ்ச்சிகளுக்கு விவிலிய அடிப்படை இந்நிகழ்ச்சியில் உள்ளது. எனவே நற்கருணைக் கொண்டாட்டத்தை “ஆண்டவரின் இராவுணவுக் கொண்டாட்டம்” என்று அழைப்பதும் வழக்கம்.[4]

இறுதி இராவுணவு பற்றி வரலாற்றில் காணப்படும் முதல் குறிப்புகள்

[தொகு]

கிறித்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற முதல் கொரிந்தியர் திருமடலில்தான் இயேசுவின் இறுதி இராவுணவு பற்றிய குறிப்பு முதன்முறையாகப் பதிவானது. மேலும், அம்மடலுக்குச் சற்றே பிற்காலத்தில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்களின்படி இறுதி இராவுணவு எப்போது நடந்தது என்பது இவ்வாறு குறிக்கப்படுகிறது: இயேசுவின் மண்ணுலக வாழ்வின் இறுதி வாரத்தில் அவர் வெற்றிவீரராக எருசலேம் நகருக்குள் நுழைகின்றார். தம் திருத்தூதர்களோடு பந்தி அமர்ந்து இராவுணவு உண்கின்றார். கைது செய்யப்பட்டு, துன்பங்கள் அனுபவிக்கிறார். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.[5][6] உணவு உண்ட பொழுது அவர் தம்மை யூதாசு இஸ்காரியோத்து காட்டிக்கொடுப்பார் என்பதை முன்னறிவித்தார். அடுத்த நாள் விடியும் முன்னர் தம்மைப் பேதுரு மும்முறை மறுதலிப்பார் என்பதையும் முன்னறிவித்தார்.[5][6]

இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்துதல்

[தொகு]

கொரிந்தியர் திருமுகமும், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளும் கூறுவதுபோல, இயேசு இராவுணவின்போது, அப்பத்தை எடுத்து, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்று கூறி நற்கருணை என்னும் அருட்சாதனத்தை ஏற்படுத்தினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.[5][6]

மேற்கூறிய நிகழ்ச்சியை யோவான் நற்செய்தி பதிவு செய்யவில்லாவிட்டாலும், அதில் வேறு சில தகவகல்கள் உள்ளன. அதாவது, இயேசு தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவி, “நீங்கள் ஒருவர் அன்பு செய்யுங்கள்” என்ற கட்டளையைக் கொடுக்கின்றார். அவர்களைப் பணியாளர்கள் என்று அழைக்காமல் “நண்பர்கள்” என்று அழைத்து, பிரியாவிடை உரை நிகழ்த்துகின்றார். இவ்வாறு, தாம் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவர்களை விட்டு நீங்காவிதத்தில் நிலைத்திருப்பதாக வாக்களிக்கின்றார்.[7][8]

நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு அடித்தளம்

[தொகு]

இயேசுவின் இராவுணவினை “நற்கருணைக் கொண்டாட்டத்தின் அடித்தளமாக” அறிஞர்கள் கருதுகின்றனர். இயேசுவின் சீடர்கள் அந்த இராவுணவின் நினைவையும், அதற்குமுன்னால் இயேசு தம்மோடு சேர்ந்து உணவருந்திய நேரங்களையும் கருத்தில் கொண்டு, வழிபாட்டின்போது நற்கருணைக் கொண்டாட்டத்தை மையமாகக் கருதியிருக்க வேண்டும்.[9][10]

வேறு சிலர் கூற்றுப்படி, முதல் நூற்றாண்டுக் கிறித்தவர்கள் தம் வழிபாட்டின்போது நற்கருணைக் கொண்டாட்டத்தை மையப்படுத்தியதோடு, அந்தப் பாணியைக் கண்முன் வைத்து இராவுணவு பற்றிய விவரங்களைப் பதிவு செய்தனர்.[10][11]

இறுதி இராவுணவு: சொல் விளக்கம்

[தொகு]

புதிய ஏற்பாட்டில் “இறுதி இராவுணவு” என்னும் சொற்றொடர் காணப்படவில்லை.[12][13] ஆயினும், இயேசு தம் இறப்புக்கு முன் தம் சீடரோடு அருந்திய விருந்தினை “இறுதி இராவுணவு” என்று அழைப்பது கிறித்தவ மரபு ஆயிற்று.[13]

புரட்டஸ்டாண்டு கிறித்தவர்கள் “இறுதி இராவுணவு” என்பதைக் குறிக்கும்போது, இயேசு பல தடவைகள் தம் சீடரோடு உணவு அருந்தியதையும் கருத்தில் கொண்டு “இறுதி” என்னும் அடைமொழி உள்ளதாகக் கூறுவர்.[14][15] மேலும், இயேசு பற்றி விவிலியம் தருகின்ற கூற்றுகளுக்கு ஏற்ப, “இறுதி இராவுணவு” இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் அதே நேரத்தில் இன்று கிறித்தவ சபையினர் கொண்டாடுகின்ற “நற்கருணை” வழிபாட்டையும் குறிப்பதாக ஏற்பர்.[16][17]

கிழக்கு மரபுவழித் திருச்சபை இயேசு அருந்திய இறுதி இராவுணவையும் நற்கருணைக் கொண்டாட்டத்தையும் குறிக்க “ஆன்மிக இராவுணவு” என்னும் சொல்தொடரைப் பயன்படுத்துகிறது.[18]

இறுதி இராவுணவைக் குறிக்கின்ற விவிலியத் தகவல்கள்

[தொகு]

இயேசு தம் சீடரோடு அமர்ந்து இறுதி இராவுணவு அருந்திய நிகழ்ச்சியை புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களும் பதிவு செய்துள்ளன. அப்பகுதிகள்: மத்தேயு 26:17-30; மாற்கு 14:12-26; லூக்கா 22:7-39; யோவான் 13:1-17:26 என்பவை ஆகும்.

இந்நிகழ்ச்சிதான் கிறித்தவ மரபில் “ஆண்டவரின் இறுதி இராவுணவு” என்ற பெயரைப் பெறலாயிற்று.[6] வழிபாட்டுக்காகக் கூடிய தொடக்க காலக் கிறித்தவர்கள் இயேசுவின் இறுதி இராவுணவு எவ்வாறு நிகழ்ந்தது என்னும் வரலாற்றுக்குத் தம் வழிபாட்டு நிகழ்ச்சியின் அடிப்படையில் வடிவம் கொடுத்ததோடு, அந்த வரலாற்று நிகழ்ச்சியின் நினைவாகத் தம் வழிபாட்டைச் சடங்குமுறையில் நிகழ்த்தினார்கள் என்றும் அறிஞர் விளக்குகின்றனர்.[19]

நற்செய்தி நூல்கள் எழுதப்படுவதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பவுல் கொரிந்தியருக்கு முதல் திருமுகம் எழுதியதாக அறிஞர் கூறுகின்றனர். அந்த மடலில் பவுல் இயேசுவின் இறுதி இராவுணவின் பொருள் என்னவென்பதை இறையியல் பார்வையில் விளக்குகின்றார். இயேசுவின் இறுதி இராவுணவின் பின்னணியையோ அந்நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பது பற்றிய தகவல்களோ அங்கு அதிகம் இல்லை.[5][6]

இறுதி இராவுணவு நடந்த பின்னணி

[தொகு]

இயேசு அருந்திய இராவுணவின் பின்னணி இது: தம் வாழ்வின் இறுதி வாரத்தின் தொடக்கத்தில் இயேசு எருசலேம் நகருக்குள் வெற்றி வீரராக நுழைகின்றார். பல நபர்களை சந்திக்கிறார். அவர்களுள் யூத சமயத் தலைவர்களும் அடங்குவர். இயேசு தம் சீடர்களோடு வார இறுதியில் உணவு உட்கொள்கின்றார். உணவு அருந்திய பின் இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார். கைது செய்யப்படுகிறார். விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பிடப்படுகிறார்.[5][6]

இராவுணவு தொடர்பானவை இவை: உணவுக்கான தயாரிப்புகளைச் செய்ய இயேசு தம் சீடர்களை முன்னே அனுப்புகிறார். யூதாசு தம்மைக் காட்டிக் கொடுப்பார் என்று இயேசு முன்னறிவிக்கிறார். அதுபோலவே, பேதுரு தம்மை மும்முறை மறுதலிப்பார் என்பதையும் இயேசு முன்னறிவிக்கிறார்.[5][6]

யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தல் பற்றிய முன்னறிவிப்பு

[தொகு]

இந்நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் மத்தேயு 26:24-25; மாற்கு 14:18-21; லூக்கா 22:21-23; யோவான் 13:21-30 ஆகிய பகுதிகளில் உள்ளன.[20]

ஒவ்வொரு திருத்தூதரும் தாம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகின்றனர். ஆனால் அங்கு இருந்தவர்களுள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் என்று இயேசு உறுதியாகச் சொல்கிறார். மேலும் அவ்வாறு காட்டிக்கொடுக்கும் ஆள் “பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்” என்று கூறியதோடு இயேசு, ”மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றும் கூறுகிறார் (மாற்கு 14:20-21).

இவ்வாறு இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவரின் பெயர் “யூதாசு இஸ்காரியோத்து” என்பதாம் என்ற குறிப்பு மத்தேயு 26:23-25 பகுதியிலும், யோவான் 13:26-27 பகுதியிலும் வருகிறது. யோவான் நற்செய்தியில் யூதாசின் பெயர் வராவிட்டாலும் வேறு தகவல் தரப்படுகிறது. ”இயேசு மறுமொழியாக, ’நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்’ எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ’நீ செய்யவிருப்பதை விரைவில் செய்’ என்றார்.” (யோவான் 13:26-27).[5][6]

நற்கருணையை ஏற்படுத்துதல்

[தொகு]

”அப்பம் பிட்கின்ற சடங்கு” (breaing of bread) என்று அழைக்கப்பட்ட நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக தொடக்க கால கிறித்தவர்கள் எருசலேமில் கூடுவது வழக்கமாக இருந்தது (எ.டு: திருத்தூதர் 2:46). புனித பவுலும் துரோவா என்னும் நகருக்குச் செல்லும் வழியில் அச்சடங்கை நிறைவேற்றினார் (திருத்தூதர் பணிகள் 20:7). இந்த “அப்பம் பிட்கின்ற சடங்கு” என்பது இயேசு நிறுவிய நற்கருணை நிகழ்ச்சியின் நினைவுக் கொண்டாட்டம் என்பது கிறித்தவ மரபு ஆகும்.[7]

இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி ஒத்தமை நற்செய்தி நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலும் அச்செய்தி உள்ளது. அந்நிகழ்ச்சியின்போது இயேசு பயன்படுத்திய சொற்கள் சிறிய மாற்றங்களோடு பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தியின் மரபை மத்தேயு நற்செய்தியும், பவுல் வழி வரும் மரபை லூக்கா நற்செய்தியும் எதிரொளிப்பதாக அறிஞர் கூறுகின்றனர்.[21] மேலும், லூக்கா 22:19ஆ-20 என்னும் பகுதி ஓர் இடைச்செருகலாக இருக்குமோ என்று சில அறிஞர் ஐயுறுகின்றனர்.[21][22]

ஒத்தமை நற்செய்திகள் மற்றும் கொரிந்தியர் முதல் திருமுகம் ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசுவின் இறுதி இராவுணவு பற்றிப் பேசுகின்ற பகுதிகள் கீழே ஒப்புப் பார்வைக்காகத் தரப்படுகின்றன. இடைச்செருகலாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற லூக்கா 22:19ஆ-20 பகுதி சாய்வெழுத்துகளில் தரப்படுகிறது.

மாற்கு 14:22-24 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ‘இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்’ என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ‘இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்...’ என்றார்.
மத்தேயு 26:26-28 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ‘இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்’ என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ‘இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்...’ என்றார்.
1 கொரிந்தியர் 11:23-25 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ‘இச்து உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ‘இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்’ என்றார்.
லூக்கா 22:19-20 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ‘இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை...’ என்றார்.

இயேசு தம் சீடர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பொழுது அவர்களோடு அப்பத்தையும் இரசத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டு நூலான எசாயாவில் வருகின்ற ஒரு பகுதியோடு இணைத்துக் காண்கின்றனர். 53:12 என்னும் அப்பகுதியில் கீழ்வருமாறு உள்ளது: ”அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.” இதில் குறிக்கப்படுகின்ற “இரத்தப் பலி” விடுதலைப் பயண நூலின் 24:8 பகுதியில் விளக்கப்படுகிறது: “அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து, ‘இவ்வனைத்து வார்த்தைகளுக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ’ என்றார்.”

இவ்வாறு, இயேசு மட்டுமே உடலளவில் துன்பங்கள் அனுபவித்து, அனைவரின் பாவங்களையும் சுமந்து பலியாக இறந்தார் என்றாலும், அவருடைய சீடர்களும் தம்மை அந்தப் பலியோடு ஒன்றுபடுத்திக் கொண்டு, உடன்-பலியாக மாறிட அழைக்கப்படுகிறார்கள் என்று பிரவுன் போன்ற அறிஞர் விளக்கம் தருகின்றனர்.[23]

நான்காம் நற்செய்தி நூலாகிய யோவான் நற்செய்தியில் பிற மூன்று நற்செய்தி நூல்களில் உள்ளது போன்றும், புனித பவுல் குறிப்பது போன்றும், இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இயேசு மக்களை நோக்கி, “நானே வாழ்வு தரும் அப்பம்” என்று கூறி விளக்கம் அளித்த நிகழ்ச்சி “நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சிக்கு” ஒப்பாகும் என்று அறிஞர் விளக்குகின்றனர். “எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்...விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே...” (யோவான் 6:54-58).[24]

பேதுரு தம்மை மறுதலிப்பார் என்று இயேசு முன்னறிவித்தல்

[தொகு]

இயேசுவின் தலைமைச் சீடரான பேதுரு தம்மை மறுதலிப்பார் என்று இயேசு முன்னறிவித்த நிகழ்ச்சி நான்கு நற்செய்தி நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது: மத்தேயு 26:33-35; மாற்கு 14:29-31; லூக்கா 22:33-34; யோவான் 13:36-38.

மத்தேயு 26:33-35: “’நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்’ என்றார். அதற்குப் பேதுரு அவரிடம் ‘எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்’ என்றார். இயேசு அவரிடம், ‘இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’ என்றார். பேதுரு அவரிடம், ‘நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்’ என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.”

இயேசு முன்னறிவித்தவாறே, அவர் கைது செய்யப்பட்ட பின், பேதுரு “இயேசுவை எனக்குத் தெரியாது” என்று கூறி மும்முறை மறுதலித்தார் என்று ஒத்தமை நற்செய்தி நூல்கள் கூறுகின்றன. மூன்றாம் முறை மறுதலித்ததும் சேவல் கூவிற்று. உடனே “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தார். வெளியே சென்று மனம்நொந்து அழுதார் (மத்தேயு 26:69-75).[25][26]

இயேசுவின் இறுதி இராவுணவு பற்றி யோவான் தரும் தனிச் செய்திகள்

[தொகு]
இயேசு தம்மை விட்டுப் பிரியாதிருந்த பதினொரு சீடர்களுக்கும் பிரியாவிடை உரை வழங்குகிறார். ஓவியம்: மரியாவின் மாட்சி (Maestà). ஓவியர்: தூச்சியோ (Duccio) (1308-1311)

இயேசு நிசான் மாதம் 15ஆம் நாள், புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் இறுதி இராவுணவை உண்டதாக ஒத்தமை நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) கூறுகின்றன (காண்க: மத்தேயு 26:12; மாற்கு 14:12; லூக்கா 22:7). ஆனால் யோவான் நற்செய்தியில், இயேசு இறுதி இராவுணவு அருந்தியது நிசான் மாதம் 14ஆம் நாள் என்று உள்ளது. அதாவது, யோவான் கூற்றுப்படி, இயேசு பாஸ்கா ஆட்டுக்குட்டி பலியாகக் கொல்லப்பட்ட நாளில் இறுதி இராவுணவை அருந்தினார் என்று வருகிறது. இந்த இரு தகவல்களை ஒன்றோடொன்று எவ்வாறு இசைவிப்பது என்பது குறித்து பல காலமாக விவாதம் நிகழ்ந்துள்ளது. யோவான் கூறும் கால வரிசை சரி என்றால், இயேசுவே உண்மையான பாஸ்கா ஆட்டுக்குட்டி என்பது இறையியல் அடிப்படையில் உண்மையாகும். அதுபோலவே, எல்லா நற்செய்தியாளர்கள் பார்வையிலும் இயேசு புதிய பாஸ்கா விழாவைத் தொடங்கினார் என்பதும் தெளிவாகும்.[27]

இறுதி இராவுணவை அருந்துமுன் இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்னும் செய்தியை யோவான் நற்செய்தி மட்டுமே தருகிறது (யோவான் 13)[28] அந்த நிகழ்ச்சியில், இயேசு தம் காலடிகளைக் கழுவுவது தமக்கு விருப்பம் இல்லை என்று பேதுரு தடுக்கப்பார்க்கிறார். ஆனால் இயேசு அவரை நோக்கி, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்று கூறிவிட்டதைத் தொடர்ந்து, பேதுரு, இயேசு தம் காலடிகளைக் கழுவ பேதுரு இசைகிறார் (யோவான் 13:5-8).

மேலும், யோவான் நற்செய்தியில், இராவுணவின்போது யூதாசு இஸ்காரியோத்து வெளியே சென்றதும், இயேசு எஞ்சிய பன்னிரு சீடரையும் பார்த்து, தாம் அவர்களோடு சிறிது காலமே இருக்கப்போவதாகக் கூறுகிறார் (யோவான் 13:33). பின்னர் அவர்களுக்குப் புதியதொரு கட்டளை கொடுக்கிறார்: “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்’ என்றார்” (யோவான் 13:34-35).[29][30] அதன் பிறகும் இயேசு அன்புக் கட்டளையை வலியுறுத்துகிறார்: ”நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” (யோவான் 15:12). “நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை” (யோவான் 15:17).[30]

யோவான் நற்செய்தியில் காணப்படும் இன்னொரு கூறு என்னவென்றால், இயேசு தம் சீடர்களுக்கு நீண்டதோர் உரையாற்றுகின்றார் (யோவான் 14-16). இந்த உரை ஒரு “பிரியாவிடை உரை” போல் உள்ளது. ஒரு குலத்தினரின் தந்தையோ, சமயத் தலைவரோ தாம் இறக்கும் தறுவாயில், தம்முடைய மக்களுக்கு/சீடர்களுக்கு அறிவுரைகள் கூறும் விதத்தில் அளிக்கின்ற சொற்பொழிவு “பிரியாவிடை உரை” ஆகும்.[31]

இந்த உரை “இயேசுவின் பிரியாவிடை உரை” என்று கிறித்தவ மரபில் கருதப்பட்டு வந்துள்ளது. இது இயேசு கிறிஸ்து என்பவர் யார் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் அவர் பற்றிய போதனையை எடுத்துரைப்பதற்கும் உகந்த ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. இதில் யோவான் 17:1-26 என்னும் பகுதி “இயேசுவின் பிரியாவிடை வேண்டுதல்” என்று அழைக்கப்படுகிறது. அதையே “பெரிய குருவான இயேசுவின் வேண்டுதல்” என்றும் அழைப்பர். இதில் இயேசு தம் சீடர் குழுவுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார்.[32] இந்த இறைவேண்டலில் இயேசு, தந்தை தம் மகன் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார். தந்தை தம் மகனிடம் ஒப்படைத்த பணியைத் தாம் நிறைவேற்றிவிட்டதாக இயேசு கூறுகிறார். அதே நேரத்தில் தம்முடைய சீடர்களைத் தீயோனின் வல்லமையினின்று காக்க வேண்டும் என்றும் தந்தையிடம் வேண்டுகிறார்.[32]

இயேசுவின் இறுதி இராவுணவு நிகழ்ந்த நாளும் இடமும்

[தொகு]

நாள்

[தொகு]

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த ஆண்டு கி.பி. 30-36 ஆகும் என்பது அறிஞர் கருத்து.[33][34][35] வானிலை ஆய்வுப் பின்னணியில் பார்த்தால் இயேசு கி.பி. 36ஆம் ஆண்டில் இறந்திருக்க முடியாது என்று கோலின் ஹம்ப்ரீஸ் (Colin Humphreys) என்னும் இயற்பியல் அறிஞர் நிறுவியுள்ளார்.[36] வேறு பல தகவல்களின் அடிப்படையில் அவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டது யூத நாட்காட்டியின்படி, நிசான் மாதம் 14ஆம் தேதி ஆகும் என்று காட்டுகிறார். இயேசு இறந்த ஆண்டில் நிசான் 14ஆம் தேதி ஏப்ரல் 33ஆம் நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தது. அந்த நாளில் பிற்பகலில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக ஹம்ப்ரீஸ் காட்டுகிறார்.[37]

இயேசுவின் இறுதி இராவுணவு. கிழக்கு மரபுவழித் திருச்சபை தொடர்பான சுவர் ஓவியம். காலம்: 16ஆம் நூற்றாண்டு. காப்பிடம்:க்ரெமிக்கோவ்ட்சி

நற்செய்தி நூல்கள் தருகின்ற சான்றுகளின்படி, இயேசு இறந்தது ஒரு வெள்ளிக் கிழமை. அவருடைய உடல் மறுநாளான சனிக்கிழமை (யூதரின் ஓய்வுநாள்) முழுவதும் கல்லறையிலேயே இருந்தது (காண்க: மாற்கு 15:42; 16:1-2). ஒத்தமை நற்செய்தி நூல்கள் இயேசு இறுதி இராவுணவு அருந்திய நாளாக “புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளைக்” காட்டுகின்றன (காண்க: மத்தேயு 26:17; மாற்கு 14:1-2; லூக்கா 22:1-15). இயேசு துன்புற்று இறப்பதற்கு முந்திய நாள் மாலையில் இராவுணவு நடைபெற்றதாக அவை சுட்டுகின்றன.[38]

மேற்கூறியது சரி என்றால், புளிப்பற்ற அப்ப விழா (நிசான் மாதம் 15ஆம் நாள்) இக்காலத்தில் வியாழக்கிழமை என்று அழைக்கப்படுகின்ற நாளில் கதிரவன் மறையும் வேளை தொடங்கி, வெள்ளிக் கிழமை கதிரவன் மறையும் வேளை வரை நீடித்தது என்று கொள்ள வேண்டும் (யூதர்கள் ஒரு நாளைக் கணக்கிடுவது நள்ளிரவிலிருந்து அல்ல, மாறாக, கதிரவன் மறையும் நேரத்திலிருந்து ஆகும்).

இது இவ்வாறிருக்க, யோவான் நற்செய்தியின்படி, இயேசு இறந்த நாளின் பிற்பகலுக்குப் பின் வந்த மாலைப் பொழுதில் புளிப்பற்ற விழா தொடங்கியது. இது சரி என்றால், இயேசு சிலுவையில் இறந்த வெள்ளிக் கிழமை (அதாவது, நிசான் மாதம் 14ஆம் நாள்) புளிப்பற்ற அப்ப விழாவுக்கான தயாரிப்பு நாளே தவிர, புளிப்பற்ற அப்ப விழா நாள் இன்னும் தொடங்கியிருக்கவில்லை.

எனவே, ஒத்தமை நற்செய்தி நூல்கள் தரும் தகவலுக்கும் யோவான் நற்செய்தி தரும் தகவலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு இசைவிப்பது என்பது குறித்து பல தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை பிரான்சிஸ் மெர்ஷ்மான் என்பவர் தொகுத்துத் தருகின்றார்.[39].

1950களில் ஆன்னி ஜோபர்ட் (Annie Jaubert) என்னும் அறிஞர் கீழ்வரும் கருத்துகளைத் தெரிவிக்கின்றார். அதாவது, இயேசு இறந்த ஆண்டு யூதர்கள் வழக்கமாகக் கணிக்கின்ற சந்திர நாட்காட்டி முறைப்படி, புளியாத அப்ப விழா வெள்ளிக் கிழமை மாலையில் தொடங்கியது எனலாம். அதே சமயத்தில் 365 நாட்கள் கொண்ட நாட்காட்டியும் வழக்கத்தில் இருந்தது. இத்தகைய நாட்காட்டியைக் கும்ரான் Qumran துறவியர் குழுவினர் பயன்படுத்தினர். அந்த நாட்காட்டியின்படி இயேசு புளியாத அப்ப விழாவைக் கொண்டாடி இருந்தால் அது அந்த நாட்காட்டியின் வழக்கப்படி ஒரு செவ்வாய்க் கிழமை மாலை நிகழ்ந்திருக்கும்.[40]

கோலின் ஹம்ப்ரீஸ் என்பவர் இன்னொரு விளக்கம் தருகிறார். அதன்படி, இயேசு எருசலேமில் வெற்றிவீரராக நுழைந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமையில் அல்லாமல் திங்கள் கிழமை நிகழ்ந்தது. இயேசு இராவுணவு அருந்தியது கி.பி. 33ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் நாள் புதன்கிழமை மாலை ஆகும்.[41][42]

மேற்கூறிய இரு அறிஞர்களும் கூறுவதுபோல, இயேசு இராவுணவை அருந்தியது செவ்வாய் மாலை (ஜோபெர்ட்) அல்லது புதன் மாலை (ஹம்ப்ரீஸ்) என்று கொண்டால், பிலாத்துவின் முன்னிலையில் இயேசுவின் விசாரணை நிகழ்ந்ததற்கும் இயேசு வெள்ளிக் கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததற்கும் இடையே போதிய நேரம் கிடைத்திருக்கும் எனலாம்.

இடம்

[தொகு]
இயேசு இறுதி இராவுணவு உண்ட இடமாக அடையாளம் காட்டப்படுகின்ற “மேலறை” இது. இது சீயோன் மலையில் உள்ளது. இங்குதான் மரியா, இயேசுவின் சீடர் ஆகியோர் கூடியிருந்த போது தூய ஆவி இறங்கிவந்தார் என்பது மரபு

பிற்காலத்தில் எழுந்த மரபுப்படி, இயேசு இறுதி இராவுணவு அருந்திய இடம் பழைய எருசலேம் நகருக்கு வெளியே அமைந்துள்ள சீயோன் மலையின் மீது உள்ள “மேலறை” என்னும் இடம் ஆகும். இது ஒத்தமை நற்செய்தி நூல்களில் வருகின்ற தகவல்களின்படி அடையாளம் காட்டப்படுகின்ற இடம் ஆகும். இயேசு தம் சீடருள் இருவரை அனுப்பி பாஸ்கா விருந்துண்ண இடம் ஏற்பாடு செய்ய “நகருக்கு” அனுப்புகிறார். தண்ணீர் சுமந்து வரும் ஓர் ஆளைச் சந்திப்பார்கள். அவருக்குப் பின்னே சென்று ஒரு வீட்டிற்குள் நுழைவார்கள். அங்கே வீட்டு உரிமையாளர் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் “மேல்மாடி பெரிய அறையைக்” காட்டுவார். அங்கே “பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு” செய்ய இயேசு கேட்டார் (காண்க: மாற்கு 14:13-15).

இந்த விவரங்கள் தவிர இயேசு இராவுணவு உண்ட இடம் பற்றிய நில அமைப்புத் தகவல்கள் வேறு எதுவும் புதிய ஏற்பாட்டில் இல்லை. அங்கே “நகரம்” என்று குறிப்பிடப்படுவது பெத்தானியா போன்ற எருசலேம் நகரத்தின் புறப்பகுதியாக இருக்கலாம். கிறித்தவ மரபு சுட்டிக்காட்டுகின்ற இராவுணவு இடம் அமைந்திருக்கும் நிலப்பகுதி அகழ்வாய்வுப்படி எஸ்ஸேனியர்கள் இருந்த இடமாகத் தெரிகிறது. இயேசுவுக்கும் எஸ்ஸேனிய துறவிகளுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று கூறுவோர் இதையும் கருத்தில் கொள்கிறார்கள்.(Kilgallen 265).

இன்று எருசலேம் நகரில் புனித மாற்கு சிரிய மரபுவழித் திருச்சபைக் கோவில் அமைந்திருக்கின்ற இடம் இயேசு இராவுணவு அருந்திய இடமாக இருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. அங்கே காணப்படுகின்ற ஒரு கிறித்தவக் கல்வெட்டிலிருந்து அங்கு பண்டைக்காலத்திலிருந்தே வணக்கம் செலுத்தப்பட்டு வருவது தெரிகிறது. இன்று பொதுவாக ஏற்கப்படுகின்ற இடத்தில் 12ஆம் நூற்றாண்டு சிலுவைப்போர் வீரர்கள் காலத்துக் கட்டடம் உள்ளது. புனித மாற்கு கோவில் இடம் அதைவிடப் பழமையானது. அங்கே இயேசு இராவுணவு உண்டதாகக் கருதப்படும் இடம் நில மட்டத்திற்குக் கீழே உள்ளது. அதன் நில மட்ட உயரமும் பொருத்தமானதாக உள்ளது. இன்றைய எருசலேம் நகர் இருக்கும் நில மட்டத்திலிருந்து பண்டைய எருசலேம் நில மட்டம் சுமார் குறைந்தது 12 அடியாவது கீழே இருந்தது என்பதைக் கருதும்போது அன்றைய ஒரு கட்டடத்தின் மேல் மாடியும் இன்றைய அளவைப்படி நில மட்டத்திற்குக் கீழேயே இருக்கும். மேலும், புனித மாற்கு கோவில் இடத்தில் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ள அன்னை மரியா திருவோவியம் ஒன்றுளது. அது புனித லூக்கா வரைந்தது என்பது மரபு.

பார்ஜில் பிக்ஸ்னர் என்பவர் கருத்துப்படி, இன்று சீயோன் மலையில் அமைந்துள்ள “மேலறை” என்னும் கட்டடத்திற்குக் கீழே இயேசு இராவுணவு உண்ட இடம் அமைந்திருந்தது.[43]

இயேசுவின் இராவுணவு பற்றிய இறையியல் விளக்கம்

[தொகு]
இயேசு தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவுகிறார். - மரியாவின் மாட்சி என்னும் ஓவியத்தின் ஒரு பகுதி. ஓவியர்: தூச்சியோ (1308-1311). யோவான் நற்செய்தி 13:8 கூறுவதுபோல, இயேசு தம் காலடிகளைக் கழுவ முன்வந்தது கண்டு பேதுரு வியப்படைகிறார்.

புனித அக்வீனோ தோமா என்னும் தலைசிறந்த இறையியலார் இயேசுவின் இராவுணவு பற்றிய இறையியலை வகுத்தளித்ததில் முன்னிலை வகிக்கிறார். மூவொரு கடவுள், தந்தை மகன் தூய ஆவி, மனிதர்களுக்கு போதனை வழங்குவது சொற்களால் மட்டுமன்று, தாம் புரிகின்ற செயல்கள் வழியாகவும் அவர்கள் மனிதருக்குக் கற்பிக்கின்றனர். இயேசு அருந்திய இராவுணவும் அவர் உயிர்துறந்த சிலுவையும் மனிதருக்குப் போதனைகளை வழங்குகின்றன. அக்குறியீடுகள் வழியாக கடவுளின் ஞானம் மிகு போதனையும் அறிவுரையும் உள்ளார்ந்த சக்தியாக நமக்கு வழங்கப்படுகின்றன.[44]

இயேசு தம் இறுதி இராவுணவின் வழியாக நமக்குக் கற்பிப்பவை தாழ்ச்சி மற்றும் சுய அர்ப்பணம் ஆகியவை. குருவும் ஆசிரியருமான அவர் தம்மையே ஓர் அடிமையின் நிலைக்குத் தாழ்த்திக்கொண்டு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய செயல் அவருடைய தாழ்ச்சிக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. அதுபோல, மனித குலத்தின் மீட்புக்காகத் தம்மையே கையளித்து, தம்மை உணவாகவும் பானமாகவும் கொடுத்து, சிலுவையில் உயிர்நீத்ததன் வழியாக இயேசு தம் சுய அர்ப்பணத்தின் முழுமையைக் காட்டுகிறார். இவ்வாறு, தம் சீடர்களின் வாழ்க்கை முறை அமைய வேண்டிய பாணியை அவரே தம் செயல்கள் மூலம் காட்டுகின்றார்.[44][45]

”இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்...உங்களை நான் நண்பர்கள் என்றேன்” - இவ்வாறு இயேசு தம்மோடு பந்தியில் அமர்ந்திருந்த சீடர்களை நோக்கிக் கூறினார் (காண்க: யோவான் 15:15). இச்சொற்களை விளக்கி உரைக்கும் அக்வீனோ தோமா பின்வருமாறு கூறுகிறார்: இறுதி இராவுணவின்போது இயேசுவோடு பந்தியமர்ந்து, அவர் அளித்த உணவில் பங்கேற்ற சீடர்களுக்கு இயேசு உரைத்த சொற்கள் இன்றைக்கும் பொருந்தும். இன்று நற்கருணை விருந்தில் பங்கேற்று, இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் அருந்துவோர் உண்மையிலேயே இயேசுவின் “நண்பர்களாக” மாறுகின்றார்கள்.[44][45][46] மேலும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்று நற்கருணை விருந்தினை உண்போரின் வாழ்வில் இயேசு உடன் இருப்பதாக வாக்களித்துள்ளார். அதுபோலவே, நற்கருணை அப்பத்திலும் இயேசுவின் உடனிருப்பு தொடர்கிறது.[47] இவ்வாறு, அக்வீனோ தோமா வழங்குகின்ற இறையியல் விளக்கம் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கையாகும்.

புரட்டஸ்தாந்து சீர்திருத்த வாதிகளுள் ஒருவரான ஜான் கால்வின் என்பவர் கருத்துப்படி, இயேசு இரண்டு அருட்சாதனங்களை மட்டுமே ஏற்படுத்தினார். அவை திருமுழுக்கு மற்றும் நற்கருணை (”ஆண்டவரின் இறுதி இராவுணவு”) என்பவை ஆகும். இயேசு அருந்திய இறுதி இராவுணவின் பொருள் என்னவென்பதை கால்வின் நுணுக்கமாக ஆய்ந்து அதைத் தம் இறையியலின் ஒரு மைய அம்சமாக அமைத்துள்ளார்.[48][49] மேலும், கால்வின் இயேசுவின் இறுதி இராவுணவு பற்றி ஒத்தமை நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளோடு யோவான் நற்செய்தித் தகவல்களையும் (யோவான் 6:35 - “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது”) இணைத்துப் பொருளுரைக்கின்றார்.[49]

இறுதி இராவுணவின்போது, இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்கு வழங்குவதற்கு முன்னால் இறைபுகழ் கூறி நன்றி செலுத்தினார் (காண்க: 1கொரிந்தியர் 11:24). அதுபோலவே ஆண்டவரின் விருந்தில் கலந்துகொள்ளச் செல்வோர் இறைவன் தமக்குச் செய்துவருகின்ற அனைத்து நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றி செலுத்த வேண்டும், மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும். - இவ்வாறு கால்வின் விளக்கம் தருகின்றார்.[49]

இயேசுவின் இறுதி இராவுணவு நினைவுகூரப்படும் விழாக்கள்

[தொகு]
”இயேசுவின் ஆன்மிக உணவு” (Mystical Supper). சீமோன் உஷாக்கோவ் எழுதிய திருவோவியம்

இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து இறுதி இராவுணவு உண்ட நிகழ்ச்சியையும் அப்போது நற்கருணை என்னும் அருட்சாதனத்தை நிறுவிய நிகழ்ச்சியையும் கிறித்தவர்கள் பெரிய வியாழன் என்னும் விழாவின்போது சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மேலும், கத்தோலிக்க திருச்சபை, செபமாலை என்னும் தொடர் மன்றாட்டின்போது ”ஒளியின் மறைபொருள்கள்” என்னும் பிரிவில் இயேசுவின் இறுதி இராவுணவையும் சேர்த்துள்ளது. அதுபோலவே, விவிலிய சிலுவைப் பாதை என்னும் தியான மன்றாட்டின் முதல் நிலையாக இயேசுவின் இறுதி இராவுணவு அமைகின்றது.

மேலும், பல கிறித்தவ சபைகள் இயேசுவின் இறுதி இராவுணவை இயேசு கொணர்ந்த புதிய உடன்படிக்கையின் தொடக்கமாகக் கருதுகின்றன. இத்தகைய புதியதோர் உடன்படிக்கை பற்றி எரேமியா இறைவாக்கினர் ஏற்கெனவே முன்னறிவித்தார் (காண்க: எரேமியா 31:31-34). இராவுணவின்போது இயேசுவும் சீடர்களும் “உண்டுகொண்டிருந்த பொழுது இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ‘இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்’ என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ‘இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்...’ என்றார்” (மாற்கு 14:22-24; மேலும், மத்தேஉய் 26:26-28; லூக்கா 22:19-20). இவ்வாறு, இயேசு எரேமியா போன்ற இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையை நிறைவுசெய்தார் என்று கிறித்தவர்கள் கொள்கின்றனர்.

இசுரயேல் மக்கள் கொண்டாடிய புளிப்பற்ற அப்ப விழாவும், பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியாக்கும் விழாவும் இயேசுவின் வருகையால் புதிய முறையில் நிறைவேறியதாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். “உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்” (1 கொரிந்தியர் 5:7). இயேசுவின் பலியில் பங்கேற்பதன் வழியாகப் புதிய உடன்படிக்கையில் பங்கேற்பதாக கிறித்தவர்கள் நம்புகின்றனர்.

நற்கருணை விருந்தில் பங்கேற்கின்ற நிகழ்ச்சி வரலாற்று வளர்ச்சி பெற்று, இன்று கத்தோலிக்கர் நடுவே திருப்பலி என்னும் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிறித்தவ விசுவாசிகள் கூடிவந்து, விவிலிய வாசகங்களுக்குச் செவிமடுத்து, நற்கருணை விருந்தில் பங்கேற்கின்றனர். பல கோவில்களில் ஒவ்வொரு நாளும் ஒரு முறை அல்லது பல முறை திருப்பலி நிகழ்வது வழக்கம்.

இதே திருப்பலிச் சடங்கு கீழை மரபுத் திருச்சபையால் “தெய்விக வழிபாடு” (Divine Liturgy) என்னும் பெயரில் நிகழ்கிறது. திருப்பலியிலும் தெய்விக வழிபாட்டிலும் கிறித்தவர்கள் நற்கருணை என்னும் அருட்சாதனத்தைக் கொண்டாடுகின்றனர். இது உண்மையில் ஒரு “நன்றிப் பலி”யாகச் சிறப்பிக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் இக்கொண்டாட்டம் εὐχαριστία (eucharistia) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு “நன்றி வழிபாடு” என்பதே பொருள்.

தொடக்க காலத் திருச்சபையில் “அன்பு விருந்து” (agape feast) என்றொரு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அன்பு என்னும் கருத்தை வெளிப்படுத்த கிரேக்க மொழியில் நான்கு வேறுபட்ட சொற்கள் பயன்படுகின்றன. அவை காமம், காதல், நட்பு, பாசம் என்று அறியப்படுகின்றன. கிறித்தவ வழக்கத்தில் “அன்பு” என்பது கடவுள் மனிதர் மட்டில் காட்டுகின்ற நிபந்தனையற்ற, தன்னலமற்ற உறவு குறிக்கப்படுகிறது. அவ்வாறே கிறித்தவர்களும் கைம்மாறு கருதாமல் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்து அன்பில் உள்ளடங்கும். பண்டைக்காலத் திருச்சபையில் “அன்பு விருந்து” ஞாயிறு தோறும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் உணவு கொண்டு வந்தனர். ஒரு பொது அறையில் அமர்ந்து அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து அந்த உணவை உண்டனர். “ஆண்டவரின் நாள்” என்று ஞாயிறு அழைக்கப்பட்டது. அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று இயேசு கிறிஸ்து சாவினின்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அப்போது கொண்டாடப்பட்டது. இயேசு எம்மாவு நகர் நோக்கிச் சென்ற சீடர்களோடு அமர்ந்து உணவு உண்டதையும், புனித தோமாவுக்கும் பிற சீடர்களுக்கும் காட்சியளித்ததையும், ஐம்பதாம் நாளில் தூய ஆவி இறங்கிவந்ததையும் நினைவுகூரும் விதத்தில் அந்த ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ந்தது.

இயேசுவின் இராவுணவுக்கு இணையான பிற கொண்டாட்டங்கள்

[தொகு]

இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து இறுதி இராவுணவை உட்கொண்டதற்கு ஒப்பான பிற கொண்டாட்டங்கள் உளவா என்று அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர். ரெய்மண்ட் பிரவுன் என்னும் அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்: யூதர்கள் கொண்டாடுகின்ற “பாஸ்கா செதெர்” (Passover Seder) என்னும் சடங்கின்போது புளியாத அப்பத்தை உண்பதற்கு முன்னால் முதல் இரசக் கிண்ணத்திலிருந்து பருகுவர். ஆனால் இயேசுவின் இராவுணவின்போது, அப்பம் உண்டபின்னர்தான் கிண்ணத்திலிருந்து இரசம் அருந்தப்பட்டது. எனவே, நிசான் மாதம் 15ஆம் நாள் நிகழ்கின்ற முதல் பாஸ்கா செதெர் உணவை இயேசுவின் இராவுணவு குறிக்கவில்லை எனலாம். மாறாக, புனித யோவான் தருகின்ற கால வரிசைப்படியான நிசான் 14ஆம் நாள் நிகழ்வாக அது இருக்கலாம். அல்லது, இயேசு வேண்டுமென்றே யூத வழக்கத்தை மாற்றியமைத்து அதற்குப் புதிய பொருள் கொடுத்திருக்கலாம்.

கீழை மரபுத் திருச்சபையின் கருத்துப்படி, இயேசுவின் இராவுணவு யூதர்களின் பாஸ்கா செதெர் அல்ல, மாறாக ஒரு தனித்தன்மை வாய்ந்த உணவருந்தும் நிகழ்ச்சி.[50]

பிரெஸ்பிட்டேரியன் சபையும் இயேசுவின் இராவுணவுக்கும் யூத பாஸ்கா செதெர் நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை என்றே கருதுகிறது.[51]

திருக்குரானின் ஐந்தாம் அதிகாரம் (Al-Ma'ida - (the table)) ஒரு விருந்து பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது (காண்க: Sura 5:113). அதாவது, அல்லா வானிலிருந்து ஈஷாவுக்கும் (இயேசு) இயேசுவின் சீடர்களுக்கும் உணவு வைக்கப்பட்ட ஒரு மேசையை இறங்கச் செய்கிறார். என்றாலும், இயேசு தாம் இறப்பதற்கு முன் சீடர்களோடு இராவுணவு அருந்தினார் என்ற தகவல் அங்கே இல்லை.[52]

இயேசுவின் இறுதி இராவுணவு வரலாற்று நிகழ்ச்சியா?

[தொகு]

இக்கேள்வியையும் அறிஞர்கள் எழுப்பியுள்ளனர். “ஆண்டவரின் இராவுணவு” என்ற பெயரில் தொடக்க காலத் திருச்சபை கொண்டாடிய நிகழ்ச்சி இயேசு அருந்திய இறுதி இராவுணவோடு தொடர்புடையது அல்லவென்றும், பிற இனத்தார் நடுவே இறந்தோர் நினைவாகக் கொண்டாடப்பட்ட விருந்தின் பாணியில் அமைந்ததே அது என்று சில அறிஞர் வாதாடியுள்ளனர்.[53] இக்கருத்தின்படி, இறுதி இராவுணவு என்னும் மரபு தூய பவுல் பிற இனத்தாரிடையே நிறுவிய திருச்சபைகளிடமிருந்து தோன்றியது, யூத கிறித்தவர்கள் நடுவில் தோன்றிய மரபு அன்று.[53]

லூக்கா நற்செய்தியில் மட்டும் தான் இயேசு, அப்பத்தையும் இரசத்தையும் சீடர்களுக்கு அளித்து, "இது என் உடல், இது என் இரத்தம்" என்று கூறி, "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றும் அறிவுறுத்துவதாக உள்ளது.[54] பார்ட் டி. ஏர்மான் என்பவர் கருத்துப்படி, இயேசு தம் நினைவாகச் செய்யும்படி கேட்டது சில பழைய பிரதிகளில் இல்லை என்பதால் பிற்கால இடைச் செருகலாக இருக்கலாம்.[55]

ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே இயேசு நற்கருணை அப்பத்திலும் இரசத்திலும் உடனிருக்கிறார் என்றும், அந்த உடனிருப்பு தொடர்ந்து நீடிப்பது என்றும் திருச்சபை நம்பி வந்துள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த தந்தையர்களான மறைச்சாட்டி யுஸ்தீன் மற்றும் இரனேயு என்பவர்கள் அளிக்கும் சான்று இதை உறுதிப்படுத்துகிறது.[56][57][58][59][60][61][62][63] இந்தப் போதனை திருச்சபையின் பல பொதுச் சங்கங்களாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.[64][65]

இயேசுவின் இராவுணவு பற்றிய கலைப்படைப்புகள்

[தொகு]

இயேசுவின் இராவுணவு கிறித்தவ வரலாற்றில் பல கலைஞர்களால் தம் படைப்புகள் வழியாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.[1] கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே இயேசுவின் இராவுணவு பற்றிய கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. உரோமை நகரின் சுரங்கக் கல்லறைகளில் இத்தகைய கலைப்படைப்புகள் உண்டு.

பிசான்சிய கலைஞர்களின் படைப்புகளில், விருந்து அருந்துவதற்காக சாய்ந்து இருப்பதுபோலன்றி, திருத்தூதர்கள் நற்கருணை பெற்றுக்கொள்வது போல் உள்ளனர்.

மறுமலர்ச்சிக் காலத்தில் பல கலைஞர்கள் இயேசுவின் இராவுணவு என்னும் பொருளைக் கலைப்படைப்புகளாக ஆக்கினர். குறிப்பாக இத்தாலியக் கலைஞர்களின் படைப்புகள் சிறப்பு வாய்ந்தன.[66]

இயேசுவின் இராவுணவு பற்றிய கலைப்படைப்புகள் மூன்று பாணியில் உள்ளன. அவை:

1) இயேசு தம் சீடர்களுள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் என்று கூறியதைத் தொடர்ந்து சீடர்கள் "நானா, நானா" என்று கேட்கின்ற பரபரப்பான பாணி

2) இயேசு நற்கருணையை ஏற்படுத்துகின்ற பாணி. இது அமைதி சூழ்ந்த ஒரு சூழமையில் அமைந்தது. ஒருவித ஆன்மிகச் சூழலை அங்கே காணலாம்.

3) இயேசு தம் சீடர்களுக்குப் பிரியாவிடை உரை நல்குகின்ற பாணி. இதில் பதினொரு திருத்தூதர்கள் மட்டுமே இடம் பெறுகின்றனர். யூதாசு இஸ்காரியோத்து உணவறையை விட்டு ஏற்கெனவே வெளியே போய்விட்டார். இயேசு தம் சீடர்களை விட்டுப் பிரிந்து செல்லும் வேளை நெருங்கிவிட்டதால் ஒரு வித சோக உணர்வு இங்கே காணப்படுகிறது.[1]

4) மேலும், இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்ற காட்சி போன்ற சித்திரங்களும் உண்டு.[67]

புகழ் பெற்ற கலைப்படைப்புகள்

[தொகு]

1) எல்லாவற்றிலும் மிகப்புகழ் பெற்ற கலைப்படைப்பு லியொனார்டோ டா வின்சி வரைந்த சுவர் ஓவியம் ஆகும். - இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி). இது உயர் மறுமலர்ச்சிக் காலத்தின் முதல் கலைப்படைப்பாகக் கருதப்படுகிறது. படத்தில் உள்ள நபர்கள், பின்னணி, இயற்கைக் காட்சி போன்றவற்றை மிகவும் பொருத்தமாக, அளவைமுறை விகிதத்தை மதித்து உருவாக்கப்பட்ட சிறப்புமிக்க ஓவியம் இது.[68]

2) டிண்டொரெட்டோ என்னும் கலைஞர் வரைந்த இராவுணவு ஓவியம். இதில் இயேசு, சீடர்கள் ஆகிய மையப் பாத்திரங்கள் தவிர, மேசையிலிருந்து உணவுத் தட்டுகளை எடுத்துச் செல்கின்ற பணியாளர்களும் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு - (Last Supper (Tintoretto).[69]

3) இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்) என்னும் படைப்பை உருவாக்கியவர் சால்வதோர் தாலி ஆவார். இதில் கிறித்தவ அருட்சாதனமான நற்கருணையை இயேசு நிறுவுவதை ஓவியர் புதுக் கலைப்பாணியில் உருவாக்கியுள்ளார்.[70]

மேலும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Last Supper
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Gospel figures in art by Stefano Zuffi 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89236-727-6 pages 254-259
  2. "Last Supper. The final meal of Christ with His Apostles on the night before the Crucifixion.", Cross, F. L., & Livingstone, E. A. (2005). The Oxford Dictionary of the Christian Church (3rd ed. rev.) (958). Oxford; New York: Oxford University Press.
  3. Gwyneth Windsor, John Hughes (21 November 1990). "Worship and Festivals". Heinemann. பார்க்கப்பட்ட நாள் 11 April 2009. On the Thursday, which is known as Maundy Thursday, Christians remember the Last Supper which Jesus had with His disciples. It was the Jewish Feast of the Passover, and the meal which they had together was the traditional Seder feast, eaten that evening by the Jews everywhere.
  4. Walter Hazen (1 September 2002). "Inside Christianity". Lorenz Educational Press. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 The Bible Knowledge Background Commentary by Craig A. Evans 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7814-3868-3 pages 465-477
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 The Encyclopedia of Christianity, Volume 4 by Erwin Fahlbusch, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2416-5 pages 52-56
  7. 7.0 7.1 Oxford Dictionary of the Christian Church / editors, F. L. Cross & E. A. Livingstone 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280290-3, article Eucharist
  8. The Gospel according to John by Colin G. Kruse 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2771-3 page 103
  9. இவ்வாறு புரோமிலி போன்ற அறிஞர்கள் விளக்குகின்றனர். காண்க: Bromiley, G. W. (1988; 2002). Vol. 3: The International Standard Bible Encyclopedia, Revised (164). Wm. B. Eerdmans.
  10. 10.0 10.1 The Oxford History of Christian Worship. Oxford University Press, USA. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513886-4
  11. Funk, Robert W. and the Jesus Seminar. The acts of Jesus: the search for the authentic deeds of Jesus. HarperSanFrancisco. 1998. Introduction, p. 1-40
  12. An Episcopal dictionary of the church by Donald S. Armentrout, Robert Boak Slocum 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89869-211-3 page 292
  13. 13.0 13.1 The Gospel according to Luke: introduction, translation, and notes, Volume 28, Part 1 by Joseph A. Fitzmyer 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-00515-6 page 1378
  14. The Companion to the Book of Common Worship by Peter C. Bower 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-50232-6 pages 115-116
  15. Liturgical year: the worship of God Presbyterian Church (U.S.A.) 1992 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-25350-9 page 37
  16. Humanists and Reformers: A History of the Renaissance and Reformation by Bard Thompson 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-6348-5 pages 493-494
  17. http://www.umc.org/site/c.lwL4KnN1LtH/b.2247711/k.C611/Communion_Overview.htm
  18. The Orthodox Church by John Anthony McGuckin 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-3731-0 pages 297 and 293
  19. The church according to the New Testament by Daniel J. Harrington 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58051-111-2 page 49
  20. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 page 182
  21. 21.0 21.1 "Lord's Supper, The" in New Bible Dictionary, 3rd edition; IVP, 1996; page 697
  22. Craig Blomberg (1997), Jesus and the Gospels, Apollos, p. 333
  23. (Brown et al. 626)
  24. Eerdmans Dictionary of the Bible 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5356-503-5 page 792
  25. Peter: apostle for the whole church by Pheme Perkins 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-567-08743-3 page 85
  26. The Gospel according to Matthew, Volume 1 by Johann Peter Lange 1865 Published by Charles Scribner Co, NY page 499
  27. Sanders, E. P. The historical figure of , 1993. p. 72
  28. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: Mayfield. 1985. "John" p. 302-310
  29. Encountering John: The Gospel in Historical, Literary, and Theological Perspective by Andreas J. Kostenberger 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801026032 pages 149-151
  30. 30.0 30.1 1, 2, and 3 John by Robert W. Yarbrough 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801026873 Baker Academic Press page 215
  31. Funk, Robert W., Roy W. Hoover, and the Jesus Seminar. The five gospels. HarperSanFrancisco. 1993.
  32. 32.0 32.1 The Gospel according to John by Herman Ridderbos 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-0453-2 The Farewell Prayer: pages 546-576
  33. Jesus & the Rise of Early Christianity: A History of New Testament Times by Paul Barnett 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-2699-8 pages 19-21
  34. Paul's early period: chronology, mission strategy, theology by Rainer Riesner 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-4166-7 page 19-27 (page 27 has a table of various scholarly estimates)
  35. The Cradle, the Cross, and the Crown: An Introduction to the New Testament by Andreas J. Köstenberger, L. Scott Kellum 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4365-3 pages 77-79
  36. Colin J. Humphreys, The Mystery of the Last Supper Cambridge University Press 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-73200-0, p. 63 [1]
  37. Humphreys 2011, p. 72
  38. Jacob Neusner, Judaism and Christianity in the First Century (Taylor and Francis 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-8174-4), vol. 3, part 1, p. 333
  39. இவண் by Francis Mershman in the 1912 Catholic Encyclopedia
  40. Pope Benedict XVI, The Dating of the Last Supper பரணிடப்பட்டது 2013-07-13 at the வந்தவழி இயந்திரம், extract from Jesus of Nazareth (Catholic Truth Society and Ignatius Press 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85082-707-5 பிழையான ISBN), pp. 106-115
  41. Humphreys 2011, pp. 164 and 168
  42. Staff Reporter (18 April 2011). "Last Supper was on Wednesday, not Thursday, challenges Cambridge professor Colin Humphreys". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 18 April 2011.
  43. Bargil Pixner, The Church of the Apostles found on Mount Zion, Biblical Archaeology Review 16.3 May/June 1990 [2]
  44. 44.0 44.1 44.2 Reading John with St. Thomas Aquinas by Michael Dauphinais, Matthew Levering 2005 ISBN page xix
  45. 45.0 45.1 A-Z of Thomas Aquinas by Joseph Peter Wawrykow 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-334-04012-4 pages 124-125
  46. The ethics of Aquinas by Stephen J. Pope 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87840-888-6 page 22
  47. The Westminster handbook to Thomas Aquinas by Joseph Peter Wawrykow 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-22469-1 page 124
  48. Reformed worship by Howard L. Rice, James C. Huffstutler 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-50147-8 pages 66-68
  49. 49.0 49.1 49.2 Calvin's Passion for the Church and the Holy Spirit by David S. Chen 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60647-346-7 pages 62-68
  50. Brown et al. page 626
  51. Liturgical year: the worship of God by Presbyterian Church (U.S.A.), 1992 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-25350-9 page 37
  52. Christology in dialogue with Muslims by Ivor Mark Beaumont 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-870345-46-0 page 145
  53. 53.0 53.1 Funk, Robert W. and the Jesus Seminar. The acts of Jesus: the search for the authentic deeds of Jesus. HarperSanFrancisco. 1998. "Mark," p. 51-161
  54. Vermes, Geza. The authentic gospel of Jesus. London, Penguin Books. 2004.
  55. Ehrman, Bart D.. Misquoting Jesus: The Story Behind Who Changed the Bible and Why. HarperCollins, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-073817-4
  56. The Martyr, Justin. "The First Apology".
  57. of Lyons, Irenaeus. "Against Heresies".
  58. of Alexandria, Clement. "The Paedagogus (Book I)".
  59. of Antioch, Ignatius. "The Epistle of Ignatius to the Smyrnaeans".
  60. of Antioch, Ignatius. "The Epistle of Ignatius to the Ephesians".
  61. of Antioch, Ignatius. "The Epistle of Ignatius to the Romans".
  62. Tertullian. "On the Resurrection of the Flesh".
  63. Augustine. "Exposition on Psalm 33 (mistakenly labelled 34)".
  64. "First Council of Nicæa (A.D. 325)".
  65. "Council of Ephesus (A.D. 431)".
  66. Vested angels: eucharistic allusions in early Netherlandish paintings by Maurice B. McNamee 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-0007-3 pages 22-32
  67. Gospel figures in art by Stefano Zuffi 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89236-727-6 pages 252
  68. Experiencing art around us by Thomas Buser 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-64114-6 pages 382-383
  69. Tintoretto: Tradition and Identity by Tom Nichols 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86189-120-2 page 234
  70. The mathematics of harmony by Alexey Stakhov, Scott Olsen 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-277-582-5 pages 177-178

மூலங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]