இராவணன்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
- மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)
இராவணன் | |
---|---|
18-ஆம் நூற்றாண்டின் இராவணன் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம் | |
அதிபதி | இலங்கை வேந்தன் |
இடம் | இலங்கை |
சகோதரன்/சகோதரி | கும்பகர்ணன், வீடணன், சூர்ப்பணகை |
குழந்தைகள் | இந்திரஜித், அதிகாயன், அட்சயகுமாரன், பிரகஸ்தன், திரிசிரன், [[நராந்தகன் - தேவாந்தகன்]] (இரட்டையர்) |
நூல்கள் | இராமாயணம் |
இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார்.[1] இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.[2]
பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும்,[3] சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு மரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.
சிவத் தலங்களில் சிவபெருமான் கயிலை மலை வாகனத்தில் வீதி உலா வருகையில், பத்துத் தலைகொண்ட இராவணன் கயிலை மலையை தாங்கும் வகையில் கயிலை மலை வாகனம் அமைந்திருக்கும்.
பெயர் விளக்கம்
இராவணன் - இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.[4] இராவணன் - இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.[5]
குடும்பம்
பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். இராவணன் - மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர் இராவணனின் மகன்கள் ஆவார்.
குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். குபேரனுக்காக விசுவகர்மா இலங்கையில் அமைத்த அழகிய நகரத்தையும், புஷ்பக விமானத்தையும் இராவணன் கைப்பற்றி ஆண்டார்.
கர-தூஷணர்கள் கொல்லப்படல்
வேள்வி தடைப்பட்டதால் விசுவாமித்திர முனிவர் அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை மற்றும் சுபாகு இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். மாரீசன் தப்பியோடினான்.
வனவாசத்தின் போது பஞ்சவடியில் இராமனைக் கண்ட சூர்ப்பனகை, அவரிடம் தன் காமத்தீயை அணைக்க வற்புறுத்தினார். சூர்ப்பநகையின் விருப்பத்திற்கு இணங்காத இராமர், அவளை இலக்குவனிடம் அனுப்பினார். பின் சீதையை சீண்ட முயன்ற சூர்ப்பனகையின் மூக்கை இலக்குமணன் தனது வாளால் அறுத்து அனுப்பினார்.[6]
சூர்ப்பனகையின் தூண்டுதலின் பேரில் இராம-இலக்குமணர்களைக் கொல்லப் படைகளுடன் வந்த இராவணனின் படைத்தலைவர்களான கரன் மற்றும் தூஷணன் எனும் சகோதர்களை, இராமர் அழித்துக் கொன்றார்.[7]
சீதையை இராவணன் கவர்தல்
இலங்கைக்கு சென்ற சூர்ப்பனகை, தன் அண்ணன் இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து, சீதையைக் கவர்ந்து அடையத் தூண்டினாள். அதன் பேரில் இராவணன் பஞ்சவடிக்கு சென்று, மாரீசனை தங்க மாயா மான் வடிவத்தில் அனுப்பி, இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். சீதை இலக்குமணன் கோட்டினை தாண்டி, துறவி வேடத்தில் வந்த இராவணனுக்கு உணவு தர வந்த போது, இராவணன் சீதையை வானத்தில் கடத்திச் சென்றான். இதைக் கண்ட ஜடாயு, சீதையை மீட்க இராவணனுடன் போராடினார். இறுதியில் இராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினார்.[8] தன் விருப்பத்திற்கு இணங்காத சீதையை, இராவனன் இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைத்தார்.
விபீடணன் வெளியேறல்
இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு விபீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதையை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். விபீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் விபீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.
கும்பகர்ணன், இந்திரஜித், இராவணன் மரணம்
இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகர்ணன் போரில் மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணனை அவருடைய மகன் இந்திரஜித் தேற்றினார். அதன் பின் மேகநாதன் என்ற இந்திரஜித்தும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தம்பியும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.
இராமனால் இராவணின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார். விபீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. இந்திரனின் தேர்ப் பாகன், மாதலி வழங்கிய அம்பைக் கொண்டு இராமன், இராவணன் மீது எய்து கொன்றார்.[9]
இலங்கையில் இராவணன்
இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கிய இராவணன், சீதையை இலங்கைக்குக் கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராவணனின் மனைவியான மண்டோதரி கற்பில் சிறந்த பெண். இவனது அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தார்கள்.
இலங்கையரைப் பொறுத்தமட்டில் இராவணன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் கருத்தே மேலோங்கியுள்ளது. இலங்கைவாழ் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவரிடையேயும் அதே கருத்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இராவணன் சீதையை கடத்தி, இராமனுக்கு எதிரானவனாக இராமாயணம் இருந்ததால், இராவணனை ஒரு தீயப்பாத்திரமாக பலர் வரையறை செய்கின்றனர்.
வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
சிவ பக்தனாக இராவணன்
இராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர்.[3] இலங்கை என்றும் அழியாமல் இருக்க ஆத்மலிங்கத்தை வேண்டி, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை இராவணனுக்கு தந்தார். ஆத்மலிங்கம் இருக்கும் இடத்தை யாரும் அழிக்க இயலாது. ஆத்மலிங்கம் இருந்தால் கொடிய இராவணனை யாராலும் வெல்ல முடியாது. இதை இலங்கையில் வைக்கும் வரை தரையில் எங்கும் வைக்கவேண்டாமென அறிவுரையும் கூறினார். ஒருமுறை தரையில் வைத்துவிட்டால், பின் அதை அசைக்க இயலாது. ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் இராவணனால் அந்த ஆத்மலிங்கத்தினை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டனர். அந்தி வேளையில் இராவணன் சிவபெருமானுக்கு பூஜை செய்வார். அதனால் ஆத்மலிங்கத்தை அங்கு சிறுவன் வேடத்தில் வந்த விநாயகரிடம் கொடுத்து பூஜை செய்தார். கைவலி பொறுக்க இயலாதது போல் நடித்து விநாயகப்பெருமான் ஆத்மலிங்கத்தை தரையில் வைத்தார். கோபமடைந்த இராவணன் சிறுவனைக் கொல்ல முயன்றான். அந்த சிறுவன் விநாயகப்பெருமான் என அறிந்துக்கொண்ட இராவணன், அவரை வணங்கி மன்னிப்பு கோரினார். விநாயகப்பெருமான் இராவணனின் பணிவவைக் கண்டு அவனுக்கு ஆசி அளித்தார்.
இராவணனின் திராவிட மீளுருவாக்கம்
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவருடைய நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவருடைய நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது .
இராவணனும் கோண்டு மக்களும்
மத்தியப் பிரதேசம், குசராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமாக பிஸ்ராக் என்ற ஊரைக் கருதுகின்றனர். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்தவர் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. இராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவராகக் கூறும் கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.[10]
இராவணன் கோயில்கள்
- இராவணன் கோவில் , பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா ,உத்தர பிரதேசம்,இந்தியா .
இது இராவணனின் பிறந்த ஊராக அறியபடுகின்றது .மேலும் ராவணன் இறந்த தினமான தசரா அன்று ராவணனுக்கு துக்கம் கடைபிடிக்கப் படுகின்றது .
- இராவணன் கோவில், இராவண கிராமம், விதிஷா மாவட்டம் ,மத்தியப் பிரதேசம், இந்தியா
இந்த கிராமத்திலுள்ள ஆயிரகணக்கான கன்னியா குப்ஜா பிராமண பிரிவை சார்ந்தவர்களால் இங்குள்ள இராவணன் கோவிலில் பூசைகளும் ,நெயவேத்தியங்களும் தினமும் அனுசரிக்கபடுகின்றன
- இராவணன் கோவில் ,கான்பூர் ,உத்தர பிரதேசம்,இந்தியா
சில நுற்றாண்டுகளுக்கு முன் சிவஷங்கர் என்னும் மன்னனால் இது கட்டப்பட்டது .இது வருடத்திற்கு ஒருமுறை தசரா தினமன்று திறக்க படுகின்றது .அன்று இராவணனின் நலனுக்காக சிறப்பு இங்கு பூஜைகளும் சடங்குகளும் செய்யபடுகின்றன.
- இராவணன் கோவில், ஜோத்பூர் /மண்டூர் ,குஜராத் .இந்தியா
தேவ் பிராமண இனத்தவர்களால் இந்த கோயிலில் பூஜை மேற்கொள்ளபடுகின்றன ,இவர்கள் தாங்கள் இராவணனின் வழிதோன்றல்கள் என கூறுகின்றனர் ,மேலும் இராவணன் இறந்த தினமான தசரா அன்று இராவணனுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு , அன்றைய தினம் பிண்டம் வைத்து தென்புலத்தார் கடனையும் தவறாமல் செய்து நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்
இலங்கையர் நம்பிக்கை
இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.
பத்து தலைகள்
பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் கலம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114332.htm கதைமாந்தர்
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=18975 ராவணனுக்கு பத்து தலை வந்தது எப்படி?
- ↑ 3.0 3.1 இராவணன் மேலது நீறு - திருவாலவாய் (பாடல் எண்:8)
- ↑ ஈன்றவர் உவந்து மக்கட்கு இராவணன் இவனாம் இலங்கைக் காண்டம் ;1 இராவணப் படலம், 4
- ↑ ஞா. தேவநேயப் பாவாணர், "தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை" - ('செந்தமிழ்ச் செல்வி'- சூலை 1931 ), இலக்கணக் கட்டுரைகள், பக் 5,
- ↑ 5. சூர்ப்பணகைப் படலம்
- ↑ 6. கரன் வதைப் படலம்
- ↑ 10. சடாயு உயிர் நீத்த படலம்
- ↑ 36. இராவணன் வதைப் படலம்
- ↑ ராஜி ராதா (15 மார்ச் 2018). "கோண்டுகளின் நாயகன் ராவணன்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)