திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பரம்பைக்குடி, திருஆலம்பொழில், திருவாலம்பொழில், திருவாம்பொழில்
பெயர்:அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாலம்பொழில், திருவாம்பொழில்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர்
தாயார்:ஞானாம்பிகை.
தல விருட்சம்:ஆல் (ஆல மரம் இப்போதில்லை)
தீர்த்தம்:காவிரி
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 10வது சிவத்தலமாகும். இக்கோயில் தலவிருட்சம் ஆலமரமாகும். இங்கு மூலவரே கபாலியாக, பைரவர் சொரூபமாக விளங்குகிறார். இதனை இத்தல அப்பர் பதிகம் உறுதி செய்கிறது. ‘கமலத்தோன்றலையரிந்த கபாலியை, உருவார்ந்த மலைமகளோர் பாகத்தானை, திருவாலம்பொழிலானைச் சிந்தி நெஞ்சே’ என்கிறார் அப்பர். அதாவது பிரம்மனின் தலையை கொய்த பைரவர், சொரூப ஈசன் கபாலி தான், பாகம்பிரியாளின் ஒருபாகம் கொண்டவனான அந்த ஈசன் தான் நம் திருவாலம்பொழில் திருத்தலத்தில் உறைகிறான் என்று பொருள். அவனை மனதுக்குள் சிந்தியுங்கள் என்கிறார் அப்பர். இத்தல ஈசனை காசிப மகரிஷி வழிபட்டு உள்ளார்.

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூரிலிருந்து திருவையாறுச் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் சென்று, திருக்கண்டியூரை அடைந்து, பின்னர் அங்கிருந்து மேற்கில் திருப்பூந்துருத்தி வழியாக 4 கிலோ மீட்டர் சென்றால் திருவாலம்பொழில் ஆலயத்தை அடையலாம்.

தல புராணம்

[தொகு]

தட்சனின் குமாரிகளில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களுக்கு அஷ்ட வசுக்கள் என்று பெயர். வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனு எனும் தெய்வீகப் பசுவை அஷ்டவசுக்கள் கவர்ந்து சென்றதால் வசிஷ்டர், பூலோகத்தில் சென்று மனிதர்களாகப் பிறக்குமாறு அஷ்ட வசுக்களுக்கு சாபமிட்டார். தங்கள் முழு சாபமும் நீங்கிட அஷ்ட வசுக்களும் இத்தல ஈசனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார்கள்.

இத்தலத்தின் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.

குடமுழுக்கு

[தொகு]

இக்கோயிலில் 4 சூன் 2017 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை பூசைகள் ஆரம்பிக்கப்பட்டன. [1]

வழிபாடு & தோஷ நிவர்த்திகள்

[தொகு]

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருஞானசம்பந்தரின் பல்லக்கினை அப்பர் பெருமான் தமது தோளில் சுமந்து வந்ததையும், பின்னர் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உபசாரத்தையும் போற்றி புகழும் வண்ணம் அடியவர்கள் இதனை தோள் கொடுத்த விழா என்னும் பெயரில் திருவிழா நடைபெறுகிறது.[2]

இத்தல ஈசனை பிரதோஷம், அஷ்டமி, திங்கட்கிழமைகளில் வழிபட்டு, கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட நினைத்த காரியங்கள் வெற்றியாகும். இத்தல அம்பாள் ஞானாம்பிகையை தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களின் மாலைப்பொழுதில் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம். இங்கு வரும் அடியவர்களை உபசரித்து அன்ன தானம் செய்து, தொடர்ந்து 3 பவுர்ணமி நாட்களில் வழிபட்டு வர குடும்பம் ஒற்றுமை பலப்படும். தொடர்ந்து 8 அமாவாசை நாட்களில், ஈசன், அம்பாள், பஞ்ச லிங்கங்களை வழிபாடு செய்து, ஆலமரத்தை வலம் வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]