சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

அமிர்தகடேசுவரர் கோயில்
அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேசுவரர் கோயில் இராஜகோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாகாணம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவு:சேலையூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:அமிர்தகடேசுவரர் (சிவன்)
தாயார்:அபிராமி அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை

அமிர்தகடேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்தைச் சேர்ந்த சேலையூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.[1] இத்தலத்தின் மூலவர் அமிர்தகடேஸ்வரர், தாயார் அபிராமி. இத்தலத்தில் அபிராமி அமிர்த புஷ்கரிணி என்ற தீர்த்தம் உள்ளது. மேலும் இத்தலத்தில் மாசி மகம் அன்று பதினெட்டு நதிகளிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு பூசை செய்து திருக்குளத்தில் கொட்டப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

இத்தலம் தாம்பரம், சேலையூரில் உள்ளது. தாம்பரம்-வேளச்சேரி முக்கிய சாலையில் கேம்ப்ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிட நடைப்பயணத்தில் கோயிலை அடையலாம்.

அஞ்சல் முகவரி: அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில், சேலையூர், சென்னை-600073.

கோயில் அமைப்பு

[தொகு]

மூலவர் அமிர்தகடேசுவரர் சுயம்பு லிங்கமாகவும் அபிராமி அம்மனும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். சுவாமி மற்றும் அம்மன் சன்னிதியை அடுத்து அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சோடச மகாலட்சுமி மகாமண்டபத்தில் பதினாறு தூண்களில் பதினாறு இலட்சுமியரின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. உட்சுற்றுச் சுவரில் நர்த்தன விநாயகர், மகா விஷ்ணு, பிரம்மா, தட்சிணா மூர்த்தி, துர்க்கை சன்னிதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், நால்வர் (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்), சீனிவாசன் -பத்மாவதி தாயார், வள்ளி-தேவானை உடனுறை சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், கால பைரவர், சூரியர், சந்திரன், ஐயப்பன், ஆஞ்சநேயர் மற்றும் ஆதிபராசக்தி ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனி சன்னிதிகள் இங்குள்ளன. இக்கோயிலின் இராஜகோபுரம் மூன்றுநிலை கொண்டுள்ளது.

மூலவர் அமிர்தகடேசுவரர்
அம்மன்/தாயார் அபிராமி அம்மன்
தல விருட்சம்
தீர்த்தம் அமிர்த புஷ்கரிணி

பதினாறு இலட்சுமிகள்

[தொகு]

சோடச மகாலட்சுமி மகாமண்டபத்தின் பதினாறு தூண்களில் வடிக்கப்பட்டுள்ள பதினாறு இலட்சுமியரின் பெயர்கள்:

  1. சந்தானலட்சுமி
  2. விஜயலட்சுமி
  3. வீரலட்சுமி
  4. கீர்த்திலட்சுமி
  5. ஞானலட்சுமி
  6. சௌபாக்கியலட்சுமி
  7. புஷ்பலட்சுமி
  8. சௌந்தர்யலட்சுமி
  9. சக்திலட்சுமி
  10. வராகிலட்சுமி
  11. சாம்ராஜ்யலட்சுமி
  12. ஆரோக்கியலட்சுமி
  13. சியாமளலட்சுமி
  14. மேதாலட்சுமி
  15. வித்யாலட்சுமி
  16. சாந்திலட்சுமி

தல வரலாறு

[தொகு]
நுழைவாயிலையடுத்து பதிக்கப்பட்டுள்ள தகவற்பலகை

ஒரு காலத்தில் மண்மேடாக இருந்த இந்த இடத்தில் மண்ணை அகற்றும் போது அமிர்தகடேசுவரர் மூலச்சிலையும்அருகிலுள்ள முத்தாலம்மன் கோயிலில் கிடைத்த சில சிலைகளில் அபிராமி அம்மன் சிலையும் கிடைத்தன. சிலைகள் கிடைத்ததால் இவ்வூர் சிலையூர் எனப் பெயர்பெற்று நாளடைவில் அப்பெயர் சேலையூர் என மாறிவிட்டது. 1972 ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்குளம்

[தொகு]
அமிர்த புஷ்கரணி
அமிர்த புஷ்கரணியிலுள்ள கங்கை நதிச் சிலை

கோயிலுக்குள்ளாக அமிர்தபுஷ்கரிணி (நாதன் திருக்குளம்) செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அதன் மூன்று உட்சுற்றுச் சுவர்களில் கங்கை முதல் பொருநை வரையான 18 நதிகளின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அந்தந்த சிலைகளுக்கருகில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. சிலைகளிலிருந்து நீர் கொட்டுவதுபோல அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று இந்த 18 நதிகளிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு இச்சிலைகளுக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றபின் அந்நதிநீர்கள் குளத்தில் ஊற்றப்படுகின்றன.

பதினெட்டு நதிகள்:

  1. கங்கை
  2. யமுனை
  3. சிந்து
  4. பிரம்மபுத்திரை
  5. கோதாவரி
  6. சூரியை
  7. சந்திரை
  8. கிருஷ்ணை
  9. நர்மதை
  10. தபதி
  11. துங்கபத்திரை
  12. காவேரி
  13. பாலாறு
  14. வைகை
  15. பொருநை
  16. பம்பை

சிறப்பு

[தொகு]

ஆண்டுதோறும் மாசிமகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் நீர் கொணரப்பட்டு, அத் தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் திருக்குளத்தில் கலக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும் தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடிக் கடைசியில் 18 நதி நீரும் கலந்துள்ள திருக்குளத்தில் நீராடி அமிர்தகடேசுவரரையும் அபிராமி அம்மனையும் வணங்குவர். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி போன்று இங்கும் நடைபெறுகிறது. தை அமாவாசையன்று, மாலை அபிராமி அந்தாதி பாடப்படுகிறது. இங்குள்ள அம்மன் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தது போல இருப்பது ஒரு சிறப்பு. அம்மனை ஒருதரம் சுற்றிவந்தால் ஷோடச மண்டபத்தில் அமைந்திருக்கும் பதினாறு லட்சுமிகளை வலம் வரும் பலனுண்டு. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சரபேசுவரருக்குச் சிறப்பு பூசை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]