இந்திய அரசுச் சட்டம், 1935
நீளமான தலைப்பு | An Act to make further provision for the Government of India. |
---|---|
அதிகாரம் | 1935 c. 2 |
கட்டுப்படுத்தும் நிலப்பகுதி |
|
நாட்கள் | |
அரச ஒப்புமை | 2 ஆகத்து 1935 |
அமலாக்கம் | 1 ஏப்பிரல் 1937 |
விலக்கல் நாள் | 26 சனவரி 1950 (இந்தியா) 23 மார்ச்சு 1956 (பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம்) 19 நவம்பர் 1998 (ஐக்கிய இராச்சியம்) |
மற்ற சட்டங்கள் | |
விலக்கும் சட்டம் | Statute Law (Repeals) Act 1998 (ஐக்கிய இராச்சியம்) |
நிலை: விலக்கிக் கொள்ளப்பட்டது | |
Text of statute as originally enacted | |
Revised text of statute as amended |
இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act 1935) என்பது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக ஐக்கிய நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு இந்தியர்களுக்கு தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் கழித்து இவ்வாட்சி முறையினை ஆய்வு செய்த சைமன் குழு இந்தியர்களுக்கு மேலும் பல ஆட்சி உரிமைகளை அளிக்கப் பரிந்துரை செய்தது. 1931-32ல் இது குறித்து பிரித்தானிய அரசுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையென்றாலும், பிரித்தானிய அரசு, அடுத்த கட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 1935 அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:
- இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தியர்களின் தன்னாட்சி உரிமைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் மேலாட்சி அங்கீகாரம் தரப்படவில்லை
- பிரித்தானிய இந்தியாவும், மன்னர் அரசுகள் (சம்ஸ்தானங்கள்) ஆகியவை இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சி”யினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது
- தேர்தல்களில் வாக்குரிமை பெறுவதற்கான சொத்துடமைத் தகுதிகள் தளர்த்தப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமானது
- இந்தியாவின் மாகாணங்கள் புனரமைக்கப்பட்டன. பர்மா மற்றும் ஏடன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. சிந்த் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக்கபபட்டது. பீகார் மற்றும் ஒரிசா புதிய மாகாணங்களாக உருவாக்கப்பட்டன.
- மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு அவற்றில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
- ஆட்சிப் பொறுப்பில் மேலும் பல துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மாநில ஆளுனருக்கும், வைசுராயுக்கும் தடுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டது.
- தேசிய அளவில் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இப்புதிய சட்டத்தின் அடிப்படையில் 1937ல் தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுகள் அமைந்தன. ஆனால் மன்னர் அரசுகளின் எதிர்ப்பாலும், இந்திய தேசிய காங்கிரசு-முசுலிம் லீக் வேறுபாடுகளாலும் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு உருவாக்கம் நிறைவேறவில்லை.